அக்டோபர் 30

அர்ச். மார்செல்லுஸ் - வேதசாட்சி (கி.பி. 298) 

உரோமாபுரி சக்கரவர்த்தியான மாக்சிமியன் பிறந்த நாளை மகா ஆரவாரச் சிறப்புடன் தேசமெங்கும் கொண்டாடும்படி இராஜ கட்டளைப் பிறந்தது. 

மேலும் அந்நாளில் பிரஜைகள் பொய் தேவர்களின் கோவில்களில் நடக்கும் பலி சடங்குகளுக்குக் கட்டாயமாகப் போக வேண்டியதாயுமிருந்தது. ஆனால் கிறீஸ்தவர்கள் இப்பேர்ப்பட்ட சடங்குகளுக்குப் போகாமல் நின்றுவிட்டார்கள். 

ஸ்பெயின் தேசத்திலுள்ள மார்செல்லுஸ் என்னும் ஒரு பட்டாளத்துச் சேவகன் மற்ற அஞ்ஞானிகளான சேவகருடன் அவர்களுடைய கோவிலுக்குப் போகச் சம்மதியாமல், இப்பேர்ப்பட்ட அருவருப்புக்குரிய மதச் சடங்கு ஆசாரங்களை அனுசரிக்கக் கற்பிக்கும் அரசனை சேவிப்பது சரியல்லவென்று, தன் கத்தி, ஈட்டி முதலிய ஆயுதங்களையும் இராஜ சின்னங்களையும் கழற்றி எறிந்து விட்டார். 

இதைக் கேள்விப்பட்ட அதிகாரிகள் மார்செல்லுஸை வரவழைத்து அவர் நடவடிக்கையைப்பற்றி விசாரித்த போது: நான் கிறீஸ்தவன்; பொய் தேவர்களின் கோவிலுக்குப் போய் அங்கு நடக்கும் சடங்குகளில் கலந்து கொள்வது மெய்யான சர்வேசுரனை ஆராதிப்பவர்களுக்குப் பெரும் பாவமாகும் என்றார். 

இதைக் கேட்ட அதிபதிகள் அவரைச் சிரச்சேதம் செய்யக் கட்டளையிட்டார்கள். மார்செல்லுஸ் சந்தோஷத்துடன் இரத்தஞ் சிந்தி வேதசாட்சி முடி பெற்றார்.

யோசனை

அஞ்ஞான கோவிலுக்குப் போய் தேங்காய் உடைத்து கற்பூரங் கொளுத்தி பசாசைக் கும்பிடும் கிறீஸ்தவர்கள் இதைக் கேட்டு எவ்வளவு வெட்கப்பட வேண்டும்! நாம் எந்த காரணத்தைக் கொண்டும் பொய் தேவர்களுடைய தேர் திருநாட்களில் கலந்துகொள்வது பெரும் பாதகமென்று நினைப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். ஜெர்மானுஸ், மே. 
அர்ச். அஸ்டேரியுஸ், மே.