மார்ச் 30

அர்ச். கீளிமாகஸ் அருளப்பர். மடாதிபதி (கி.பி. 605)

இவர் புத்தி ஞானத்தில் எவ்வளவு தேர்ந்திருந்தாரெனில், சிறு வயதிலேயே சாஸ்திரியென்று அழைக்கப்பட்டார்.

16-ம் வயதில் கீர்த்தி, மகிமையைத் துறந்துவிட்டு, ஒரு வனவாசியிடத்திற் சென்று, சந்நியாசம் புரிந்து, தாழ்ச்சி, கீழ்ப்படிதல் முதலிய சகல புண்ணியங்களையும் உத்தம விதமாய் அநுசரித்து வந்தார்.

தமது குருவான வனவாசி மரித்தபின், வனாந்தரத்திற்குச் சென்று, ஜெப தபத்திலும் வேத புத்தகங்களை வாசிப்பதிலும் காலம் போக்கினார்.

கடுந் தவம் புரிந்து இடைவிடாமல் கண்ணீர் சொரிவார். இவருடைய அரிதான புண்ணியங்களினிமித்தம் அநேக புதுமைகளைச் செய்ய வரம் பெற்றார்.

இவருடைய அர்ச்சியசிஷ்டதனத்தைப்பற்றிக் கேள்விப்பட்ட வர்கள் அவருடைய ஆலோசனையையும் ஞான புத்திமதிகளையும் கேட்கும் பொருட்டு கூட்டங் கூட்டமாய் அவரிடஞ் செல்வார்கள்.

இவருக்கு 79 வயது நடக்கும்போது, ஒரு மடத்திற்கு மடாதிபதியாகத் தெரிந்துகொள்ளப்பட்டார்.

அருளப்பர் தம்மிடம் ஒப்புவிக்கப்பட்ட துறவிகளை தமது புத்திமதியாலும், விசேஷமாக, தமது புண்ணிய நடத்தையாலும் நல்வாழ்வில் வளர்ந்தோங்கச் செய்து சகல புண்ணியங்களையும் அவர்களுக்குப் படிப்பித்து, தமது மரண காலம் கிட்டியிருப்பதை அறிந்து, விசேஷமாக ஜெபத்தின் அவசரத்தை அவர்களுக்கு அறிவித்து அவ்விடத்தைவிட்டு வனாந்தரத்திற்குச் சென்று, அங்கு ஜெபத்திலும் ஏகாந்தத்திலும் ஜீவித்து, அர்ச்சியசிஷ்டவராய் தமது நித்திய முடியைக் கைக்கொண்டார்.

யோசனை 

சர்வேசுரன் நமக்கு அளித்திருக்கும் உலக நன்மையிலும் ஞான நன்மையிலும் தாழ்ச்சியை அநுசரிப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்.

அர்ச். ஜோசிமுஸ், மே..
அர்ச். ரெகுலஸ், மே. .