ஆகஸ்ட் 31

அர்ச். பிறவா ரெயீமுந்தப்பர் - துதியர் (கி.பி. 1240) 

இவர் இறந்துபோன தன் தாயின் வயிற்றிலிருந்து உயிருடன் எடுக்கப் பட்டபடியால், பிறவாத ரெயீமுந்து என்று அழைக்கப்படுகிறார். 

இவர் சுறுசுறுப் புடன் கல்விப்பயிலுகையில் துறவியாய்ப் போக இவருக்கு ஆசை உண்டாகி யிருப்பதை இவர் தகப்பன் கண்டு கிராமத்தில் தனக்கிருந்த பயிர் நிலங்களை கவனிக்கும்படி இவரை அனுப்பினார். 

அவ்விடத்தில் ரெயீமுந்தப்பர் ஜெப தபங்களைச் செய்து, தேவதாயார் மீது விசேஷ பக்தி வைத்து, ஒரு அர்ச்சிய சிஷ்டவரைப் போல புண்ணிய வழியில் நடந்தார். 

தேவமாதாவின் ஏவுதலினால் இவர் அடிமைகளை மீட்கும் சபையில் சேர்ந்து, புண்ணியத்தில் எவ்வளவு உத்தமமாய் நடந்தாரெனில், இவருடைய சிரேஷ்டர் அடிமைகளை மீட்கும்படி துலுக்கருடைய இராச்சியத்திற்கு இவரை அனுப்பினார். 

ரெயீமுந்தப்பர் ஏராளமாய் தர்மஞ் செய்து, அடிமைகளான அநேக கிறீஸ்தவர்களை மீட்டார். பணம் கையில் இல்லாதபோது தம்மையே அடிமைப்படுத்தி கிறீஸ்தவர்களை மீட்பார். 

அந்த தேசத்தில் இவர் கிறீஸ்தவர்களுக்கு பிரசங்கித்ததுடன் துலுக்கருக்கும் வேதம் போதித்து, அநேகருக்கு ஞானஸ்நானம் கொடுத்தபடியால், துலுக்கர்களின் அரசன் இவரை கடுமையாய் அடித்து, இவருடைய வாய்க்குப் பூட்டு போட்டு, கடுஞ் சிறையில் வைத்தான். 

அவ்விடத்திலும் மனஞ் சோராமல் சர்வேசுரனை ஸ்துதித்து பிறருடைய ஆத்தும இரட்சண்யத்திற்காக உழைத்து வந்தார். இவருடைய மேலான புண்ணியங்களைப்பற்றிக் கேள்விப்பட்ட பாப்பாண்டவர், ரெயீமுந்தப்பருக்குக் கர்தினால் பட்டம் கொடுக்க அவரைத் தம்மிடம் வரும்படிச் சொன்னார். 

இவர் உரோமைக்கு கால்நடையாய் நடந்து போகும்போது, சடுதியில் வியாதியுற்று, அருகாமையில் குருவானவர் இல்லாதபடியால் சம்மனசுக்களால் அவஸ்தையும் அவஸ்தை நன்மையும் பெற்று பாக்கியமான மரணமடைந்து தேவ தரிசனத்திற்குள்ளானார்

யோசனை 

தங்கள் பண்ணைக்காரர் முதலிய ஊழியரைக் குரூரமாய் நடத்தா திருப்பதுடன் அவர்கள் ஞாயிறு வாரங்களை அனுசரித்து, தகுந்த நேரத்தில் தேவதிரவிய அநுமானங்களைப் பெறும்படி பார்த்துக்கொள்வது எஜமானருக்குக் கடமையாகும்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். இசபெல், க. 
அர்ச். ஏய்டன், மே.