ஏப்ரல் 26

அர்ச். கிளேதுஸும் மார்சேல்லினுஸும். பாப்பானவர், வேதசாட்சி (கி.பி. 79) 

கிளேதுஸ் உத்தம் கோத்திரத்தினின்று பிறந்து, அர்ச். இராயப்பருடைய புத்திமதியைக் கேட்டு அவரால் ஞானஸ்நானம் பெற்று சத்திய வேத கடமை களைப் பிரமாணிக்கமாய் அனுசரித்து வந்தார்.

இவருடைய பக்தியையும் புத்தியையும் கண்ட அர்ச். இராயப்பர் இவரை மேற்றிராணியாராக அபிஷேகம் செய்து, அவரைத் தமது உதவி மேற்றிராணிமாருள் ஒருவராக நியமித்தார்.

அர்ச். இராயப்பருக்குப்பின் பாப்புவாயிருந்த லீனுஸ் வேதசாட்சியாய் மரித்தபின் கிளேத்துஸ் 3-ம் பாப்புவாக திருச்சபையை ஆண்டு வந்தார்.

அக்காலத்தில் உரோமையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் இருந்தபடியால் அதை விசாரணைப் பங்குகளாகப் பிரித்து, ஒவ்வொரு பங்கிலும் ஒரு குருவானவரை நியமித்து விசுவாசிகளுக்கு தேவதிரவிய அநுமானங்களைக் கொடுக்கும்படிச் செய்தார்.

கி.பி. 79-ம் வருடம் தொடங்கிய வேத கலகத்தில் கிளேத்துஸ் வேதசாட்சி முடி பெற்றார்.

296-ம் வருஷத்தில் காயியுஸ் பாப்பரசர் இறந்தபின் மார்செல்லினுஸ் அர்ச். இராயப்பருடைய சிம்மாசனம் ஏறி திருச்சபையை மகா ஊக்கத்துடன் பரிபாலித்து வந்தார்.

அக்காலத்தில் உரோமைச் சக்கரவர்த்தியான தியகிலேசியன் கர்வங்கொண்டு, தானே கடவுள் என்று பிதற்றி, தனக்கும் தேவாராதனை செலுத்த வேண்டுமென்று கட்டளையிட்டு, அப்படிச் செய்யாதவர்களை அவன் வதைத்துக் கொன்றான்.

மார்செல்லினுஸுடைய புத்திமதியால் கிறிஸ்தவர்கள் இராயனுடைய அகந்தையான கட்டளைக்குக் கீழ்படியாததால் ஏராளமானோர் வேதசாட்சி முடி பெற்றபோது இந்தப் பாப்பாண்டவரும் கிறிஸ்துநாதருக்காகத் தமது இரத்தத்தைச் சிந்தி மரித்தார்.

யோசனை 

கஷ்டம் துன்பங்களாகிற சிலுவை, மோட்ச பாதையென்று கூறும் சுவிசேஷ வாக்கியத்தை நாமும் உணருவோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். ரிக்காரியுஸ், ம.
அர்ச். பாஸ்காசியுஸ், ம.