அர்ச். லெயாந்தர். மேற்றிராணியார் (கி.பி. 596)
லெயாந்தர் ஸ்பெயின் தேசத்தில் சிறந்த கோத்திரத்தில் பிறந்தார். இவரோடு பிறந்த 6 சகோதரர்களில் அநேகர் அர்ச்சியசிஷ்டவர்களானார்கள். இவர் சிறு வயதில் சந்நியாச மடத்தில் சேர்ந்து கல்வியிலும் புண்ணியத்திலும் தேர்ந்து உத்தமரானார்.
இதனிமித்தம் லெயாந்தர் செவில் நகருக்கு மேற்றிராணி யாராக நியமிக்கப்பட்டார். அக்காலத்தில் விசிகோத்ஸ் என்னும் ஒரு ஜாதியார் ஆரிய பதித மதத்தைக் கைப்பற்றியதினால், இவர்களால் திருச்சபைக்குப் பெரும் கஷ்டமுண்டாயிருந்தது.
இப்பேர்ப்பட்ட துஷ்டப் பதிதரால் தமது அலுவல் பாதிக்கப்பட்டதினால், லெயாந்தர் மேற்றிராணியார் வெகு கஷ்டப்பட்டு, ஜெப தபத்தாலும் பிரசங்கத்தாலும் அவர்களை மனந்திருப்ப முயற்சித்து வந்தார். பதிதனான அத்தேசத்து அரசனுடைய பட்டத்துக் குமாரனை இவர் மனந்திருப்பினதினிமித்தம் அந்த கொடுங்கோலன் தன் குமாரனைக் கொலை செய்து, மேற்றிராணியாரை நாடு கடத்தினான்.
சீக்கிரத்தில் அரசன் மனச் சங்கடப்பட்டு மேற்றிராணியாரை பரதேசத்தினின்று அழைப்பித்து தன் இளைய மகனை அவர் கையில் ஒப்படைத்து மரித்தான். இந்த இராஜ குமாரனும் மேற்றிராணியாருடைய புத்திமதியால் பதித மதத்தை விட்டுவிட்டு கத்தோலிக்கனானதால் விசிகோத்தார் அனைவரும் சத்திய வேதத்தில் சேர்ந்தார்கள்.
லெயாந்தர் மேற்றிராணியாரும் தமது மேற்றிராசனத்தை புண்ணியத்திலும் நன்னடத்தையிலும் சீர்ப்படுத்தி பாக்கியமான மரணமடைந்தார்.
யோசனை
நாமும் நமது ஜெப தபத்தால் அஞ்ஞானிகள் பதிதர் முதலியவர்களை மனந்திருப்புவோமாக.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்.
அர்ச். ஜூலியானும் துணை, வே.
அர்ச். தாலிலேயுஸ், வன.
அர்ச். கால்மியர், சன்.
அர்ச். நெஸ்டர், மே.வே.
அர்ச். ஆல்னாத், வே.