அர்ச். கொன்ட்றான். இராஜா (கி.பி. 593)
இவர் க்லோத்தேர் அரசனுடைய குமாரனும், க்லோவிஸ் அரசனுடையவும் அர்ச். க்லோடில்தா இராக்கினியுடையவும் பேரனுமாவார்.
இவர் தமது சகோதரர்களுடன் பிரான்ஸ் தேசத்தை ஆண்டு வந்தார். தமது ஆளுகைக்கு உட்பட்டத் தேசங்களில் மிகவும் நேர்மையுடன் அரசு புரிந்து வந்தார். தேசத்தில் குழப்பம் எழுப்பினவர்களை நீதியுடன் தண்டித்த போதிலும் தமக்கு தீமை செய்தவர்களுக்கு மன்னிப்பு அளித்தார்.
கொள்ளை வியாதி காலத்தில் தன் பிரஜைகளைச் சந்தித்து தம்மால் கூடிய உதவியை அவர்களுக்குப் புரிந்து வந்தார்.
தமது பிரஜைகளுக்காக நாள்தோறும் அழுது கண்ணீர் சிந்தி அவர்களுடைய பாவத்தைப் பொறுக்கும்படி சர்வேசுரனை மன்றாடுவார். அரிதான தவக்காரியங்களை நடத்தி இரவை ஜெபத்தில் செலவழிப்பார்.
தன் தேசத்திற்குப் பிரயோசனமான சட்டதிட்டங்களை ஏற்படுத்தி, நீதி செலுத்தி வந்தார்.
தன்னைக் கொல்ல முயற்சித்தவர்களுக்கு பொறுத்தல் அளித்து அவர்களுக்கு உபகாரியாயிருந்தார்.
மேற்றிராணிமார், குருக்கள் முதலிய தேவ ஊழியர் சர்வேசுரனுடயை பிரதிநிதிகளென்று கூறி அவர்களை மரியாதையுடன் நடத்துவார்.
தனது தேசத்தில் அநேக சிறந்த தேவாலயங்களையும், மடங்களையும் கட்டுவித்து அவைகளுக்கு வேண்டி மானிய முதலிய திரவியங்களை ஏற்படுத்தினார்.
இவ்வாறு இப்புண்ணிய இராஜா 31 வருட காலம் தன் தேசத்தை நீதியுடன் அரசாண்டு தமக்கு 68 வயது நடக்கும்போது மோட்ச இராச்சியம் போய்ச் சேர்ந்தார்.
யோசனை
நாமும் இந்த உத்தம இராஜாவைக் கண்டுபாவித்து நமது பகைவர் களை சிநேகிப்போம்; தேவ ஊழியர்களை சங்கித்து, அவர்களுக்கு கீழ்ப்படி வோமாக.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். பிரிஸ்குஸும் துணை., வே.
அர்ச். சிக்ஸ்துஸ், பா.