ஜுலை 31

அர்ச். இஞ்ஞாசியார் - துதியர் (கி.பி. 1556)

இஞ்ஞாசியார் ஸ்பெயின் தேசத்தில் பணக்காரக் குடும்பத்தில் பிறந்து, அத்தேசத்து அரசனுடைய அரண்மனையில் வளர்ந்து, படையில் சேர்ந்து பம்பலூனாவில் நடந்த யுத்தத்தில் காயமடைந்தார். 

காயத்தால் காய்ச்சல் உண்டாகி வேதனைப்படுகையில் தற்செயலாய் அங்கிருந்த அர்ச்சியசிஷ்டவர்களின் சரித்திரப் புத்தகங்களை வாசித்து வேறு மனிதனாகி, உலகத்தைத் துறந்து சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்யத் தீர்மானித்தார். 

காயம் குணமான பின் தேவமாதா கோவிலுக்குச் சென்று தமது வாளை அங்கு தொங்க விட்டுவிட்டு, ஏழை வஸ்திரம் தரித்துக்கொண்டு பிறரிடம் கேட்டுப் புசித்தார். ஒரு குகையில் வசித்து அடிக்கடி ஒருசந்தியிருந்து, தமது சரீரத்தைக் குரூரமாய் அடித்து உபாதித்து இடைவிடாமல் ஜெபத் தியானஞ் செய்வார். 

இவருக்குத் தேவதாயார் தரிசனையாகி ஞானத் தியானங்களை எழுத உதவி செய்தார்கள். பிறகு கல்விச்சாலையில் வேத சாஸ்திரங்களைப் படித்து, சில துணைவருடன் உரோமாபுரிக்குச் சென்று, அவ்விடத்தில் அவர் குருப்பட்டம் பெற்று, பரிசுத்த பாப்பரசரின் அனுமதியுடன் சேசு சபையை ஸ்தாபித்தார். 

சில காலத்திற்குள் இந்த பெயர்பெற்ற சபை தேசமெங்கும் பரவி திருச்சபைக்கு மட்டற்ற பிரயோசனத்தை உண்டாக்கியது. அக்காலத்தில் சவேரியாரை இஞ்ஞாசியார் நமது தேசத்திற்கு அனுப்பினார். இஞ்ஞாசியார் சேசு சபைக்கு அநேக வருடம் சிரேஷ்டராயிருந்து வியாதியினிமித்தம் அவ்வலுவலை விட்டு விலகினார். 

நமது கர்த்தர் இவருக்குத் தோன்றி உன் சபைக்குத் துன்பதுரிதங்களைக் கொடுப்போமென்றார். அவ்வாறே சேசு சபை எப்போதும் துஷ்டர்களால் வரும் துன்பங்களை அனுபவித்து வருகிறது. 

இஞ்ஞாசியார் திருச்சபைக்காக உழைத்து சகலத்தையும் சர்வேசுரனுடைய மேலான மகிமைக்காகச் செய்து பாக்கியமான மரணமடைந்தார்.

யோசனை 

நாமும் எதைச் செய்தாலும் அதை சர்வேசுரனுடைய மகிமைக்காகச் செய்வோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். ஜான் கொலும்பினி, து. 
அர்ச். எலேன், வே.