ஜுலை 26

அர்ச். அன்னம்மாள் 

தாவீது இராஜாவின் கோத்திரத்தில் பிறந்த அன்னம்மாள் பரிசுத்த கன்னிமரியாயின் தாயார். இவள் சிறுவயதிலே பூர்வ வேத கட்டளைகளை வெது நுணுக்கமாய் அனுசரித்து, தர்ம வழியில் நடந்து வந்தாள். 

இவள் காலத்தில், தாவீது இராஜா வம்சத்தாரும் புண்ணியவாளருமான சுவக்கீன் என்பவரை மணமுடித்து, அவருடன் நசரேத்துாரில் வசித்து வந்தாள். இவ்விரு புண்ணிய ஆத்துமாக்களும் தேவ பயமுடையவர்களாய் தேவ கட்டளையை அனுசரித்து தான தர்மஞ் செய்து மற்றவர்களுக்கு நன்மாதிரிகையாய் நடந்து வந்தார்கள். 

மேலும் தங்கள் சொத்தை மூன்று பாகமாகப் பிரித்து, முதல் பங்கை கோயிலுக்கும், இரண்டாவது பங்கை ஏழைகளுக்கும் கொடுத்து, மூன்றாவது பங்கை தங்கள் ஜீவியத்திற்கும் வைத்துக்கொண்டார்கள். வரவிருக்கும் உலக இரட்சகரைப் பார்க்க அன்னம்மாள் ஆவல்கொண்டு, அவரை சீக்கிரத்தில் அனுப்பும்படி சர்வேசுரனைப் பார்த்து மன்றாடி வருவாள். 

தனக்கு உலக செல்வங்கள் குறைவில்லாதிருந்தும் பிள்ளை பாக்கியமில்லாத குறையால் துக்கித்து, தனக்கு புத்திர பாக்கியம் கொடுக்கும்படி சர்வேசுரனைப் பார்த்து மன்றாடி வந்ததுடன், அப்படி தனக்குக் குழந்தை பிறந்தால் அதை தேவ ஊழியத்திற்கு விடுவதாக பிரார்த்தனை செய்துகொண்டாள். 

சர்வேசுரன் தன் மன்றாட்டுக்கிரங்கி அளித்த அற்புதமான குழந்தைக்காக அவருக்கு நன்றி யறிந்த தோத்திரம் புரிந்தாள். குழந்தைக்கு 3 வயது நடக்கும் போது அதை சந்தோஷத்துடன் தேவாலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தாள். பிறகு அன்னம்மாள் தேவ கற்பனைப்படி உத்தமமாய் வாழ்ந்து அர்ச்சியசிஷ்டவளாக காலஞ் சென்றாள்.

யோசனை

தேவ அழைப்புள்ள உங்களுடைய பிள்ளைகளுக்கு இடையூறாக இருக்காமல், அர்ச். அன்னம்மாளைப் போல் சந்தோஷத்துடன் அவர்களை சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். ஜெர்மானுஸ், மே.