ஆகஸ்ட் 25

அர்ச். லூயிஸ் - அரசர் (கி.பி. 1270) 

ஞானப்பிரகாசியார் என்றழைக்கப்படும் லூயிஸ் பிரான்ஸ் தேசத்து அரசர்களில் சிறந்த அரசராக ஜோதியுள்ள சுக்கிரனைப் போல் பிரகாசித்தார். 

இவருடைய பக்தியுள்ள தாயார் இவரை தெய்வ பயத்திலும் விசுவாசத்திலும் வளர்த்து, அவர் ஒரு சாவான பாவத்தை கட்டிக்கொள்வதை தான் பார்ப்பதை விட அவர் சாவதைப் பார்க்க விரும்புவதாகக் கூறுவாள். 

இவர் தேவதாயார் மீது அதிக பக்தி வைத்து சனிக்கிழமைகளில் ஒருசந்தி பிடிப்பார். நாள்தோறும் இரண்டு திவ்விய பலிப்பூசைகளைக் கண்டு குருக்கள் ஜெபிக்கும் கட்டளை ஜெபங்களை தாமும் இரு குருமாருடன் ஜெபிப்பார். தம்மை அடக்கி ஒறுத்து முள் ஒட்டியானத்தைத் தரிப்பார். 

தேசத்திற்கு அவசியமான சட்டங்களை ஏற்படுத்தி, ஒருவனும் அநியாய வட்டி வாங்கக் கூடாதென்றும், தேவதூஷணம் கூறக்கூடாதென்றும் கட்டளையிட்டு, அவற்றை மீறினவர்களை நீதியுடன் தண்டிப்பார். ஏழை எளியவர்கள் மீதும், விதவைகள் அநாதைப் பிள்ளைகள் மீதும், இரக்கம் காட்டி அவர்களைப் பாதுகாப்பார். 

இந்த அர்ச்சியசிஷ்ட இராஜா பதித மதத்தைத் தமது தேசத்தினின்று விரட்டி, பாப்பரசருக்கு விரோதமாக இருந்த அரசர்களைச் சமாதானப்படுத்தினார். சத்திய வேதத்தைப் பரப்புவதற்காக சர்வ பிரயாசையும் பட்டு அநேக தேவாலயங்களையும் மடங்களையும் கட்டுவித்தார். 

துலுக்கருடைய ஆளுகைக்குட்பட்டிருந்த திருத்தலங்களை மீட்கும்படி படையெடுத்தபோது இவருக்கு ஜெயமுண்டானபோதிலும், இவர் விரோதிகள் கையில் அகப்பட்டு மீட்கப்பட்டார். 

மறுபடியும் படையெடுத்த காலத்தில் இவருக்கு விஷகாய்ச்சல் உண்டாகி, தேவதிரவிய அநுமானங்களை மகா பக்தி விசுவாசத்துடன் பெற்று, அர்ச்சியசிஷ்டவராய் மரித்து, உலக முடிக்குப் பதிலாக மோட்ச முடியைப் பெறப் பாக்கியம் பெற்றார்.

யோசனை 

பெற்றோரே, உங்கள் பிள்ளைகளுக்கு உணவு, உடை அளிப்பதுடன் அவர்கள் பாவ வழியை விட்டு புண்ணிய வழியில் நடப்பதற்கு நல்ல புத்தியாகிய ஞானப் பாலை அவர்களுக்கு ஊட்டக்கடவீர்களாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். கிரகோரி, ம. 
அர்ச். எப்பா , க.