அக்டோபர் 28

அர்ச். சீமோனும் யூதாவும் - அப்போஸ்தலர்கள்.

கானான் தேசத்தாரான சீமோனுக்குக் கலியாணமான நாளில் நமது கர்த்தர் தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றினாரென்று சில நூலாசிரியர் சொல்லுகிறார்கள்.

சீமோன் பிறகு கர்த்தருடைய பிரசங்கங்களைக் கேட்டு, அவர் செய்த புதுமைகளைக் கண்டு விசுவாசத்தில் உறுதியடைந்து அப்போஸ்தலர் ஆனார். கர்த்தர் மோட்சாரோகணமானபின், சீமோன் ஆப்பிரிக்கா தேசத்திற்குச் சென்று மகா ஊக்கத்துடன் வேதம் போதித்தார்.

ததேயுஸ் எனப்படும் யூதா, சின்ன யாகப்பருடைய சகோதரர். தேவமாதாவுக்கு உறவினராயுமிருந்தார். இவர் மற்ற அப்போஸ்தலர்களுடன் பல இடங்களுக்குச் சென்று சத்திய வேதம் போதித்தார்.

இவர் ஒரு பொது நிருபம் எழுதி புதுக் கிறீஸ்தவர்களுக்கு அனுப்பி வைத்தார். அதில் வேதத்தைப் புரட்டும் பதிதரையும், திருச்சபைக்கு அடங்காத குழப்பக்காரரையும் கண்டித்து, இப்பேர்ப்பட்டவர்கள் சர்வேசுரனுக்கு கொடுக்க வேண்டிய பயங்கரத்திற்குரிய கணக்கைப்பற்றி விளக்கிக் காட்டியிருக்கிறார்.

அப்படித் தவறிப்போய் மனந்திரும்பினவர்கள் மட்டில் தயவு காட்டினார். யூதாவும் சீமோனும் சேர்ந்து பெர்சியா தேசத்தில் வேதம் போதிக்கையில் அவர்களுடைய அதிசயத்திற்குரிய அற்புதங்களைக் கண்ட அரசனும் பிரஜை களும் சத்திய வேதத்திலுட்பட்டார்கள்.

வேறொரு நாட்டிற்குச் சென்று பிரசங்கம் செய்து அநேகருக்கு ஞானஸ்நானம் கொடுப்பதைக் கண்ட பூசாரிகள் அவ்விரு அப்போஸ்தலர்களையும் பிடித்து, தங்கள் கோயிலுக்குக் கூட்டிக்கொண்டு போய் தங்கள் தேவர்களை வணங்கும்படி கட்டாயப்படுத்தினார்கள்.

அவர்களுடைய வேண்டுதலால் சிலைகள் உடைந்து கீழே விழுந்ததைக் கண்ட பூசாரிகள் அவ்விரு அப்போஸ்தலர்களையும் வெட்டிக் கொன்றார்கள்.

யோசனை

வேதத்திற்கு அல்லது திருச்சபை அதிகாரிகளான மேற்றிராணிமார்கள் முதலியவர்களுக்கு விரோதமாய் நாம் கலகம் பண்ணாமலும், கலகக்காரர்க ளுடன் சேராமலிருப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். பாரோ, மே. St. Neot, Anch.
அர்ச். நேயாட், மு.