அர்ச். பொத்தாமியானம்மாளும் துணைவரும். வேதசாட்சி (கி.பி. 254)
பொத்தாமியானா என்பவள் சிறுவயதிலே பக்தி விசுவாசமுள்ள தாயால் புண்ணிய வழியில் வளர்க்கப்பட்டு தேவையான கல்வியை ஒரிஜின் என்னும் பேர்போன சாஸ்திரியால் கற்பிக்கப்பட்டாள்.
இப்புண்ணிய மாது ஒரு அஞ்ஞானிக்கு அடிமையாக விற்கப்பட்டிருந்தாள். பொத்தாமியானா இளம் வயதும் அழகும் நிறைந்தவளாயிருந்ததால் அவளுடைய எஜமான் அவள் மட்டில் துர் ஆசை கொண்டு அவளை பாவத்திற்கு சம்மதிக்கும்படி பிரயாசைப் பட்டும், அவள் அதற்கு இணங்காததினால் கோப வெறிகொண்டு அவளை நாட்டதிகாரிக்குக் கையளித்து, இவளைத் தன் ஆசைக்கு இணங்கச் செய்தால் பெரும் பணத்தொகையை அவனுக்குக் கொடுப்பதாக வாக்களித்தான்.
அவனும் அவ்வாறே பொத்தாமியானாவுக்கு நய பயத்தைக் காட்டி, உன் எஜமான் சொற்படி செய்யென்று கூறியும் தெய்வ பயமுள்ள அப்புண்ணிய மாது; நான் எப்பேர்ப்பட்ட கொடிய சாவுக்கும் தயாராயிருக்கிறேன், ஆனால் நீர் கூறும் பெரும் பாவத்திற்கு ஒருபோதும் சம்மதிக்க மாட்டேனென்றாள்.
அதிபதியின் கட்டளைப்படி பாசிவிதெஸ் என்னும் சேவகன் கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரையில் வேதசாட்சியைப் போட்டான். சற்று நேரத்திற்குள் பொத்தாமியானா பிரமாணிக்கமாய் ஊழியஞ் செய்த தன் தேவ பத்தாவிடம் போய்ச் சேர்ந்தாள்.
தன்னைக் கொப்பரையில் போட்ட சேவகனுக்கு வேதசாட்சி தரிசனமாகி கூறிய புத்திமதியால் அவனும் ஞானஸ்நானம் பெற்று வேதசாட்சி முடி பெற்றான்.
யோசனை
ஒருவர் வீட்டில் வேலை செய்வதால் பாவமுண்டாகுமென்று அறிந்து, அதை விடாமல் பாவத்தில் புரளுங் கிறிஸ்தவர்கள் பொத்தாமியானாளுடைய நடத்தையைக் கண்டு எவ்வளவோ வெட்கி நாண நியாயமுண்டு.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். இரெனெயுஸ், மே.வே.