அர்ச். குயின்டின் - வேதசாட்சி (கி.பி. 287)
உரோமாபுரியில் பிரபுவான குயின்டின் என்பவர் பிறருடைய ஆத்தும இரட்சண்யத்தின் மட்டில் அதிக அக்கறைக்கொண்டு அர்ச்.லூசியன் என்பவருடன் காலியா தேசத்திற்குப் பிரயாணஞ் செய்து, அவ்விடத்தில் தங்களுடைய சிறந்த பிரசங்கங்களால் அநேகரை மனந்திருப்பினார்கள்.
குயின்டின் ஆமியன்ஸ் என்னும் நகருக்குச் சென்று ஜெப தபத்தாலும் ஒருசந்தி உபவாசத்தாலும் தேவ உதவியை மன்றாடி மகா தேவ சிநேக பற்றுதலுடன் அஞ்ஞானிகளுக்கு வேதம் போதித்தார். இவருடைய நல்ல ஆசையை சர்வேசுரன் அநேக புதுமை வரத்தால் ஆசீர்வதித்தார்.
குயின்டின் தமது வேண்டுதலால் பேய்களை ஓட்டி, குருடர், முடவர் முதலிய நோயாளிகளைக் குணப்படுத்தி, காற்றுப் புயலை அமர்த்துவதைக் கண்ட திரளான அஞ்ஞானிகள் சத்திய வேதத்தில் சேர்ந்தார்கள்.
அந்நாட்டின் அதிபதி அதைப்பற்றி கேள்விப்பட்டு குயின்டினைப் பிடித்து சிறைப்படுத்தி நயபயத்தைக் காட்டி, அவர் சத்திய வேதத்தை மறுதலிக்கும்படி செய்த முயற்சியெல்லாம் வீணானதால் அவன் அவரை கொடூரமாய் அடித்து சிறையிலடைத்தான்.
ஒரு சம்மனசால் அவர் அங்கிருந்து விடுதலையாகி வெளியே போய் பிரசங்கம் செய்கையில், மறுபடியும் அவர் பிடிபட்டு வதைக்கப்பட்டார். சக்கரத்தில் கட்டி உருட்டப்பட்டார். கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் அமிழ்த்தப்பட்டார். நெருப்புப் பந்தங்களால் சுடப்பட்டார். அவர் கைகளில் கூர்மையான ஆணிகள் ஏற்றப்பட்டன.
அவர் கொடூர வாதைகளைப் பொறுமையுடன் சகித்து சாகாதிருப்பதைக் கண்ட அதிபதி சினங்கொண்டு, அவரைச் சிரச்சேதம் செய்வித்தான்.
யோசனை
வேதத்திற்காக மரித்து நாம் நம்மை சர்வேசுரனுக்குப் பலியிடாவிடினும் நமது ஆத்துமத்தையும் சரீரத்தையும் அடக்கி ஒறுத்து சர்வேசுரனுக்குப் பலி செலுத்துவோமாக.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். ஊல்ப்காங், மே.
அர்ச். பாயில்லான், வே.