8ம் சங்கீதம்
எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே! உம்முடைய நாமம் பூவுலகெங்கும் எவ்வளவு ஆச்சரியத்துக்குரியதாயிருக்கிறது!
ஏனெனில் உம்முடைய மகத்துவம் பரமண்டலங்களுக்கு மேலே உயர்த்தப் பட்டிருக்கிறது.
பகைவனையும், பழிகாரனையும் அழிக்கத் தக்கதாக, தேவரீருடைய சத்துருக்களின் நிமித்தம் குழந்தைகளுடைய வாயிலும் பாலர்களுடைய வாயிலும் நின்று உத்தமப் புகழுண்டாகப் பண்ணினீர்.
ஏனெனில் தேவரீருடைய கரங்களின் வேலைகளாகிய உமது வான மண்டலங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும், நட்சத்திரங்களையும் நான் பார்க்குமிடத்தில்,
ஓ, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷப் புத்திரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்?
நீர் அவனைத் தேவதூதரிலும் சற்றுத் தாழ்த்தி மகிமையினாலும், கனத்தினாலும் அவனுக்கு முடிசூட்டினீர். உமது கரங்களின் செய்கைகளின் மேல் அவனுக்கு அதிகாரம் கொடுத்தருளினீர்.
சகல ஆடுகள், காட்டு மிருகங்கள், ஆகாயத்துப் பறவைகள், சமுத்திரத்தின் விசாலத்தில் உலாவும் மச்சங்கள் முதலிய சகல ஜந்துக்களையும் அவனுடைய கால்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.
ஓ, எங்கள் ஆண்டவராகிய சர்வேசுரா, பூவுலகெங்கும் உம்முடைய திருநாமம் எவ்வளவு ஆச்சரியத்திற்குரியதாய் இருக்கிறது!
பிதாவுக்கும் சுதனுக்கும்.....
18ம் சங்கீதம்
வான மண்டலங்கள் சர்வேசுரனுடைய மகிமையை விளக்கிக் கூறுகின்றன. ஆகாய விரிவு அவர்தம் கரங்களின் கிரியைகளைக் காட்டுகிறது.
பகல் பகலுக்கு இச்சத்தியத்தை உரைக்கின்றது. இரவு இரவுக்கு அறிக்கையிடுகின்றது. அவைகளுடைய சத்தங்கள் கேட்கப்படாத பேச்சுமில்லை, பாஷையுமில்லை.
அவைகளின் சத்தம் பூமியயங்கும் சென்றது. பூலோக கடைசி எல்லை வரைக்கும் அவைகளின் வார்த்தைகள் எட்டின.
அவர் சூரியனில் தமது கூடாரத்தை ஸ்தாபித்தார்; அதுவோ மணவறையில் நின்று புறப்படுகிற மணவாளனைப் போலத் தன் வழிச் செல்ல எழுந்திருக்கின்றது.
அது வானத்தின் முனையிலிருந்து புறப்பட்டு மறுமுனை வரைக்கும் சென்று ஓடுகிறது. அதன் வெப்பத்திற்கு ஒருவனும் மறைகிறதில்லை.
ஆண்டவருடைய கட்டளைகள் நேர்மையுள்ளவைகளாதலால் (இவைகளால்) ஆத்துமாக்களுக்கு இரட்சணியமுண்டு.
ஆண்டவருடைய சாட்சி பிரமாணிக்கமுள்ளதாகையால் சிறியோருக்கு ஞானம் கொடுக்கிறது.
ஆண்டவரின் கற்பனை ஒளிகொண்டதினால் கண்களுக்குப் பிரகாசம் கொடுக்கிறது. தேவ பயம் பரிசுத்தமுள்ளதும் என்றென்றைக்கும் நிலைநிற்பதுமாயிருக்கின்றது.
ஆண்டவருடைய நீதிகள் சத்தியமானவையும் சுயமாய் நீதிகொண்டனவாயும் இருக்கின்றன. அவைகள் பொன்னிலும், மிகவும் விலையேறப் பெற்ற கல்லிலும் ஆசிக்கப்படத்தக்கவைகள்; தேனிலும், தேனடையிலும் மிகவும் மதுரம் பொருந்தியனவாயிருக்கின்றன. ஆகையால் உமது தாசன் அவைகளை அனுசரிக்கிறான்; அவைகளை அனுசரிப்பதில் வெகு சம்பாவனையுண்டு.
தன் தப்பிதங்களை அறிகிறவன் யார்? தெரியாமல் நான் கட்டிக்கொண்ட குற்றங்களில் நின்று என்னை நீக்கி விடும். பிறர் பாவங்களில் நின்று உமது அடியானை விலக்கியருளும்.
அவை என்னையாளாவிட்டால் நான் களங்கமற்றவனாயிருப்பேன்; அன்றியும் பெரும் பாவங்களிலிருந்து சுத்திகரப்படுவேன்.
என் நாவின் வார்த்தைகள் உமக்கு பிரியப்படுகிறதாயிருக்கும்; என் இருதயத்தின் தியானம் எப்போதும் உமது சமூகத்திலிருக்கும்; ஆண்டவரே! நீரே எனக்கு ஆதரவும் இரட்சணியமுமாயிருக்கிறீர்.
பிதாவுக்கும் சுதனுக்கும்....
23ம் சங்கீதம்
பூமியும் அதிலடங்கிய சகலமும், பூமண்டலத்தின் சக்கரமும், அதில் வாழும் சகலமும் தேவனுக்குச் சொந்தம்.
ஏனெனில், அவரே சமுத்திரங்களுக்கு மேலே, அதற்கு அஸ்திவாரம் போட்டு நதிகளுக்கு மேலே அதை ஸ்தாபித்திருக்கிறார்.
ஆண்டவருடைய பர்வதத்தின் பேரில் ஏறுகிறவன் யார்? அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் வீற்றிருப்பவன் யார்?
வீணில் தன் ஆத்துமாவை உபயோகப் படுத்தாமலும், தன் புறத்தியானுக்குக் கபடாய் ஆணையிடாமலும் கரங்களில் மாசற்றவனும் இருதயத்தில் பரிசுத்தமுள்ளவனுமாயிருப்பவன் தான்.
அவன் கர்த்தரிடத்தில் ஆசீர்வாதத்தையும், தன் இரட்சணிய தேவனிடத்தில் இரக்கத்தையும் பெறுவான். இதுதான் அவரைத் தேடுகிறவர்களுடைய சந்ததியும் யாக்கோபுவின் தேவனைத் தேடுகிறவர்களுடைய சந்ததியுமாம்.
இளவரசர்களே! உங்கள் கதவுகளை உயர்த்துங்கள்; நித்திய கபாடங்களே! உயர்ந்து நில்லுங்கள்;மகிமையின் அரசர் உட்பிரவேசம் பண்ணுவார்.அந்த மகிமையின் அரசர் யார்? பராக்கிரமும் வல்லவருமான ஆண்டவர்; யுத்தத்தில் பராக்கிரமமுள்ள கர்த்தர் தான்.
இளவரசர்களே! உங்கள் கதவுகளை உயர்த்துங்கள்; நித்திய கபாடங்களே! உயர்ந்து நில்லுங்கள்;மகிமையின் அரசர் உட்பிரவேசம் பண்ணுவார்.
அந்த மகிமையின் அரசர் யார்? வல்லமைகளுடைய ஆண்டவரே மகிமையின் அரசர்.
பிதாவுக்கும் சுதனுக்கும்....
ஆரம்ப வாக்கியம்: பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப் பட்டவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டதே.
முதல்: உமது உதடுகளில் அதிக வரப்பிரசாதம் பொழியப் படுகின்றது.
பதில்:ஆகையால் சர்வேசுரன் உம்மை என்றென்றைக்கும் ஆசீர்வதித்தார்.
(பரலோக மந்திரத்தை மெளனமாகச் சொல்லவும்)
முதல்: எங்களை சோதனையில் விழவிடாதேயும்.
பதில்: தின்மையிலிருந்து எங்களை இரட்சித்துக் கொள்ளும்.
முதல்: பிதாவே, உமது ஆசீருக்காக மன்றாடுகிறோம்.
ஆசீர்வாதம்: கன்னியரின் கன்னிகையானவள் நமக்காக நமதாண்டவரிடம் பரிந்து பேசுவாளாக.
பதில்: ஆமென்.