ஜுலை 25

அர்ச். பெரிய யாகப்பர்.

அப்போஸ்தலர் ஜேம்ஸ் என்று அழைக்கப்படும் யாகப்பர், அர்ச். அருளப்பருடைய சகோதரர். நமது கர்த்தர் அவ்விருவரையும் அழைத்த மாத்திரத்தில் அவர்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள். 

சேசுநாதர் ஜாய்ருஸ் வீட்டிற்குப் போய் மரித்தவளை உயிர்ப்பித்தபோதும், தபோர் மலையில் மறுரூபமானபோதும், பூங்காவனத்தில் இரத்த வியர்வை வியர்த்தபோதும் அருளப்பர் இராயப்பரோடு யாகப்பரையும் உடன் அழைத்துக்கொண்டு போனார். 

யாகப்பரும் அருளப்பரும் திருச்சபையில் மகா ஊக்கத்துடன் உழைத்ததினால் இடியின் மக்களென்று நமது கர்த்தரால் அழைக்கப்பட்டார்கள். 

இவ்விருவருடைய தாயார் ஒரு நாள் தன் இரு பிள்ளைகளையும் கர்த்தரிடம் அழைத்துக்கொண்டு போய்: ஆண்டவரே இவ்விருவரையும் உமது இராஜ்ஜியத்தில் வலது பக்கத்தில் ஒருவனையும் இடது பக்கத்தில் ஒருவனையும் உட்காரச் செய்யும் என்றாள். அதற்குக் கர்த்தர் இரு சகோதரர்களையும் நோக்கி: என் பாடுகளின் பாத்திரத்தை பானஞ்செய்ய உங்களால் கூடுமோ? என்றார். 

யாகப்பர் பல இடங்களில் வேதம் போதித்து ஸ்பெயின் தேசம் சென்று, அவ்விடத்தில் புதுமைகளாலும் பிரசங்கங்களாலும் அநேக பிரஜைகளை சத்திய வேதத்தில் சேர்த்துக்கொண்டார். 

இவருக்கு தேவமாதா தோன்றி தமது பேரால் அவ்விடத்தில் ஒரு தேவாலயம் கட்டும்படி கூறவே, அவரும் ஒரு கோவிலைக் கட்டினார். அது இந்நாள் வரையிலும் திருயாத்திரை ஸ்தலமாயிருந்து வருகிறது. 

யாகப்பர் வேதத்தினிமித்தம் ஜெருசலேமில் கொல்லப்பட்டு, அவருடைய சரீரம் ஸ்பெயின் தேசத்திற்கு கொண்டுபோகப்பட்டு, அவ்விடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அதில் நடக்கும் அநேக புதுமைகளால் அது பெயர்பெற்ற திருயாத்திரை ஸ்தலமாயிற்று. 

கிறீஸ்தவர்கள் சரசேனியரோடு போரிட்ட போது அர்ச். யாகப்பர் குதிரையில் ஏறின பிரகாரம் தோன்றி சத்துருக்களை முறியடித்தார்.

யோசனை 

கசப்பான பாத்திரமாகிய துன்பதுரிதம் முதலியவைகளைப் பொறுமை யுடன் சகிப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். கிறிஸ்டோபர், வே. 
அர்ச். தீயாவும் துணை ., வே.
அர்ச். குக்குபாஸ், வே. 
அர்ச். மாலக், மே.