அர்ச். இராயப்பர். அப்போஸ்தலர்
அப்போஸ்தலர்களுக்குத் தலைவரான இராயப்பருக்கு இருந்த சீமோன் என்கிற பெயரை நமது கர்த்தர் மாற்றி, கல் என்னும் அர்த்தமுள்ள இராயப்பர் என்னும் பெயரைக் கொடுத்து அவரைத் திருச்சபைக்குத் தலைவராக ஸ்தாபிக்கத் தீர்மானித்தார்.
கர்த்தர் மறு ரூபமானபோதும், இறந்துபோன ஒரு துரை மகளுக்கு உயிர் கொடுத்த போதும், பூங்காவனத்தில் இரத்த வியர்வை வியர்த்த போதும் இராயப்பர் சேசுநாதரோடு கூட இருந்தார்.
சேசுநாதர் யூதரால் பிடிபட்ட போது இராயப்பர் கர்த்தர் மீது வைத்த சிநேகத்தினிமித்தம் வாளை உருவி ஒருவன் செவியற வெட்டினார்.
கர்த்தர் பாடுபடும் போது இவர் பயத்தால் அவரை அறியேனென்று மறுதலித்த பாவத்திற்காக சாகு மட்டும் துக்கப்பட்டு அழுதார்.
சேசுநாதர் உயிர்த்தபின் இராயப்பருக்குத் தரிசனையாகி, விசுவாசிகளும் குருக்களும் அடங்கிய திருச்சபைக்குத் தலைவராக அவரை நியமித்தார்.
அப்போஸ்தலர்களும் அதுமுதல் இராயப்பரைத் தங்கள் தலைவராகப் பாவித்து வந்தார்கள். இஸ்பிரீத்துசாந்துவைப் பெற்றபின், இராயப்பர் தமது பிரசங்கத்தால் ஆயிரக்கணக்கான மக்களை மனந்திருப்பினார்.
இவர் எண்ணற்ற வியாதிக்காரர்களை சுகப்படுத்தி பசாசுகளை விரட்டினார். மரித்தவர்களை உயிர்ப்பித்தார். அவருடைய நிழலால் பிணியாளர்கள் சுகமடைந்தார்கள்.
இவர் வேதத்திற்காகப் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது ஒரு சம்மனசின் உதவியால் அங்கிருந்து அற்புதமாய் தப்பித்துக்கொண்டார். இராயப்பர் ஊர் ஊராய்த் திரிந்து பிரசங்கம் செய்து, உரோமையில் தமது சிம்மாசனத்தை ஸ்தாபித்து, அவ்விடத்தில் எண்ணற்ற மக்களைத் திருச்சபையில் சேர்த்துக் கொண்ட காலத்தில் அஞ்ஞானியான இராயனுடைய உத்தரவால் பிடிபட்டு தலை கீழாக சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.
யோசனை
நாம் சத்திய திருச்சபையில் இருப்பதால் ஆறுதல் கொண்டு அதற்குக் கீழ்ப்படிவோமாக.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். ஹெம்மா, வி.