அர்ச்.சூசையப்பர் வணக்கமாதம் - மார்ச் 31

அர்ச்.சூசையப்பர்மேல் நாம் வைக்கவேண்டிய பக்தியையும் வணக்கத்தையும் தியானிப்போம் 

தியானம் 

நமது பக்தி வணக்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காண்போம் 

முதலில் நமக்கு நம்பிக்கையுள்ள பக்தி வணக்கம் தேவை. அர்ச். சூசையப்பர் நமக்கு வேண்டிய உதவிகளைச் செய்து நம்மை காப்பாற்றுவார் என நம்பிக்கையோடு செபிப்போம் சேசு கிறிஸ்து சிலுவையில் அறையுண்டிருக்கும் போது மனிதர்கள் மேலுள்ள பாசத்தால் மாமரியன்னைக்கு நம்மை பிள்ளைகளாக்கினார். அதனால் நாமெல்லாம் மாமரியன்னையின் குழந்தைகளாகிவிட்டோம். மனிதர்களெல்லாம்  அர்ச்.சூசையப்பருடைய துணைவியான  மாமரியன்னைக்கு குழந்தைகளாயிருப்பதால் நாமும் அர்ச்.சூசையப்பரின் குழந்தைகளாகிறோம். அதனால் அவர் நம்மை அவரது சொந்த குழந்தைகளாக கொண்டுள்ளார் என்பதில் சந்தேகமில்லை 

இரண்டாவதாக நாம்  அர்ச்.சூசையப்பர்மேல் உள்ள பக்தி நிலையானதாக இருக்கவேண்டும். நாம் அர்ச்.சூசையப்பரை வணங்கி வந்தால் அதனால் கிடைக்கும் பயனை அடைவோம், சிலர் தங்களுக்குத் தேவை ஏற்படும்போது அல்லது துன்பங்கள் வரும் போது மாமரியன்னை , அர்ச்.சூசையப்பர் அல்லது பிற அர்ச்சியஷ்டவகளின் உதவியை நாடி செபிப்பர். கேட்ட வரம் கிடைத்ததும் மாமரியன்னையையும், அர்ச்.சூசையப்பரையும் நினைக்காமலும் செபிக்காமலும் இருப்பதோடு நேர்ச்சை கடனையும் செலுத்துவதில்லை 

சிலர் தங்களுக்கு அனைத்தும் நல்லதாக நடக்கும்போது பக்தியாய் இருந்து புண்ணியத்திலே திளைத்திருப்பர். ஆனால் உடலில் நோயோ, துன்பமோ ஏற்படும்போது மனம் தளர்ந்து தனது நல்ல செயல்களை விட்டுவிடுவார்கள். இவர்களை நிலையானவர்கள் என்று சொல்லமுடியாது. நாம் அப்படி இருக்காது செபங்களையும், நற்செயல்களையும் நிலையாய் செய்யவேண்டும். 

மூன்றாவதாக அர்ச்.சூசையப்பர் மீது நாம் வைத்த பக்தியானது உண்மையாக இருந்தால் நம்மை வெறுமனே இருக்கச் செய்யாது 

என அர்ச்.கிரகோரி பாப்பானவர் எழுதியுள்ளார். தன்னால் முடிந்த அளவு பக்தி வணக்கத்தை செலுத்துவதோடு  பிறரும் அதை கடைப்பிடிக்க செய்ய வேண்டும். பக்தி முயற்சியாக கோவில்களை கட்டுவித்து, பீடங்களை ஸ்தாபித்து திருநாட்களை நல்ல முறையில் சிறப்பு முயற்சி செய்வான் என  அர்ச்.தெரசம்மாளும்,  அர்ச்.பிரான்சீஸ்கு சலேசியாரும் குறிப்பிடுகின்றனர் 

இறுதியாக, இம்மாத முடிவில் நம்மை முழுவதும் அர்ச்.சூசையப்பருக்கு ஒப்புக்கொடுப்பதுமல்லாமல் நமது பிள்ளைகள் குடும்பத்தினர் உற்றார் உறவினரையும் உலக செல்வங்களையும் அவருக்கு காணிக்கையாக வைத்து எல்லோரும் அவரது ஆதரவை கேட்க வேண்டும் 

அர்ச்.சூசையப்பர்மேல் பக்தியுள்ளவர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். ஏழைகள் செல்வத்தையும், நோய்வாய்ப்பட்டவர்கள் ஆரோக்கியத்தையும், அறிவில்லாதவர்கள் கல்வியையும், பலவீனர்கள் தைரியத்தையும் துன்பப்படுகிறவர்கள் தேற்றரவையும், மன அமைதி இழந்தோர் அமைதியையும், போரில் அகப்பட்டவர்கள் சமாதானத்தையும் பாவிகள் மனம்திரும்புவதையும், நல்லவர்கள் புண்ணிய நெறியில் திளைக்கவும், உத்தரிக்கிற ஸ்தலத்தில் உள்ளவர்கள் இரட்சிப்பையும், மரணப்படுக்கையில் இருப்போர் நன்மரணத்தையும் அடையப்பெறுவர் 

புதுமை 

அர்ச்.தெரசம்மாளுக்கு சகலவரங்களையும் அபரிமிதமாக அளித்து வந்தது சரியே. ஒருவருடம் மாமரியன்னை மோட்சத்திற்கு எழுந்தருளிய நாளில் அவர்  அர்ச்.சாமிநாதர் நிறுவிய சபையைச் சார்ந்த ஒரு கோவிலில் செபம் செய்யும்போது பரவசமடைந்து மாமரியன்னையும்  அர்ச்.சூசையப்பரும் தன் மேல் அதிசயமானப் போர்வையைப் போர்த்துவதைக் கண்டு, தாம் அந்நாள் மட்டும் செய்த தவறுகளுக்கு முழு மன்னிப்பு அளிக்கப்படுவதாக உணர்ந்தார். அதன்பின் மாமரியன்னை தன்னுடைய கரங்களை அவர்கள் கரங்களில் வைத்து மகா அன்பைக் காட்டி கூறியதாவது, “நீ எனது பத்தாவாகிய அர்ச்.சூசையப்பரை குறித்துப் பட்ட துன்பங்கள் எனக்கு விருப்பமானதுதான். அதனால் நீ என்னிடம் எதைக் கேட்டாலும் தருகிறேன் என்றார். பின்னர் கையில் விலைமதிப்பில்லா ஒரு

மாணிக்கத்தையும் கழுத்திலே தங்க சிலுவையையும் வைத்தார்கள். 

அர்ச். பெரிய தெரசம்மாள் பெற்ற தந்தையை மகன் நேசிப்பதுபோல அர்ச்.சூசையப்பரை வணங்கி பல முக்கிய செயல்ளைச் செய்தார்கள். 1582-ஆம் ஆண்டில் நன் மரணம் அடைந்தார்கள். அவரது உடல் இன்னும் அழிவில்லாமல் இருப்பது தவிர பரிமள வாசனை வீசிக்கொண்டிருந்தது. சில வருடங்களுக்குப் பின் அவருக்கு புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது. அவருக்கு புனிதர் பட்டம் கிடைத்ததால் கார்மல் சபை கன்னியர் மகிழ்ந்தனர். துறவற இல்லம் அர்ச்.சூசையப்பர் பெயரால் நிறுவப்பட்டது மாற்றி  அர்ச்.தெரசம்மாள் பெயரால் மாற்ற ஆலோசனை செய்த போது  அர்ச்.தெரசம்மாள் ஒரு கன்னிகையின் கனவில் கோபத்தோடு தோன்றி "என்னுடைய பெயரை அர்ச்.சூசையப்பர் பெயருக்கு பதிலாக மாற்றக்கூடாது" என்றார். அர்ச்.தெரசம்மாள் உயிரோடிருந்த போதும் இறந்த பிறகும் அர்ச்.சூசையப்பரின் பெயரை மகிமைப்படுத்தினார்கள் 

கிறிஸ்தவர்களாகிய நாம்  அர்ச்.சூசையப்பர் எல்லா வழிகளிலும் நம்மை ஆதரித்துக் காப்பாற்றுவார் என உறுதியாய் அறிந்து அவரை முழுமையாக நம்பி செபிப்போம் (1பர, 3அரு, திரி) 

செபம் 

பரலோகத்திலும் பூவுலகிலும் அதிக மகிமையோடு விளங்குகிற பிதா பிதாவாகிய அர்ச்.சூசையப்பரே! உம்மை வணங்கி புகழ்கிறோம். எங்கள் பாவங்களால் நாங்கள் உமக்கு ஏற்புடையவர்களாக இல்லாதிருந்தபோதும் உமது கிருபை நிறைந்த அன்பை நினைத்து உறுதியான நம்பிக்கை விசுவாசத்தோடு உம்மை நாடி வருகிறோம். நாங்கள் இறக்குமளவும் தேவ அன்பை பாவத்தால் இழந்துவிடாமல் புண்ணிய வழியில் உறுதியாய் நடக்கச் செய்தருளும் சேசுவிடமும் மாமரியன்னையிடமும் எங்களுக்காகப் பேசி நன் மரணத்தையும். மோட்சபேரின்பமும் கிடைக்கச் செய்தருளும் உமது பிள்ளைகளாயிருக்கிற எங்களில் ஒருவரையும் நரகத்திற்குச் செல்ல அனுமதியாமல் நாங்கள் உம்மோடு மோட்ச பேரின்பத்தை அனுபவிக்க உதவி செய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். 

ஆமென். 

இன்று சொல்ல வேண்டிய செபம் 

எங்கள் தந்தையாகிய  அர்ச்.சூசையப்பரே! உம்மை எப்போதும் வணங்குவோம். 

எங்கள் தந்தையாகிய  அர்ச்.சூசையப்பரே உம்மை எப்போதும் நம்புவோம் 

எங்கள் தந்தையாகிய புனித சூசையப்பரே உம்மை எப்போதும் வணங்குவோம். 

இன்று செய்ய வேண்டிய நற்செயல் 

இன்று அல்லது வருகின்ற ஞாயிற்றுக்கிழமையாவது  அர்ச்.சூசையப்பரைக் குறித்து திவ்விய நற்கருணை பெறுவது 

கிறிஸ்து இயேசுவில் பிரியமுள்ள சகோதர சகோதரிகளே இன்றோடு அர்ச். சூசையப்பர் வணக்கம் மாதம் நிறைவு பெறுகிறது மீண்டும் மே மாதம் தேவமாதாவின் வணக்கம் மாதம் தொடங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் 

திருக் குடும்பத்தின் தலைவரான பிதா பிதாவாகிய அர்ச். சூசையப்பரே எங்களுக்காக உமது திருக் குமாரனை வேண்டிக் கொள்ளுங்கள்