அர்ச். நசாரியுஸும் துணைவரும் - வேதசாட்சி (கி.பி. 68)
நசாரியுஸ் உயர்ந்த கோத்திரத்திலுள்ள பெற்றோரிடம் பிறந்தார். இவர் அர்ச். இராயப்பருடைய பிரசங்கத்தைக் கேட்டு அவருக்குப்பின் திருச்சபைக்கு தலைவரான அர்ச். லீனுஸ் பாப்பாண்டவர் கையால் ஞானஸ்நானம் பெற்றார்.
இவர் சத்திய வேதத்தில் உறுதியாயிருந்து தமது வேத போதகர்களுடைய புண்ணிய மாதிரிகையைக் கண்டுபாவித்து தர்ம வழியில் நடந்தார். இவர் தமது சொந்த தேசத்தை விட்டுவிட்டு, மற்ற தேசங்களில் சத்திய வேதத்தைப் போதிக்க புறப்பட்டார்.
அவ்விடத்தினின்று துரத்தப்பட்டு, பிரான்ஸ் தேசத் திற்குப் போய் அநேக புதுமைகளைச் செய்து கிறீஸ்தவ வேதத்தைப் பிரசங்கித்தார். இவருடைய புண்ணிய நடத்தையைக் கண்டு ஒரு பணக்காரப் பெண் தன் குமாரனை நசாரியுஸுக்கு ஒப்புக்கொடுத்தாள்.
அவர் அவனுக்கு கூறிய புத்திமதியால் அவன் ஞானஸ்நானம் பெற்று, செல்கஸ் என்னும் பெயரைத் தரித்துக்கொண்டு அர்ச்சியசிஷ்டவருடைய பிரயாணங்களில் அவருக்குத் துணையாயிருந்தான்.
அவ்விருவரும் ஒரு அஞ்ஞான நாட்டில் வேதம் போதிக்கையில் அரசாங்கத்தின் கட்டளைப்படி அவ்விருவரும் சமுத்திரத்தில் தூக்கிப் போடப்பட்டார்கள். ஆனால் அவர்கள் தண்ணீரில் மூழ்காமல் அதன் மேல் நடப்பதைக் கண்ட பொய் மதத்தார் அதிசயித்து, அவ்விருவரையும் தங்கள் நாட்டினின்று துரத்தி விட்டார்கள்.
இருவரும் மிலான் பட்டணஞ் சென்று வேதம் போதிக்கையில் வேதத்திற்காக சிரச்சேதம் செய்யப்பட்டு வேதசாட்சி முடி பெற்றார்கள்.
யோசனை
புண்ணியவாளரான நமது பெரியோர் முதலிய ஆன்ம குருக்களுடைய நல்லப் புத்திமதிகளைக் கேட்பதுடன் அவர்களுடைய நன்மாதிரிகையையும் பின்பற்ற முயற்சி செய்ய வேண்டும்.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். அர்ச். விக்டர், பா.வே.
அர்ச். முதல் இன்னோசென்ட்., பா.
அர்ச். சாம்ப்ச ன், மே.