அர்ச். கலாசாங்க்சியுஸ் ஜோசப் - துதியர் (கி.பி. 1648)
இவர் பக்தியுள்ள தமது பெற்றோருடைய பார்வையில் கவனமாக வளர்க்கப் பட்டபடியால், புண்ணியத்திலும் தெய்வ பயத்திலும் அதிகரித்துத் தர்ம வழியில் நடந்தார். இவர் பள்ளியில் படிக்கும்போது தன் வயதுள்ள பிள்ளைகளைச் சேர்த்து அவர்களுக்குப் புத்தி சொல்வார்.
இவர் தனித்து ஜெபம் செய்ய ஆசைப்படுவார். இவருக்கு வயது வந்தபின் இவரைப் போல உயர்ந்த குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை இவருக்கு மணமுடித்து வைக்க இவருடைய உறவினர்கள் ஏற்பாடு செய்வதை ஜோசப் அறிந்து, உலகத்தை வெறுத்து குருப்பட்டம் பெற்றார்.
இவர் ஜனங்களுக்கு ஞானோபதேசம் போதித்து அநேக பாவிகளை மனந்திருப்பினார். தேவ ஏவுதல்படி இவர் உரோமைக்குச் சென்று, அவ்விடத்தில் அநேக சிறு பிள்ளைகள் துர் வழியில் நடந்துகொண்டு வருவதைக் கண்டு மனமிரங்கி, ஓரு பள்ளிக்கூடம் ஆரம்பித்து, ஆயிரக் கணக்கான சிறுவர்களைச் சேர்த்து இலவசமாக படிப்பு சொல்லிக்கொடுத்தார்.
உலகப் படிப்புடன் ஞானப்படிப்பையும் கற்பிக்க மறக்கவில்லை. இதற்காக ஒரு சபையையும் ஆரம்பித்து, அதில் சேர்ந்த குருக்களைக்கொண்டு பிள்ளைக ளுடைய ஆத்துமத்திற்கும் சரீரத்திற்கும் ஏராளமான நன்மையுண்டாகச் செய்தார்.
மேலும் ஜோசப் மருத்துவமனைகளுக்கும் சிறைக்கூடங்களுக்கும் சென்று அங்குள்ளவர்களுக்கு தம்மால் முடிந்த வரை உதவி புரிவார். இவருடையவும் இவர் நண்பர்களுடையவும் முயற்சியால் அநேக ஆத்துமங்கள் இரட்சிக்கப்பட்டன.
இவர் புதுமை செய்யும் வரம் பெற்று அநேக வருட காலம் மனிதருடைய ஆத்தும இரட்சண்யத்திற்காக உழைத்தார். இவருக்கு 92 வயது நடக்கும்போது பாக்கியமான மரணமடைந்து நித்தியானந்தத்தைச் சுதந்தரித்துக் கொண்டார்.
யோசனை
நாம் சிறுவருக்கு ஞானோபதேசம் படிப்பிப்பதுடன் அவர்கள் ஞான உபதேசத்திற்கு போகும்படி அவர்களுக்குக் கற்பிக்கவும் வேண்டும். .
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். செசாரியுஸ், அதிமே.
அர்ச். பாஸ்டர், ம.
அர்ச். யூக், வே.
அர்ச். மால்ரூபியுஸ், வே.
அர்ச். சையாகிரியுஸ், மே.