ஜுலை 30

அர்ச். ஜூலித்தம்மாள் - வேதசாட்சி (4-ம் யுகம்) 

தியக்கிளேசியன் வேதகலாபனை காலத்தில், கிறிஸ்தவர்கள் தேசத் துரோகிகளாகப் கருதப்பட்டு, அவர்களுடைய சொத்துக்கள் உடமைகளின் மட்டில் அவர்களுக்குரிய உரிமையை இழந்து, ஆக்கினைக்குள்ளாவார்கள் என்று விளம்பரம் செய்தான். 

அக்காலத்தில் ஜூலித்தா என்னும் ஒரு புண்ணியவதியிருந்தாள். அவளுக்கு ஏராளமான சொத்துக்கள் இருந்தது. அவ்வூரிலுள்ள தனவந்தன் ஜூலித்தாளுடைய நிலத்தில் பெரும் பகுதியை அநியாயமாக அபகரித்துக்கொண்டான். இதனால் ஜூலித்தா அரசாங்கத்திடம் புகார் செய்தாள். 

நடுவன் குற்றத்தை விசாரிக்கையில், நிலங்களை அநியாய மாக அபகரித்துக்கொண்டவன் நடுவனை நோக்கி, இந்தப் பெண் கிறீஸ்தவள் என்றான். உடனே நடுவன் ஜூலித்தாளைப் பார்த்து: தேவர்களுக்கு நீ தூபங் காட்டினால் உன் நிலத்தை உனக்கு திருப்பித் தருவேன் என்றான். 

அதற்கு வேதசாட்சி என் செல்வங்கள் அனைத்தையும் இழந்த போதிலும், என்னைத் துண்டு துண்டாய் நறுக்கின போதிலும் என் தேவனுக்குத் துரோகம் புரிய மாட்டேன். இவைகளை இழப்பதால் மோட்ச இராச்சியத்தை சுதந்தரித் துக்கொள்வேன் என்றாள். 

இதை நடுவன் கேட்டுக் கோபத்தால் பொங்கி அவளை நெருப்பில் சுட்டெரிக்கும்படி கட்டளையிட்டான். அடுக்கப்பட்ட விறகுக் குவியலின்மேல் வேதசாட்சி நிறுத்தப்படவே, அதில் மூட்டப்பட்ட நெருப்பாலுண்டான புகையால் மூச்சடைப்பு உண்டாகி, உயிர் துறந்து தன் ஆத்துமத்தை சர்வேசுரனிடம் ஒப்படைத்தாள். 

உயர் குலத்தாளான ஜூலித்தா தனது ஏராளமான திரவியங்களை மனது பொருந்தி இழந்து மரித்ததைக் கண்ட பொய் மதத்தார் அதிசயப்பட்டார்கள்.

யோசனை

பாவத்தால் சர்வேசுரனுக்குத் துரோகம் செய்வதிலும் அதிக பெரிய நஷ்டம் வேறொன்றுமில்லை என்று நினைத்துப் பாவத்திற்கு பயப்படுவோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். அப்டனும் சென்னனும், வே.