அர்ச். சிரீல். வேதசாட்சி (3-ம் யுகம்)
அஞ்ஞானியான இவர் சிறு பிள்ளையாய் இருக்கும்போதே கிறீஸ்தவ வேத சத்தியங்களைப் படித்து இரகசியமாக ஞானஸ்நானம் பெற்றார்.
இவர் ஞானஸ்நானம் பெற்றபின் தன் வீட்டிலுள்ள சிலைகளை வணங்காமலும், மற்ற அஞ்ஞான சடங்கு, ஆசாரங்களை அனுசரியாமலும் இருப்பதைக் கண்ட அவருடைய அஞ்ஞான தந்தை அவரைக் கண்டித்தும் தண்டித்தும் வந்தான்.
தன் மகன் கிறீஸ்தவனானதை அறிந்த தந்தை கோபாவேசப்பட்டு, தன் வீட்டிலிருந்து அச்சிறுவன் சிரிலைத் துரத்திவிட்டான். சிரிலோ இதற்கெல்லாம் அஞ்ஞாமல் சத்திய தேவனை ஆராதித்து அவர் கட்டளைப்படி நடந்து வந்தார்.
இதைப்பற்றி கேள்விப்பட்ட நாட்டதிகாரி சிரிலை தன்னிடம் வரவழைத்து அவரிடம் அன்பாய் பேசி, கிறீஸ்தவ வேதத்தை மறுதலிக்கும்படி கூறிய துர்ப்புத்திக்கு இவர் காது கொடாததால், பெரும் நெருப்பை மூட்டி சுத்தியல் முதலிய ஆயுதங்களை அவருக்குக் காட்டி பயமுறுத்தியும், அவர் பயப்படாமல், நான் கொஞ்ச நேரம் நெருப்பில் உபாதைப்பட்ட போதிலும் என்றும் முடியாத நித்திய பாக்கியத்தை அனுபவிப்பேன் என்று தைரியமாகக் கூறினார்.
தன் முயற்சியெல்லாம் வீணானதைக் கண்ட அதிபதி சிரிலை சிரச்சேதம் செய்யும்படி கட்டளையிட்டான். அங்கு நின்றுகொண்டிருந்தவர்கள் கண்ணீர் சிந்துவதை சிரில் கண்டு, எனக்கு கிடைக்கும் பாக்கியத்தைப்பற்றி நீங்கள் சந்தோஷிக்க வேண்டுமே தவிர துக்கப்பட வேண்டாமென்று கூறி வேதசாட்சி முடி பெற்றார்.
யோசனை
உங்கள் பெற்றோர் முதலிய பெரியோர் வேத கற்பனைக்கு விரோத மான காரியத்தைச் செய்ய உங்களுக்குத் துர்ப்புத்தி சொல்லும்போது நீங்கள் அவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டாம்.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். மாக்ஸிமீனுஸ், மே.
அர்ச். கானனும் அவர் குமாரனும், வே.
அர்ச். சிசின்னியூஸம் துணைவரும், வே.