அர்ச். ஜீத்தம்மாள். கன்னிகை (கி.பி. 1272)
ஜீத்தம்மாள் தேவ பயமும் பக்தியுமுள்ள தன் தாயாரால் வளர்க்கப் பட்டதால், சிறுவயதிலேயே புண்ணிய வழியில் சிறந்து வளர்ந்தாள்.
வெகு நேரம் ஜெபத்தியானத்தில் செலவழிப்பாள். இவளுடைய தாயார் ஏழையானதால், ஜீத்தம்மாளுக்கு 12 வயது நடக்கும்போது அவள் ஒரு துரை வீட்டில் வேலைக்காரியாக விடப்பட்டாள்.
இச்சிறுமி முனங்காமல் தனக்கு அளித்த வேலையை சுறுசுறுப்புடன் செய்வாள்.
தன் எஜமானர்களால் அநியாயமாய்க் கோபித்துத் தண்டிக்கப்படும்போதும், அவ்வீட்டில் வேலை செய்யும் உடன் வேலைக்காரர்களால் துாஷிக்கப்படும்போதும் ஜீத்தம்மாள் அவைகள் எல்லா வற்றையும் பொறுமையுடன் சகித்து, சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுப்பாள்.
அதி காலையில் எழுந்து ஜெபங்களை முடித்துக்கொண்டு திவ்விய பூசை கண்டு தன் வேலையைச் செய்வாள்.
வாரத்தில் சில நாட்கள் ஒருசந்தி பிடிப்பாள். அடிக்கடி நன்மை வாங்குவாள்.
இடைவிடாமல் மனவல்லிய ஜெபங்களை ஜெபித்து ஒறுத்தல் முயற்சி செய்வாள்.
தன் சம்பளத்தை ஏழைகளுக்கு கொடுப்பாள். பொய், திருட்டு முதலியவற்றை அறியாதவள்.
இவளுடைய புண்ணியத்தையறிந்து அவள் எஜமானி அதிசயித்து, அவள் மூலமாய்த் தன் வீடு ஆசீர்வதிக்கப்பட்டதென்று கண்டு, அவளை உயர்வாக எண்ணி தன் பிள்ளைகளையும் குடும்பப் பொறுப்புகளையும் அவள் கையில் ஒப்புவித்தாள்.
ஒரு நாள் இவள் கோவிலுக்குப் போய் சற்று தாமதமாக வீட்டுக்குச் சென்ற போது அவள் சுட வேண்டிய அப்பங்கள் சம்மனசுகளால் சுடப்பட்டிருப்பதைக் கண்டு அதிசயித்தாள்.
இப்புண்ணியவதி 60 வயது வரைக்கும் ஊழியஞ் செய்து அர்ச்சியசிஷ்டவளாகக் காலஞ் சென்றாள்.
இவள் மரித்தபின் இவள் மூலமாய் 150 புதுமைகள் நடந்தன.
அவள் இறந்த 300 வருஷங்களுக்குப்பின் அவள் கல்லறையைத் திறந்து பார்த்தபோது அவள் சரீரம் அழியாமலிருந்தது.
யோசனை
நாமும் இந்த புண்ணியவதியைக் கண்டுபாவித்து எதார்த்தம், பிரமாணிக்கம், சுறுசுறுப்பு முதலிய புண்ணியங்களை அநுசரித்து, எவ்வித வேலையிலிருந்த போதிலும் வேதக் கடமைகளை ஒருபோதும் அசட்டை செய்யாமலிருப்போமாக.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். அந்திமுஸ், மே.
அர்ச். அனஸ்தாசியுஸ், பா.