அர்ச். ஜானும் பவுலும். வேதசாட்சிகள் (கி.பி.362)
சகோதரர்களான ஜானும் பவுலும் உரோமாபுரி இராயனுடைய அரண்மனையில் நம்பிக்கையுள்ள உத்தியோகத்தைப் பிரமாணிக்கமாய்ப் பார்த்து வந்தார்கள்.
உத்தம கிறிஸ்தவர்களான இவர்கள் புண்ணிய வழியில் நடந்து சகலருக்கும் நன்மாதிரிகையாக விளங்கினார்கள். இவர்கள் ஒரு நாள் படையுடன் சண்டைக்குப் போன போது, தனக்கு தோல்வி ஏற்படப்போவதாக எண்ணிய அஞ்ஞானியான தளக்கர்த்தன் பொய்த் தேவர்களுக்குப் பலியிடத் தொடங்கினான்.
இதைக் கண்ட அவ்விரு சகோதரரும் தளகர்த்தனுக்கு சத்திய வேதத்தை உணர்த்தி மெய்யான கடவுளை நம்பி அவரை மன்றாடினால் ஜெயம் உண்டாகுமென்று கூறியதினால், தளகர்த்தனும் இரு சகோதரர்களும் மகா பக்தி விசுவாசத்துடன் சத்திய கடவுளைப் பிரார்த்தித்து ஜெயம் கொண்டார்கள். இதற்குப்பின் தளகர்த்தன் கிறீஸ்தவ வேதமே சத்திய வேதமென்று விசுவசித்து ஞானஸ்நானம் பெற்று வேதசாட்சியாக மரித்தார்.
வேதத் துரோகியான ஜூலியான் இராயனாகத் தெரிந்துகொள்ளப்பட்ட போது, அவ்விரு சகோதரர்களும் சத்திய வேதத்தை மறுதலித்தால் உயர்ந்த உத்தியோகம் அவர்களுக்குத் தருவதாக வஞ்சக வார்த்தையைக் கூறினான்.
அச்சகோதரர்கள் இதைக் கேட்ட மாத்திரத்தில், சத்திய கடவுளை மறுதலித்த உன்னை இனி சேவிக்க மாட்டோமென்று கூறியதைக் கேட்ட இராயன் சினம் கொண்டு, பட்டணத்தார் அவர்கள் மீது மேலான எண்ணம் கொண்டிருந்தமை யால் அவ்விருவரையும் சிறையில் இரகசியமாய்க் கொலை செய்யும்படி கட்டளையிட்டான்.
ஜானும் பவுலும் சத்திய கடவுளுக்காக தங்கள் இரத்தத் தைச் சிந்தி நித்திய சம்பாவனைக்குள்ளானார்கள். .
யோசனை
சமயோசிதமான ஒரு நல்ல வார்த்தையும் நன்மையைக் கொடுக்கு மென்று அறிவோமாக.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். மாக்சென்சியுஸ், ம.
அர்ச். விஜிலியுஸ், மே.
அர்ச். பபோலென், ம.