அர்ச். மெரிஸி ஆஞ்செலம்மாள். கன்னிகை (கி.பி.1540)
ஆஞ்செலா பக்தியுள்ள பெற்றோரிடமிருந்து பிறந்து அவர்களுடைய நற்புத்தியால் பாவத்தை வெறுத்து, புண்ணிய வழியில் சுறுசுறுப்புடன் வாழ்ந்து வந்தாள். சிறு வயதில் விளையாட்டு வேடிக்கையை விலக்கி, கோவிலுக்குச் சென்று ஜெபிப்பாள்.
இவள் வீட்டில் இரவு வேளையில் பொதுவில் வாசிக்கப் படும் அர்ச்சியசிஷ்டவர்களின் சரித்திரங்களைக் கவனமாய் கேட்டு, அவர்களது தர்ம மாதிரிகையைப் பின்பற்ற முயலுவாள்.
இளம் வயதிலே இவளுடைய பெற்றோரும் சகோதரியும் இறந்தபடியால், ஆஞ்செலா துக்கித்து அழுதாள், அப்போது மோட்ச இராக்கினி அவளுக்குத் தரிசனையாகி அவளைத் தேற்றி ஆறுதல் கூறினாள்.
இவள் தன் கன்னிமையை சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்து அதற்குப் பழுது வராதபடி தன் புலன்களை இடைவிடாமல் அடக்கி ஒறுப்பாள்.
அடிக்கடி ஒருசந்தி இருந்து கடுந் தபம் புரிவாள். இவள் அடிக்கடி நன்மை வாங்கினபின் வெகு நேரம் பரவசமாவாள்.
பலமுறை அவள் மேலே உயர்த்தப் பட்டிருப்பதை மற்றவர்கள் கண்டு அதிசயிப்பார்கள்.
இவள் தேவநற்கருணை யைத் தவிர வேறு ஆகாரமின்றி அநேக காலம் பிழைத்திருந்தாள். ஓய்வு நேரங்களில் ஏழைகளுக்கு உதவி செய்வாள். மருத்துவமனைக்குப் போய் நோயாளிகளுக்கு தன்னால் முடிந்த அளவு உதவிகளைப் புரிவாள்.
ஆஞ்செலா இறப்பதற்குமுன் ஒரு கன்னியாஸ்திரி சபையை ஸ்தாபித்து, இவள் அந்தக் கன்னியரை எவ்வளவு அர்ச்சியசிஷ்டதனத்தில் நடத்தினாளென்றால், அவர்கள் சம்மனசுக்களைப் போல பரிசுத்தராய் வாழ்ந்து வந்தார்கள்.
இப்புண்ணியவதி மரித்து அடக்கம் செய்யப்பட்டபின் அவள் சரீரம் வெகு காலம் அழியாமல் இருந்தது.
யோசனை
அர்ச்சியசிஷ்டவர்களின் சரித்திரத்தையாவது அல்லது யாதொரு ஞானப் புத்தகத்தையாவது நாள்தோறும் வாசிப்போமாக.
இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்
அர்ச். பெட்ரோனில்லா, க.
அர்ச். கான்சியுஸும் துணைவரும் வே.