ஜுலை 29

அர்ச். மார்த்தம்மாள் - கன்னிகை (1-ம் யுகம்) 

மார்த்தம்மாள் தன் கூடப்பிறந்தவர்களான லாசர், மரிய மதலேனாளுடன் பெத்தானிய ஊரில் வசித்தாள். நமது கர்த்தர் 3 வருடம் தமது வேதத்தைப் போதித்த காலத்தில் அடிக்கடி மார்த்தம்மாள் வீட்டில் போய்த் தங்குவார். 

ஒரு நாள் சேசுநாதர் அவ்வீட்டில் விருந்தாளியாய் சென்றபோது, மரிய மதலேனம்மாள் அவர் பாதத்தடியில் உட்கார்ந்து அவருடைய போதகத்தை கேட்டுக்கொண்டிருந்தாள். அப்போது மார்த்தம்மாள் ஆண்டவரை அணுகி: “சுவாமி! என் தங்கை வீட்டு வேலையை எனக்கு விட்டுவிட்டு உம்மிடத்தில் உட்கார்ந்து இருக்கிறாள்; எனக்கு உதவி செய்யும்படி அவளை வரச்சொல்லும்” என்றாள். 

அதற்கு கர்த்தர்: “மார்த்தாள் நீ பல காரியங்களில் கவலையாயிருக்கிறாய்; மரியாயி உத்தமமானதைத் தெரிந்துகொண்டாள்" என்றார். மார்த்தாளுடைய தமயனான லாசர் வியாதியாய் விழுந்தபோது, அவர்கள் கர்த்தரிடம் ஆள் அனுப்பி, தங்கள் தமயனைக் குணப்படுத்தும்படி மன்றாடினார்கள். 

ஆனால் கர்த்தர் சில நாட்களுக்குப்பின் அங்கு சென்று, மரித்து அடக்கஞ் செய்யப்பட்ட லாசரை உயிர்ப்பித்தார். சேசுநாதர் மோட்சத்திற்கு ஆரோகணமானபின் யூதர் புதுக் கிறிஸ்தவர்களை உபாதித்துக் கொல்லும் காலத்தில் மார்த்தாளையும் மரிய மதலேனம்மாளையும் வாசரையும் இன்னும் அநேக கிறீஸ்தவர்களையும் பாய்மரமும் சுக்கானும் இல்லாத ஒரு சிறு கப்பலில் ஏற்றி கடலில் விட்டு விட்டார்கள். 

கப்பல் சிறிதும் சேதமடையாமல் புதுமையாய் மர்சேல்ஸ் பட்டணம் போய்ச் சேர்ந்தது. அவ்விடத்தில் மேற்றிராணியாரான லாசர் வேதம் போதித்தார். மதலேனம்மாள் ஒரு கெபியில் சேர்ந்து ஜெப தபம் புரிந்தாள். 

மார்த்தம்மாள் அநேக கன்னியரை ஒரு மடத்தில் சேர்த்து அவர்களுடன் அநேக வருடம் சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்து மரணமடைந்து மோட்ச பதவி பெற்றாள்.

யோசனை

நாமும் நமது கர்த்தருடைய புத்திமதிகளைப் பின்பற்றி உலக காரியங்களை விட ஆத்தும் காரியங்களை அதிகமாய்க் கவனிப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். சிம்ப்ளிசியுஸம் துணை, வே. 
அர்ச். பெலிக்ஸ், பா.வே. 
அர்ச். வில்லியம், மே. 
அர்ச். ஒலாஸ், இராஜா.வே.