கி.பி. 313ஆம் ஆண்டு முதல் கி.பி. 476ஆம் ஆண்டு வரையிலான நிகழ்வுகள்.
கி.பி. 313ஆம் ஆண்டு: காண்ஸ்டண்டைன் பேரரசன் மிலான் பேரறிக்கை (Edict of Milan) என்னும் சாசனத்தை அறிவிக்கிறார். அதன்படி, கிறித்தவர்களைத் துன்புறுத்தும் செயல் நிறுத்தப்படுகிறது. உரோமைப் பேரரசு கிறித்தவர்களுக்கு எதிராகச் செயல்பட்டுவந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அணிசாரா நிலையை மேற்கொள்கிறது. கிறித்தவர் தம் சமய நம்பிக்கையை அரசு தலையீடின்றிக் கடைப்பிடிக்கலாம் என்று அறிவிக்கப்படுகிறது.
கி.பி. 318ஆம் ஆண்டு: ஆரியுசு (Arius) என்பவர் திருச்சபையால் கண்டிக்கப்படுகிறார். இவர் எகிப்து நாட்டு அலெக்சாந்திரியாவில் குருவாக இருந்தவர். இவர் கூறியது: ஒரே கடவுள் தந்தை, மகன், தூய ஆவி என்றிருந்தாலும், மகன் தந்தைக்கு நிகரானவர் என்றோ, நித்தியமாக நிலைத்திருந்தவர் என்றோ, தந்தையோடு "ஒரே பொருளாக" (consubstantial) உள்ளார் என்றோ கூறுவது தவறு. மகன் தந்தைக்குத் தாழ்ந்தவரே. ஆரியுசின் கொள்கை தவறானது என்று திருச்சபை அறிவிக்கிறது.
ஆரியுசின் கொள்கையிலிருந்து திருச்சபையின் போதனை வேறுபடுகிறது. கிறித்தவக் கொள்கைப்படி, தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூவரும் கடவுள் தன்மை கொண்டவர்களே. ஒரே கடவுள் மூன்று ஆள்களாக இருக்கின்றார். தந்தையோடு மகனும் நித்தியமாகவே இருக்கின்றார். இக்கொள்கையை வலியுறுத்தி நிலைநாட்டியோரில் முக்கியமானவர் புனித அத்தனாசியுசு (Saint Athanasius) ஆவார்.
கி.பி. 321ஆம் ஆண்டு: திருச்சபை சொத்துக்களை உடைமையாகக் கொண்டிருக்க காண்ஸ்டண்டைன் மன்னர் உரிமை வழங்குகிறார். இலாத்தரானி குடும்பத்திற்கு உரிமையான அரண்மனையை மன்னர் கான்ஸ்டன்டைன் திருத்தந்தை மில்த்தியாடெசு என்பவருக்கு அளிக்கிறார். அங்குக் கட்டியெழுப்பப்பட்ட "உலக மீட்பர் இயேசு" என்னும் பேராலயம் (Lateran Basilica) போப்பாண்டவரின் உறைவிடமாகவும் அலுவலக இருப்பிடமாகவும் மாறுகிறது.
கி.பி. 324ஆம் ஆண்டு, நவம்பர் 3ஆம் நாள்: உரோமைப் பேரரசின் கீழைப்பகுதியாகிய பிசான்சியம் (Byzantium) என்னும் மண்டலத்தில் மன்னர் காண்ஸ்டண்டைன் புதியதொரு தலைநகருக்கு அடித்தளம் இடுகிறார். இதுவே பின்னர் காண்ஸ்டாண்டிநோப்புள் (Constantinople) என்னும் பெயரைப் பெற்றது.
கி.பி. 325ஆம் ஆண்டு: ஆரியுசு என்பவரின் தப்பறைக் கொள்கை அலெக்சாந்திரியா நகரில் பல குழப்பங்களும் வன்முறையும் ஏற்பட காரணமாகிறது.
கி.பி. 325ஆம் ஆண்டு: முதலாம் நிசேயா பொதுச்சங்கம் நிகழ்கிறது. இன்றைய துருக்கி நாட்டில் உள்ள ஈஸ்னிக் ( İznik ) என்னும் இடமே அன்று நிசேயா (Nicaea) அழைக்கப்பட்டது. சங்கத்தைக் கூட்டியவர் காண்ஸ்டண்டைன் பேரரசன். இப்பொதுச்சங்கத்தில் கிறித்தவ சமயத்தின் தலைவர்களாகிய ஆயர்கள் உரோமைப் பேரரசின் மேற்குப் பகுதியிலிருந்தும் கிழக்குப் பகுதியிலிருந்தும் கலந்துகொண்டனர். சங்கத்தில் பங்கேற்றவர்களுள் அக்கால பாரசீகம் மற்றும் பெரும் இந்தியா பகுதிகளுக்கு ஆயராக இருந்த யோவான் என்பவரும் ஒருவர். மூவொரு கடவுளாக விளங்கும் தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூவரும் கடவுள் தன்மையில் "ஒரே பொருளாக" (consubstantial) உள்ளார்கள் என்னும் கொள்கை கிறித்தவத்தின் உண்மைக் கொள்கையாகப் பிரகடனம் செய்யப்பட்டது. அதை எதிர்த்த ஆரியுசும் அவர்தம் ஆதரவாளர்களும் கண்டனம் செய்யப்பட்டார்கள். நிசேயா சங்கத்தில் நிசேயா நம்பிக்கை அறிக்கை என்னும் "கிறித்தவ நம்பிக்கைத் திரட்டு" (Nicean Creed) தொகுக்கப்பட்டு கிறித்தவத்தின் அடிப்படைக் கோட்பாடாக அறிவிக்கப்பட்டது.
கி.பி. 326, நவம்பர் 18: வத்திக்கான் குன்றில் புனித பேதுரு திருத்தூதரின் கல்லறைமீது மன்னர் காண்ஸ்டண்டைன் கட்டிய கோவிலைப் திருத்தந்தை முதலாம் சில்வெஸ்தர் என்பவர் அர்ச்சிக்கிறார்.
கி.பி. 380, பெப்ருவரி: உரோமை பேரரசின் அதிகாரப்பூர்வமான மதமாக கிறித்தவம் அறிவிக்கப்படுகிறது. இந்த அறிக்கையை மன்னர் முதலாம் தியொடோசியசு (Theodosius I) தெசலோனிக்கா நகரில் அறிவிக்க, அது காண்ஸ்தாந்திநோபுள் நகரில் பிரகடனப்படுத்தப்பட்டது.
கி.பி. 381ஆம் ஆண்டு: முதலாம் காண்ஸ்தாந்திநோபுள் பொதுச்சங்கம் கூடுகிறது.
கி.பி. 382ஆம் ஆண்டு: திருத்தந்தை முதலாம் தாமசுஸ் (Pope Damasus I) என்பவர் உரோமையில் ஒரு சங்கத்தைக் கூட்டுகிறார். அச்சங்கம் பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் உள்ளடக்கிய கிறித்தவத் திருவிவிலியத்தில் அதிகாரப்பூர்வமாக எந்தெந்த நூல்கள் அடங்கியுள்ளன என்பதை அறுதியாக வரையறுக்கிறது (விவிலியத் திருமுறை - Biblical Canon). அந்நூல்கள் தவிர வேறு எந்த நூலும் விவிலிய நூலாகக் கருதப்படமாட்டாது என்று அறிக்கையிடுகிறது.
கி.பி. 391ஆம் ஆண்டு: கிறித்தவத்திற்கு முற்பட்ட பிற சமயங்களைச் சார்ந்த சடங்குகளைக் கடைப்பிடிப்பது சட்டமீறல் ஆகும் என்னும் அறிக்கையை மன்னர் முதலாம் தியொடோசியசு பிறப்பிக்கிறார். இதைத் தொடர்ந்து பெரும்பான்மையான மக்கள் கிறித்தவத்தைத் தழுவுகிறார்கள்.
கி.பி. 400ஆம் ஆண்டு: புனித எரோணிமுசு (ஜெரோம்) என்பவர் எபிரேயத்திலிருந்தும் கிரேக்கத்திலிருந்தும் பெயர்க்கப்பட்ட விவிலியத்தின் இலத்தீன் மொழிபெயர்ப்பை வெளியிடுகிறார். வுல்காத்தா (Vulgata = Vulgate) என்று அழைக்கப்படும் இந்த மொழிபெயர்ப்பு "பொது மொழிபெயர்ப்பு" அல்லது "மக்கள் பெயர்ப்பு" என்னும் பொருளுடைத்தது. இந்த மொழிபெயர்ப்புதான் கத்தோலிக்க திருச்சபையில் நீண்டகாலம் வழக்கத்தில் இருந்துவந்துள்ளது. மறுமலர்ச்சிக் காலத்திற்குப் பிறகு வேறு மொழிபெயர்ப்புகள் தோன்றலாயின. 20ஆம் நூற்றாண்டின் இறுதிவரை "வுல்காத்தா" கத்தோலிக்க சபையின் வழிபாட்டில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பிற மொழிபெயர்ப்புகளுக்கு ஒரு முக்கிய ஆதாரமாக இன்றும் இப்பெயர்ப்பு உள்ளது.
கி.பி. 410, ஆகத்து 24: உரோமை நகர் சூறையாடப்படுகிறது. அலாரிக் என்பவர் தலைமையில் விசிகோத்து (Visigoths) என்னும் இனத்தவர் உரோமைமீது படையெடுத்து வந்து, உரோமையின் வடகிழக்கில் அமைந்துள்ள "சலாரியா வாயில்" (Porta Salaria) என்னும் நகர்வாயில் வழி உள்நுழைந்தனர்.
கி.பி. 431ஆம் ஆண்டு: எபேசு பொதுச்சங்கம் (Council of Ephesus) கூடுகிறது. அச்சங்கம் அறிக்கையிட்ட கோட்பாட்டு முடிவுகள்: இயேசு ஒரே சமயத்தில் கடவுளாகவும் மனிதராகவும் இருக்கிறார்; தூய திரித்துவத்தில் அவர் தந்தையோடும் தூய ஆவியோடும் கடவுள் நிலையில் அவர்களுக்கு இணையாக உள்ளார். கி.பி. 325இல் நிசேயா நகரில் கூடிய சங்கத்தில் வரையறுக்கப்பட்ட நிசேயா நம்பிக்கை அறிக்கை எனும் "கிறித்தவ நம்பிக்கைத் திரட்டு" (Nicean Creed) கிறித்தவத்தின் அடிப்படைக் கோட்பாடாக விளங்கும் என்று எபேசு சங்கம் அறிவித்தது.
கி.பி. 451, அக்டோபர் 8ஆம் நாள்: திருச்சபையின் நான்காம் பொதுச்சங்கம் கால்செதோன் நகரில் கூடுகிறது.
கி.பி. 451, நவம்பர் 1: கால்செதோன் பொதுச்சங்கம் நிறைவுக்கு வருகிறது. கால்செதோன் "கிறித்தவ நம்பிக்கைத் திரட்டு" (Calcedonian Creed) வெளியிடப்படுகிறது. அதன்படி: இயேசு கிறித்து உண்மையிலேயே கடவுளும் மனிதரும் ஆவார்; தூய கன்னி மரியா "கடவுளின் தாய்" ஆவார். யூட்டிக்கசு (Eutyches) என்பவர் திருச்சபை விலக்கம் செய்யப்படுகிறார். இது "மரபுவழாக் கீழைச்சபை" (Oriental Orthodoxy) தோன்ற வழிவகுக்கிறது.
கி.பி. 452ஆம் ஆண்டு: ஆட்டிலா என்னும் ஹுன் இனப் போர்வீரர் (Attila the Hun) உரோமை நகரைச் சூறையாட வருகிறார். திருத்தந்தை முதலாம் லியோ (Pope Leo the Great) ஆட்டிலாவை எதிர்கொண்டு சென்று, உரோமை நகரைச் சூறையாடுவதிலிருந்து தடுக்கிறார்.
கி.பி. 455ஆம் ஆண்டு: வாண்டல் இனத்தவர் (Vandals) உரோமை நகரைச் சூறையாடுகிறார்கள். உரோமைத் தளபதி தீத்து (Titus) கி.பி. 70இல் எருசலேமைச் சூறையாடி எருசலேம் திருக்கோவிலிலிருந்து கொள்ளையடித்த பொருட்களை இப்பொழுது வாண்டல் இனத்தவர் கொள்ளையடித்துத் தம் நகராகிய கார்த்தேஜுக்குக் கொண்டுசெல்கிறார்கள்.
கி.பி. 476, செப்டம்பர் 4: ரோமுலசு அகுஸ்துசு (Romulus Augustus) என்னும் உரோமை மன்னர் பதவியிறக்கம் செய்யப்படுகிறார். இதுவே மேற்கத்திய உரோமைப் பேரரசின் வீழ்ச்சியாகப் பல வரலாற்றாசிரியர்களால் கருதப்படுகிறது. கிறித்தவத் திருச்சபை உரோமைப் பேரரசின் கிழக்குப் பகுதியின்மீது கவனத்தைத் திருப்புகிறது. காண்ஸ்தாந்திநோபுள் நகரைத் தலைநகராகக் கொண்ட பிசான்சியம் என்று அழைக்கப்படுகின்ற கீழைப் பேரரசுப் பகுதிகளில் கிறித்தவம் விரைவாகப் பரவுகிறது.