அர்ச். லீமா ரோசம்மாள் - கன்னிகை
ரோசம்மாள் அமெரிக்காவில் ஏழ்மையான நல்ல கிறீஸ்தவ பெற்றோரிடமிருந்து பிறந்து, சிறுவயதிலேயே புண்ணியத்தில் ஆசைகொண்டு, தர்ம வழியில் சுறுசுறுப்புடன் நடந்து வந்தாள்.
தன் பெற்றோருடைய கஷ்டங்களின் நிமித்தம் ரோசம்மாள் ஒரு துரை வீட்டில் வேலை செய்யும்படி நேரிட்டது. இவள் அழகு மிகுந்தவளானதால் அநேகர் இவளுடைய அழகைப் புகழ்வதை இவள் கண்டு, துக்கித்து, அழகான தன் கூந்தலை அடியோடு கத்தரித்து விட்டு, தன் கைகளை சுண்ணாம்பிலிட்டு காயப்படுத்தி, தன் முகத்தின் அழகையும் பல உபாயங்களால் கெடுத்து விட்டாள்.
தன்னை மணமுடித்துக்கொள்ள அநேகர் முயற்சிப்பதைக் ரோசம்மாள் கண்டு, சேசுநாதரை தன் ஞானப்பத்தாவாகத் தெரிந்துகொண்டு, தோமினிக்குவின் மூன்றாம் சபையில் சேர்ந்து, உத்தம கன்னியாஸ்திரியாய் நடந்தாள்.
மடத்தின் ஒழுங்குகளைச் சீராய் அனுசரித்து, அதன் தபசுகள் தனக்குப் போதாதென்று எண்ணி, மயிர் சட்டையுடன் முள் ஒட்டியானத்தையும் தரித்துக்கொள்வாள். தலையில் முள்முடி தரித்து இரத்தம் வரத் தன்னை அடித்துக்கொள்வாள்.
பிறர் தன் புண்ணியத்தை நகைத்துச் செய்யும் அவமானத்தையும், தன்மேல் கூறி வரும் அவதூறையும் தனக்கு உண்டாயிருக்கும் பெரிய நோயையும் பொறுமையுடன் சகித்து, அவைகளைத் தன் ஞானப்பத்தாவுக்கு ஒப்புக்கொடுப்பாள்.
தேவநற்கருணை இவளுக்கு முக்கிய போசனமாயிருந்தது. இப்புண்ணியவதி தேவதாயார் மீது விசேஷ பக்தி வைத்திருந்தபடியால் மோட்ச இராக்கினியும் அர்ச்சியசிஷ்டவர்களும் சம்மனசுக்களும் இவளுக்குத் தரிசனமாவார்கள்.
இப்புண்ணியவதி சகல துன்பங்களிலும் ஜெபத்தை வல்லமை மிக்க ஆயுதமாகக்கொண்டு சகலத்திலும் உத்தமியாய் நடந்து, தன் 31-ம் வயதில் மரணமடைந்து தன் தேவ பத்தாவின் அரவணைப்புக்குள்ளானாள்.
யோசனை
பாவக் கருத்துடன் தங்களை அலங்கரித்துக்கொண்டு, வாசனைத் திரவியங்களை உபயோகித்து, உடையிலும் நடையிலும் ஒழுங்கீனமாய் நடப்பவர்கள் ரோசம்மாளுடைய சரித்திரத்தைக் கேட்டு நாணக் கடவார்களாக.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். பெலிக்ஸும் துணை. வே.
அர்ச். பியாக்கெர், மு.