ஏப்ரல் 25

அர்ச். மாற்கு. சுவிசேஷகர் 

யூத ஜாதியாரான மாற்கு, அப்போஸ்தலரான அர்ச். இராயப்பரால் ஞானஸ்நானம் பெற்று அவருக்குச் சீஷனானார்.

அப்போஸ்தலருடன் மாற்கு உரோமையில் தங்கி அவருக்கு உதவிபுரிந்து வந்தார். உரோமையர் கேட்டுக் கொண்டதின் பேரில், மாற்கு சுவிசேஷத்தை எழுதினார். இவர் சேசுநாதரைப் பார்க்காவிடினும் அர்ச். இராயப்பர் வாய்மொழியாய்ச் சொன்னதைக் கேட்டுத் தமது சுவிசேஷத்தை எழுதினார்.

மேலும் இராயப்பரின் அங்கீகாரத்தினால் அவர் எழுதிய சுவிசேஷம் விசுவாசிகள் கூடும் சபைகளில் வாசிக்கப்பட்டது.

அக்காலத்தில் உரோமைக்குப் பிறகு அலெக்சாந்திரியா நகரம் இரண்டாம் நகர மானதால் அப்பட்டணத்திற்கு மாற்கு மேற்றிராணியாராக அர்ச். இராயப்பரால் அனுப்பப்பட்டார்.

இவ்விடத்தில் மாற்கு பட்ட பிரயாசையாலும் செய்த பிரசங் கத்தாலும், புதுமைகளாலும் கணக்கில்லாத அஞ்ஞானிகளும் யூதரும் திருச் சபையில் சேர்ந்தார்கள்.

இவ்வளவு திரளான மக்கள் கிறிஸ்தவ வேதத்தைப் பின்பற்றியதைக் கண்ட அஞ்ஞானிகள் கோப வெறிகொண்டு, திவ்விய பூசை பலியை ஒப்புக் கொடுத்துக்கொண்டிருந்த அவரைப் பிடித்து அவருடைய கால் களைப் பெருங் கயிற்றால் கட்டி கல்லும் முள்ளும் நிறைந்த இடங்களில் ஒரு நாள் முழுவதும் நிஷ்டூரமாய் இழுத்தபோது, அவருடைய சரீரத்தின் சதைப் பஞ்சு பஞ்சாய் கிழிக்கப்பட்டு, அவர் இழுக்கப்பட்ட இடமெல்லாம் அவருடைய இரத்தத்தால் கறைபடுத்தப்பட்டது.

அப்போது அர்ச். மாற்கு தமது சத்துராதி களுக்காக வேண்டிக்கொண்டு உயிர் விட்டு மோட்ச முடி பெற்றார்.

யோசனை  

நாம் பரிசுத்த சுவிசேஷத்தை அடிக்கடி வாசித்து அதன்படி வாழ்ந்து வருவோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். மாக்கல், து.
அர்ச். அணியானுஸ், மே.
அர்ச். பெபாடியுஸ், து.
அர்ச். ஈவியா, மே.
அர்ச். கெபியுஸ், மே.