டிசம்பர் 28

மாசில்லாக் குழந்தைகள்.


கர்த்தர் பிறந்ததை புது நட்சத்திரத்தால் அறிந்துகொண்ட மூன்று இராஜாக்கள், அவரை சந்திக்கும்படி புறப்பட்டு ஜெருசலேமுக்குப் போய்ச் சேர்ந்தார்கள். 

யூதேயா நாட்டு இராஜாவான ஏரோது, மூன்று இராஜாக்களின் மூலமாக யூதர்களின் இராஜா பிறந்திருப்பதாக அறிந்து, அவர் தன் இராச்சியத்தைப் பிடித்துக் கொள்வாரென்று வீணாக அஞ்சினான். 

ஆகவே, பிறந்த குழந்தையைக் கொல்ல நினைத்து: “நீங்கள், பிறந்திருக்கும் இராஜ குழந்தையைச் சந்தித்தபின் எனக்கு அறிவியுங்கள். நானும் அவரைப் போய் சந்திப்பேன்” என்று கபடமாய் மூன்று இராஜாக்களிடம் கூறினான். 

ஆனால் மூன்று இராஜாக்கள் கர்த்தரைச் சந்தித்தபின், சம்மனசுவின் கட்டளைப்படி அவர்கள் வேறு வழியாகத் தங்கள் தேசத்திற்குத் திரும்பினார்கள். 

மூன்று இராஜாக்கள் திரும்பி வராததைக் கண்ட ஏரோது சினங்கொண்டு, திருப்பாலனைக் கொல்ல தீர்மானித்து, அவர் இன்னாரென்று அறியாததினால், இரண்டு வயதிற்குட்பட்ட சகல குழந்தைகளையும் கொலை செய்யும்படி கட்டளையிட்டான். 

ஆனால் ஒரு சம்மனசானவர் சூசையப்பருக்குத் தோன்றி, திவ்விய பாலனையும் அதன் தாயாரையும் அழைத்துக்கொண்டு         எஜிப்து தேசத்திற்கு ஓடிப்போகும்படி கூறினார். 

ஏரோதின் குரூரக் கட்டளைப்படி சேவகர் பட்டணங்களிலும் கிராமங்களிலும் பிரவேசித்து, இரண்டு வயதிற்கு கீழ்ப்பட்ட குழந்தைகளையெல்லாம் கொல்லும்போது, தாய்மார் எப்படி அழுது அலறி புலம்பியிருப்பார்கள் என்று சொல்லத் தேவையில்லை. 

திவ்விய பாலகனோ இந்த கொலைக்குத் தப்பித்துக்கொண்டார். இந்த கொடுங்கோலனை சர்வேசுரன் இவ்வுலகில் மகா நீதியுடன் தண்டித்ததினால், அவன் நூதன வியாதியால் பீடிக்கப்பட்டு, உடல் புழுத்து நாறி, அதைச் சகிக்க மாட்டாதவனாய் அலறி, ஊளையிட்டு அவலமாய் மாண்டான்.

யோசனை

சிறு குழந்தைகளின் உயிரைப் பறித்த ஏரோதனை சர்வேசுரன் இவ்வாறு தண்டித்திருக்க, சிறு பிள்ளைகளுக்கு துர்மாதிரிகை வருத்தி, அவர்களுக்குப் பாவத்தைக் கற்றுக் கொடுத்து, அவர்கள் ஆத்துமத்தைச் சாகடிக்கும் துஷ்டரை சர்வேசுரன் எவ்வளவு அகோரமாய் தண்டிப்பார்.