கி.பி. 800ஆம் ஆண்டு முதல் கி.பி. 1453ஆம் ஆண்டு வரையிலான நிகழ்வுகள்.
கி.பி. 800, திசம்பர் 25: உரோமை நகரில் அமைந்துள்ள புனித பேதுரு பேராலயத்தில், திருத்தந்தை மூன்றாம் லியோ (சிங்கராயர்), ஃபிராங்கிய இனத்தவரின் மன்னராகிய சார்லிமேன் என்பவருக்கு "புனித உரோமைப் பேரரசன்" என்னும் பட்டமளித்து முடிசூட்டுகிறார்.
கி.பி. 829: ஆன்சுகார் (ஆஸ்கார்) என்னும் மறைபோதகர் சுவீடன் நாட்டில் இசுடாக்கோம் அருகே கிறித்தவ சமயத்தைப் பரப்பும் பணியில் ஈடுபடுகிறார்.
கி.பி. 863: காண்ஸ்தாந்திநோப்புள் முதன்மை ஆயர் புனித சிரில் என்பவரையும் அவர்தம் சகோதரர் புனித மெத்தோடியுசு என்பவரையும் தேர்ந்தெடுத்து, அவர்கள் கிழக்கு ஐரோப்பிய மக்களாகிய சிலாவிய இனத்தார் நடுவே கிறித்தவ சமயத்தைப் பரப்பும்படி அனுப்பிவைக்கிறார். இவ்விரு சகோதரர்களும் திருவிவிலியத்தை சிலாவோனிய மொழியில் பெயர்க்கின்றார்கள். சிலாவிய இலக்கிய மற்றும் கலை வளர்ச்சிக்கு அடித்தளம் இடுகிறார்கள்.
கி.பி. 869: ஃபோத்தியுசு என்னும் காண்ஸ்தாந்திநோப்புள் முதன்மை ஆயர் தப்பறைக் கொள்கை கற்பித்தார் என்பதற்காக நான்காம் காண்ஸ்தாந்திநோப்புள் பொதுச்சங்கம் அவரைக் கண்டனம் செய்கிறது.
இச்சங்கம் முறையானதல்ல என்று கீழை மரபுவழி திருச்சபை கருதுகிறது. எல்லாக் கிறித்தவ சபைகளாலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற பண்டைக் கிறித்தவ ஏழு பொதுச்சங்கங்கள் இத்தோடு முடிகின்றன.
கி.பி. 910: பிரான்சு நாட்டிலுள்ள க்ளூனி நகரில் அமைந்த புனித பெனடிக்ட் துறவியர் இல்லம் துறவு வாழ்க்கை மறுமலர்ச்சி பெற பெரும் துணையாகிறது. மேற்கு ஐரோப்பாவின் எல்லாப் பகுதிகளிலும் துறவற இல்லங்கள் தோன்றுகின்றன.
கி.பி. 966: போலந்து நாட்டு மன்னர் முதலாம் மீஸ்கோ (Mieszko I of Poland) என்பவர் கத்தோலிக்க கிறித்தவராக மாறுகிறார். போலந்து நாடு கத்தோலிக்க மறையைத் தழுவ அடித்தளம் இடப்படுகிறது. இது "போலந்தின் திருமுழுக்கு" என அழைக்கப்படுகிறது. மீஸ்கோ பல பேராலயங்களை எழுப்புகிறார். போலந்து நாடு உருவாகக் காரணமாகிறார். திருத்தந்தையோடு நல்லுறவு ஏற்படுத்திக்கொள்கிறார்.
கி.பி. 988: உக்ரேனிய நாட்டில் குறுமன்னராயிருந்த முதலாம் விளாடிமீர் என்பவர் கிறித்தவராகத் திருமுழுக்குப் பெறுகிறார். அவரது மத மாற்றத்தைத் தொடர்ந்து "ருஸ்" என்னும் உருசிய இன மக்கள் பலரும் கிறித்தவர்களாகிறார்கள். விளாடிமீர் (980-1015) கீவ் (Kiev) நகரில் பிறந்தவர். ரூரிக் குலத்தைச் சார்ந்தவர். இவர் கத்தோலிக்க மற்றும் கீழைத் திருச்சபைகளால் புனிதராகப் போற்றப்படுகிறார்.
கி.பி. 1012: செருமனியில் வோர்ம்ஸ் (Worms) நகரத்தில் ஆயராக இருந்த புர்க்கார்டு (Burchard) என்பவர் இருபது பகுதிகள் அடங்கிய "திருச்சபைச் சட்டத் தொகுப்பு" என்னும் நூலை உருவாக்குகிறார். ஆங்காகே சிதறிக்கிடந்த சட்டங்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக இது அமைந்தது. கிராசியான் (Gratian) என்பவர் 1150இல் இதைவிடவும் விரிவான சட்டத் தொகுப்பை உருவாக்கும் காலம் வரை புர்க்கார்டு தொகுத்த சட்டமே வழக்கத்திலிருந்தது.
கி.பி. 1054, சூலை 16: உரோமைக் கிறித்தவப் பேரரசின் மேற்குப் பகுதியில் அமைந்த கிறித்தவ சபையும், கிழக்குப் பகுதியில் அமைந்த கிறித்தவ சபையும் பிளவுபடுகின்றன. இது "பெரும் பிளவு" (Great Schism) என அழைக்கப்படுகிறது. மேற்குப் பகுதியில் இலத்தீன் மொழி வழிபாட்டு மொழியாக இருந்தது. கிழக்குப் பகுதியில் கிரேக்க மொழி வழக்கத்திலிருந்தது. இரு சபைகளுக்கிமிடையே வழிபாட்டு முறையும் சில வேறுபாடுகளைக் கொண்டிருந்தது. அரசியல் காரணங்களும் பிளவுக்குக் காரணமாக அமைந்தன.
திருத்தந்தையின் தூதர்களாகச் சென்று காண்ஸ்தாந்திநோப்புள் ஆயரோடு பேச்சுவார்த்தை நடத்த மூர்முத்தியே ஹும்பர்ட், லொரேன் ஃப்ரெடெரிக், அமால்ஃபி ஆயர் பீட்டர் என்னும் மூவரும் போயினர். அவர்கள் காண்ஸ்தாந்திநோப்புள் பேராலயமாகிய "தூய ஞானம்" (Hagia Sophia) என்னும் புகழ்மிக்க கோவிலினுள் நுழைந்து, அந்நகரின் ஆயரும் கீழைச் சபைத் தலைவருமான மிக்கேல் செருலாரியுசு என்பவர் சபைநீக்கம் செய்யப்பட்டார் என்னும் செய்தியை உள்ளடக்கிய "திருத்தந்தை ஏட்டினை" (Papal Bull) வைத்துச் சென்றனர். நகர் முழுவதும் கலவரம் வெடித்தது.
கி.பி. 1095, நவம்பர் 27: திருத்தந்தை 2ஆம் அர்பன் என்பவர் க்ளேர்மோன் நகரில் கூடிய சங்கத்தில் மக்களைப் "புனிதப் போருக்கு" (holy war) அழைக்கின்றார். கீழைத் திருச்சபையைப் பாதுகாப்பதற்கும், இயேசு பிறந்து, பணிசெய்து இறந்த "திருநாட்டுக்கு" (Holy Land) திருப்பயணியர் தடையின்றிச் சென்றுவருவதற்குப் பாதுகாப்பு அளிப்பதற்கும் அந்தப் போர் தேவை என்று அர்பன் வாதாடுகிறார். இப்போர் வரலாற்றில் "முதலாம் சிலுவைப் போர்" (First Crusade) என அழைக்கப்படுகிறது. இசுலாம் சமயத்தவரான துருக்கியரின் கையிலிருந்து எருசலேமை மீட்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், 2ஆம் அர்பன் திருத்தந்தையின் செயலகம் ஒன்றை நிறுவினார். இது அக்கால அரசு செயலகம் போல் பணியாற்றியது.
சிசிலித் தீவில் ஆதிக்கம் செலுத்திய இசுலாம் குடியேற்றத்தினரின் ஆட்சியை முடிவுக்குக் கொணரும் வண்ணம் திருத்தந்தை அர்பன் நார்மன் இனத்தவராகிய ரோஜர் என்பவரை நியமிக்கின்றார். இவர் சிசிலியில் பல மறைமாவட்டங்களை நிறுவுகிறார்.
கி.பி. 1098: பிரான்சு நாட்டில் சிட்டோ (Citeaux) என்னும் இடத்தில் ஒரு துறவியர் இல்லம் நிறுவப்படுகிறது. அங்கிருந்து சிஸ்டெர்சிய சபை (Cistercian order) தொடங்கி, வலுவடைந்து, ஐரோப்பாவின் பல இடங்களுக்குப் பரவுகிறது. இச்சபை உறுப்பினர் தொடக்கத்தில் புனித பெனடிக்ட் சபை துறவியராக இருந்தவர்கள். சிட்டோவிலிருந்து புனித பெர்னார்து (1090-1153) என்னும் தறவி க்ளேர்வோ (Clairvaux) என்னும் இடத்தில் ஒரு துறவியர் இல்லம் நிறுவுகிறார் (1195).
கி.பி. 1099: முதலாம் சிலுவைப் போரில் கலந்துகொண்ட வீரர்கள் எருசலேம் நகரை இசுலாமியப் படைகளிடமிருந்து கைப்பற்றுகிறார்கள். தங்கள் ஆட்சியை நிறுவுகிறார்கள். கீழைச் சபையை சார்ந்த கிறித்தவர்கள் பெரும்பான்மையவராய் இருந்த அப்பகுதிகளில் இலத்தீன் சபையைச் சேர்ந்த ஆயர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
கி.பி. 1123: முதலாம் இலாத்தரன் பொதுச்சங்கம் கூடுகிறது. இது திருத்தந்தை இரண்டாம் கலிஸ்டஸ் என்பவரால் திசம்பர் 1122இல் கூட்டப்பட்டது. இச்சங்கம் பல சீர்திருத்தங்களைக் கொணர்கிறது: ஆயர் மற்றும் திருத்தந்தையைத் தெரிவுசெய்வதில் அரசியல் தலையீடு தடை செய்யப்படுகிறது; திருச்சபை ஆட்சியில் உலக ஆட்சியாளர் தலையீடு தடைசெய்யப்படுகிறது; திருச்சபையில் பதவி பெறும் வண்ணம் கையூட்டு வழங்குவது தடைசெய்யப்படுகிறது. நெருங்கிய உறவினருக்கிடையே திருமணம் தடைசெய்யப்படுகிறது. சிலுவைப் போரில் கலந்துகொள்வோருக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்படுகிறது.
கி.பி. 1139: இரண்டாம் இலாத்தரன் பொதுச்சங்கம்: இது உரோமன் கத்தோலிக்க திருச்சபையினரால் பத்தாவது பொதுச்சங்கமாகக் கருதப்படுகிறது. இதைக் கூட்டியவர் திருத்தந்தை 3ஆம் இன்னசென்ட் என்பராவார். 1139, ஏப்ரல் மாதம் நிகழ்ந்த இச்சங்கத்தில் கிறித்தவ சமயத் தலைவர்கள் ஏறத்தாழ ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.
இச்சங்கம் இயற்றிய ஒழுங்குமுறைகள் திருச்சபையில் சீர்திருத்தம் கொணர வழிவகுத்தன. 1123இல் ஏற்கெனவே கூடிய முதலாம் இலாத்தரன் சங்கத்தைப் போல இச்சங்கமும் குருக்களின் வாழ்க்கைமுறையைச் சீர்திருத்த முயன்றது. குருக்கள் மற்றும் துறவியரின் முறைகேடான திருமண உறவுகள் கண்டிக்கப்பட்டன. ஆட்சியாளர்கள் ஆயர்களைக் கலந்துதான் நீதி வழங்க வேண்டும், பொதுநிலையினரின் கைகளிலிருந்து குருக்கள் மானியங்கள் பெறலாகாது, ஆயர் இறந்துவிட்டால் அவரது ஆட்சிக்கு உட்பட்ட மறைமாவட்டத்தில் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு உள்ளாவது புதிய ஆயர் நிமமிக்கப்பட வேண்டும் - இவை போன்ற பல சீர்திருத்தங்களை இரண்டாம் இலாத்தரன் சங்கம் செயல்படுத்தியது.
கி.பி. 1144: ஆதீனத்தலைவராக விளங்கிய சுஜெர் (Suger) என்பவர் (கி.பி. 1081-1151) தூய டெனிஸ் (Saint Denis) பேராலயத்தை கோத்திக் கலைப்பாணியில் விரித்து, உயர்த்திக் கட்டி எழுப்புகிறார் பிற்கால கோத்திக் கட்டட முறைக்கு இது ஒரு சிறந்த முன்னுதாரணம் ஆகிறது.
தூய டெனிஸ் என்பது இன்றைய பாரிசு நகரின் ஒரு பகுதியாக உள்ளது. 1966இல் இக்கோவில் மறைமாவட்டக் கோவிலாக உயர்த்தப்பட்டது. இக்கோவிலின் வரலாறு தொன்மைவாய்ந்தது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டில் கிறித்தவ மறையைப் போதித்து, தம் சமய நம்பிக்கையின் பொருட்டுக் கொல்லப்பட்டு உயிர்துறந்தவர் தூய டெனிஸ். அவர் பாரிசு நகரின் முதல் கிறித்தவ ஆயர் ஆவார். அவர் உயிர்துறந்த இடத்தில் அவர் பெயரால் ஒரு சிறு கோவில் எழுப்பப்பட்டது. அவருடைய உடல் பகுதிகள் ("திருப்பண்டம்" = relics) அங்கே பாதுகாக்கப்பட்டு மக்களின் வணக்கத்திற்காகக் காட்டப்பட்டன. அக்கோவிலும் திருப்பயணியர் செல்லும் இடமாகப் பெயர் பெற்றது. முதலாம் டாகபெர்ட் (Dogobert I) என்னும் பிரான்சிய மன்னர் அகோவிலில் கி.பி. 639இல் அடக்கம் செய்யப்பட்டார். அதிலிருந்து பிரான்சிய அரசர்களின் கல்லறையிடமாக அக்கோவில் பயன்பட்டது.
கி.பி. 1150: கிராசியன் சட்டத்தொகுப்பு (Decretum Gratiani) வெளியிடப்படுகிறது. கிராசியன் என்பவர் இத்தாலியாவில் உள்ள பொலோஞ்ஞா நகரத்தில் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சார்ந்த சட்ட வல்லுநர். சட்டத் துறை ஆய்வு பொலோஞ்ஞா நகரில் 11ஆம் நூற்றாண்டிலிருந்தே சிறப்பான வளர்ச்சிபெற்றிருந்தது. கிராசியன் விவிலியத்திலிருந்தும், திருத்தந்தையர்கள் மற்றும் திருச்சபைப் பொதுச்சங்கங்கள் வெளியிட்டிருந்த சட்டங்களிலிருந்தும், தொடக்க காலத்தில் வாழ்ந்த திருச்சபைத் தந்தையரின் எழுத்துப் படைப்புகளிலிருந்தும் பல ஒழுங்குமுறைகளை ஒன்றுதிரட்டி ஒரே நூலாக உருவாக்கினார். அந்நூலுக்கு "மாறுபட்ட சட்டங்களை ஒருங்கிணைக்கும் சட்டத் தொகுப்பு" என்று பெயரளித்தார்.
அதாவது, பண்டைய மூல நூல்களில் ஒன்றுக்கொன்று முரணாயிருந்த சட்டங்களை ஒன்றுதிரட்டி, அவற்றை ஒன்றோடொன்று பொருத்தமாக இணைப்பதைத் தம் சட்டத் தொகுப்பில் காட்டினார். அவரது சட்டத் தொகுப்பு விரைவில் திருச்சபைச் சட்டத் தொகுப்பாக நடைமுறையில் ஏற்கப்பட்டது. கி.பி. 1917ஆம் ஆண்டு "திருச்சபைச் சட்டத் தொகுப்பு" அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டதுவரை கிராசியன் சட்டத் தொகுப்பு நடைமுறையில் பயன்பட்டது என்பது அந்நூல் பெற்றிருந்த செல்வாக்குக்குச் சான்றாகும்.
கி.பி. 1179: மூன்றாம் இலாத்தரன் பொதுச்சங்கம் மார்ச் மாதம் நிகழ்கிறது. திருத்தந்தை 3ஆம் அலெக்சாந்தர் தலைமை தாங்குகிறார். 302 ஆயர்கள் பங்கேற்கிறார்கள். வால்தென்சியர் (Waldensians) என்னும் கிறித்தவக் குழுவினர் தவறான கொள்கையைப் பரப்புகிறார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு, கத்தோலிக்க திருச்சபையால் கண்டனம் செய்யப்படுகிறார்கள்.
1159இல் போப்பாண்டவர் நான்காம் ஹேட்ரியன் என்பவர் இறந்ததும் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கக் கூடிய கர்தினால்மார் தங்களுக்குள்ளே பிளவுபட்டமையால் இரண்டு பேரை ஒரே சமயத்தில் திருத்தந்தை எனத் தேர்ந்தெடுத்துவிட்டார்கள். ஒருவர் மூன்றாம் அலெக்சாந்தர் என்றும், மற்றவர் நான்காம் விக்டர் என்றும் பெயர் சூடிக்கொண்டு, தாமே உண்மையான திருத்தந்தை என்று உரிமை கொண்டாடினர். இதனால் திருச்சபையில் பிளவு ஏற்பட்டது. நான்காம் விக்டர் 1164இல் இறக்கவே, வேறு இருவர் திருத்தந்தை நிலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் குழப்பம் மேலும் அதிகரித்தது. இந்நிலையில்தான் மூன்றாம் அலெக்சாந்தர் என்னும் திருத்தந்தை மூன்றாம் இலாத்தரன் பொதுச்சங்கத்தைக் கூட்டினார்.
இச்சங்கம் திருச்சபையில் பல சீர்திருத்தங்களைக் கொணர்ந்தது. அவற்றுள் சில:
வருங்காலத்தில் திருச்சபையில் ஒரே சமயத்தில் ஒருவருக்கு மேற்பட்டவர்கள் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, இனிமேல் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் கடமையும் கர்தினால்மாருக்கு மட்டுமே உண்டு என்று சட்டம் இயற்றப்பட்டது.
பங்கில் பணியாற்றுவதற்கு நியமிக்கப்படுகின்ற குருவுக்குக் குறைந்தது 25 வயது நிறைந்திருக்க வேண்டும் என்றும், ஆயராக நியமனம் பெறுவதற்கு 30 வயது நிறைந்திருக்க வேண்டும் என்றும் சட்டம் இயற்றப்பட்டது.
திருமணச் சடங்கு நிறைவேற்றுவதற்கும், அடக்கச் சடங்கு நிறைவேற்றுவதற்கும் பிற அருளடையாளங்களைக் கொண்டாடுவதற்கும் கூலியாகப் பணம் பெறலாகாது என்று சட்டம் இயற்றப்பட்டது.
அநியாய வட்டி வாங்குவது கண்டிக்கப்பட்டது.
கி.பி. 1182: மரோனித்தர் சபை என்னும் கிறித்தவப் பிரிவு கத்தோலிக்க திருச்சபையோடு தனக்குள்ள உறவைப் புதுப்பிக்கிறது. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிரிய நாட்டுத் துறவி புனித மரோன் என்பவர் பெயரால் இக்கிறித்தவக் குழு "மரோனித்தர் சபை" என்று அழைக்கப்படுகிறது. திருச்சபையில் கி.பி. 1154இல் ஏற்பட்ட பிளவின்போது மரோனித்தர் மேற்கில் அமைந்த கத்தோலிக்க திருச்சபையோடு தாங்கள் இணைந்திருப்பதாக முடிவுசெய்தன. மரோனித்த சபையின் முதல் குலமுதல்வர் யோவான் மரோன் என்பவராகும் (7ஆம் நூற்றாண்டு). இன்று லெபனான் நாட்டில் மரோனித்தர் உள்ளனர்.
கி.பி. 1187, அக்டோபர் 2: எருசலேம் நகர் முற்றுகையிடப்படுகிறது. எகிப்து, சிரியா ஆகிய நாடுகளை ஆட்சிசெய்த சுல்தான் சலாவுதின். தன் படைகளோடு சென்று எருசலேமைக் கிறித்தவர் கையிலிருந்து கைப்பற்றுகின்றார். இது மூன்றாம் சிலுவைப் போர் நிகழ்வதற்குக் காரணமாகிறது.
கி.பி. 1198, சனவரி 8: லோத்தாரியோ தெ கோன்றி தி சேஞ்ஞி என்பவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மூன்றாம் இன்னசன்ட் என்னும் பெயர் சூடிய அவர் காலத்தில் திருத்தந்தையின் நேரடி ஆளுகைக்கு உட்பட்ட நாடு தன் உச்சக்கட்ட விரிவை அடைகிறது. அவருடைய 18 ஆண்டு ஆட்சியில் பல சீர்திருத்தங்களைக் கொணர்ந்தார்.
கி.பி. 1204, ஏப்பிரல் 12: நான்காம் சிலுவைப் போரின்போது, இசுலாமியரிடமிருந்து எருசலேமை விடுவிக்கச் சென்ற வீரர்கள் கிறித்தவ நகராகிய காண்ஸ்தாந்திநோபுள் நகரத்தைச் சூறையாடுகிறார்கள் . கிறித்தவ நகரங்கள்மீது தாக்குதல் நிகழ்த்துவதைப் திருத்தந்தை மூன்றாம் இன்னசன்ட் தடைசெய்திருந்ததையும் மீறி, சிலுவைப் போர் வீரர்கள் செயல்பட்டனர். காண்ஸ்தாந்திநோபுளில் இலத்தீன் ஆட்சி தொடங்கியது.
கி.பி. 1205: இத்தாலி நாட்டிலுள்ள அசிசி என்னும் நகரில் பிறந்த பிரான்சிசு (Francis of Assisi) என்பவர் தம் குடும்பத்தையும் செல்வத்தையும் துறந்துவிட்டு, எளிய, ஏழ்மையான வாழ்க்கையைத் தழுவுகிறார். ஒரு புதிய துறவற சபைக்கு அடித்தளம் இடுகிறார்.
கி.பி. 1215, நவம்பர் 11: திருத்தந்தை மூன்றாம் இன்னசண்ட் என்பவர் நான்காம் இலாத்தரன் பொதுச்சங்கத்தைக் கூட்டுகிறார். இது திருச்சபையின் பொதுச்சங்க வரிசையில் 12ஆம் சங்கம் ஆகும். எருசலேம் நகரத்தை இசுலாமியரின் கைகளிலிருந்து மீட்டெடுக்குப்படி ஐந்தாம் சிலுவைப் போருக்கு ஆயத்தம் நிகழ்ந்தது. இலாத்தரன் சங்கம் எடுத்த சில முடிவுகள்: உலகம் அனைத்திலுமுள்ள கிறித்தவ சபைக்குத் தலைமையாக உரோமை சபை இருக்கும். அதற்கு அடுத்த நிலையில் காண்ஸ்தாந்திநோபுள், அலெக்சாந்திரியா, அந்தியோக்கியா, எருசலேம் ஆகிய மறைமாவட்டங்கள் முறையே அமையும். திருச்சபையில் சீர்த்திருத்தம் கொணர ஆண்டுதோறும் தலச் சங்கங்கள் கூட்டப்பட வேண்டும். குருக்கள், திருத்தொண்டர், துணைத் திருத்தொண்டர் மருத்துவ அறுவை சிகிச்சை நிகழ்த்தல் ஆகாது. பகுத்தறிவுப் பருவம் அடைந்த எல்லாக் கிறித்தவரும் ஆண்டுக்கு ஒருமுறையாவது தம் பாவங்களை அறிக்கையிட்டு, பாவ மன்னிப்புப் பெற வேண்டும் என்னும் ஒழுங்கு மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
கி.பி. 1215, நவம்பர் 30: நான்காம் இலாத்தரன் பொதுச்சங்கம் நிறைவுபெற்றது. சங்கம் எடுத்த ஒரு முடிவு நற்கருணை பற்றியதாகும். அதாவது, திருப்பலியின்போது ஒப்புக்கொடுக்கப்படும் அப்பமும் இரசமும் உண்மையிலேயே இயேசு கிறித்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறுகின்றன என்னும் கொள்கை மீண்டும் எடுத்துரைக்கப்பட்டது. இக்கொள்கை "உட்பொருள் மாற்றம்" (Transubstantiation) என்று அழைக்கப்படுகிறது.
கி.பி. 1216: புனித டோமினிக் ("சாமிநாதர்") என்பவர் "போதகர் சபை" (Order of Preachers) என்னும் கிறித்தவக் குழுவை ஏற்படுத்தினார். இக்குழுவுக்கு திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்ட்டின் இறப்புக்குப் பிறகு பதவியேற்ற திருத்தந்தை மூன்றாம் ஒனோரியுஸ் (Honorius III) என்பவர் அதிகாரப்பூர்வமான ஒப்புதல் வழங்கினார். கிறித்தவ மறையை எல்லா இடங்களுக்கும் சென்று அறிவித்து மக்களைக் கிறித்தவ சமயத்தில் இணைப்பதைக் குறிக்கோளாகக் கொண்ட இச்சபை, தவறான கொள்கைகளை வேரறுப்பதிலும் ஈடுபட்டது.
கி.பி. 1229: "தப்பறைக் கொள்கை விசாரணை மன்றம்" (Inquisition) நிறுவப்பட்டது. கிறித்தவ மரபுக் கொள்கைகளை ஏற்காதவர்கள் அன்றைய சமுதாயத்தின் ஒழுங்கைக் குலைத்தனர் என்று திருச்சபை அதிகாரிகள் குற்றம் சாட்டி, நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இவர்கள் தண்டனை வழங்கினர்.
கி.பி. 1231: பாரிசு பல்கலைக் கழகம் நிறுவப்பட்டு அதற்கான அங்கீகாரப் பத்திரம் திருத்தந்தை 9ஆம் கிரகோரியால் வழங்கப்பட்டது.
கி.பி. 1241: மங்கோலிய அரசன் ஒக்டாய் கான் (Oktay Khan) இறந்தார். இன்றைய போலந்து, அங்கேரி ஆகிய பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டு முன்னேறிய மங்கோலியர் ஐரோப்பாவை முழுவதையும் கைப்பற்ற எண்ணியிருந்த வேளையில் ஒக்டாய் கானின் இறப்பு அம்முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
கி.பி. 1245: லியோன் நகரில் பொதுச்சங்கம் நிகழ்ந்தது. இச்சங்கம் புனித உரோமைப் பேரரசன் இரண்டாம் ஃப்ரெடெரிக் என்பவரைச் சபைநீக்கம் செய்தது. இவ்வரசர் சிலுவைப் போருக்குச் செல்வதாக உறுதியளித்துவிட்டு அப்போரில் கலந்துகொள்ளவில்லை என்பதற்காகவும், திருத்தந்தையின் அதிகாரத்தை ஏற்கவில்லை என்பதற்காகவும் திருச்சபையிலிருந்து விலக்கப்பட்டார். இவர் எருசலேமின் அரசர் என்னும் பட்டத்தையும் பெற்றார். கலைகளை ஆதரித்தார். குறிப்பாக, சிசிலிய மொழி வளர்ச்சிக்குத் துணைபுரிந்தார்.
கி.பி. 1274: லியோன் நகரில் இரண்டாம் முறையாகப் பொதுச்சங்கம் நிகழ்ந்தது. உரோமைக் கத்தோலிக்க சபையும் கீழை மரபுவழி சபையும் தற்காலிகமாக இணைந்தன.
கி.பி. 1274: புனித அக்வீன் தோமா என்னும் தலைசிறந்த கிறித்தவ இறையியல் வல்லுநர் இறந்தார். இவர் அரிஸ்டாட்டல் என்னும் கிரேக்க மெய்யியலாரின் வழிநின்று கிறித்தவ சமயக் கொள்கைகளை விளக்கிய அறிஞர் ஆவார்.
கி.பி. 1295: மார்க்கோ போலோ என்னும் வெனிசு நகரப் பயணி உலகின் பல பகுதிகளுக்குப் பயணமாகிச் சென்று மீண்டும் தம் பிறப்பிடம் வந்து சேர்ந்தார். 24 ஆண்டு பயணத்தின்போது அவர் சீனா, இந்தியா போன்ற பல நாடுகளுக்குச் சென்றார்; அந்நாடுகளில் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை நூலாக வெளியிட்டார்.
கி.பி. 1300: திருத்தந்தை 8ஆம் பொனிஃபாசு என்பவர் கத்தோலிக்க திருச்சபையில் ஜூபிலி கொண்டாடும் வழக்கத்தைத் தொடங்கிவைத்தார்.
கி.பி. 1302: திருத்தந்தை 8ஆம் பொனிஃபாசு "ஊனாம் சாங்க்தாம்" (Unam Sanctam) என்னும் ஆவணத்தை வெளியிட்டார். இந்த ஆவணத்தில் திருத்தந்தைக்கு ஆன்மிக அதிகாரம் மட்டுமன்றி உலகை ஆளும் அதிகாரமும் உண்டு என்னும் கருத்து உள்ளது. திருச்சபைக்கு வெளியே யாரும் மீட்படைய முடியாது என்னும் கருத்தும் அழுத்தமாக எடுத்துக் கூறப்பட்டது. திருச்சபை அதிகாரத்துக்கும் நாட்டு அதிகாரத்துக்குமிடையே மோதல் ஏற்பட்டது.
கி.பி. 1305: உரோமையில் இருந்த திருத்தந்தை 5ஆம் க்ளெமெண்ட் என்பவர் பிரான்சு நாட்டு அரசன் நான்காம் ஃபிலிப்பு என்பவரின் செல்வாக்கு காரணமாக அவிஞ்ஞோன் என்னும் பிரான்சிய நகருக்குத் தம் ஆட்சி அவையை மாற்றி அங்குக் குடியேறினார். இந்நிலை 1378 வரை நீடித்தது.
கி.பி. 1311-1312: வீயன்னா பொதுச்சங்கம் திருத்தந்தை 5ஆம் கிளமெண்ட் கூட்டினார். எருசலேமை முசுலிம்களின் பிடியிலிருந்த் மீட்பதில் ஈடுபட்ட குழுவாகிய "கோவில் வீரர்கள்" (Knights Templar) என்னும் குழு கலைக்கப்பட்டது.
கி.பி. 1370: புனித சீயேனா கத்தரீனா என்பவர் திருத்தந்தை பிரான்சு நாட்டைவிட்டு மீண்டும் உரோமைக்குத் திரும்புவதே முறை என்று வற்புறுத்திக் கூறியதால் திருத்தந்தை உரோமை திரும்பினார்.
கி.பி. 1378: உரோமையிலிருந்த திருத்தந்தை 6ஆம் அர்பன் என்பவருக்குப் போட்டியாக அவிஞ்ஞோன் நகரில் 7ஆம் கிளமெண்ட் என்பவர் தம்மை எதிர்த்திருத்தந்தையாக (Antipope) அறிவித்துக் கொண்டார். இது திருச்சபையில் பிளவு ஏற்பட வழியாயிற்று.
கி.பி. 1387: லித்துவானியா நாடு கத்தோலிக்க கிறித்தவ மறையைத் தழுவியது. இவ்வாறு ஐரோப்பா முழுவதும் கிறித்தவ மறையை ஏற்றுக்கொண்டது.
கி.பி. 1412-1431: பிரான்சு நாட்டைச் சார்ந்த புனித ழான்தார்க் (St. Joan of Arc) ஒரு காட்சியில் தன் நாட்டை ஆங்கிலேயரிடமிருந்து விடுவிக்க வேண்டும் என்னும் கட்டளையைப் பெற்றதால் போர்க்கோலம் பூண்டு, ஆங்கிலேயரை எதிர்த்து வெற்றிகொண்டார். ஆங்கிலேயர் அவரைச் சிறைப்பிடித்து, அவரை எரித்துக்கொன்றார்கள். அப்போது அவருக்கு வயது 19 மட்டுமே. பிறகு நடந்த விசாரணையில் அவர் குற்றவாளியல்லவென்றும், அவர் கிறித்தவக் கடமையுணர்வோடு செயல்பட்டதால் ஒரு புனிதர் ஆவார் என்றும் திருத்தந்தை மூன்றாம் கலிஸ்து அறிவித்தார்.
கி.பி. 1440: செருமனியில், யோஹான்னஸ் குட்டர்பெர்க் என்பவர் உலோக அச்சுக்களை உருவாக்கி, மரச்சட்டத்தாலான அச்சுப் பொறியைக் கண்டுபிடித்தார். இவ்வாறு விரைவாகவும் குறைந்த செலவிலும் நூல்கள் படியெடுக்கப்பட்டு ஐரோப்பாவிலும் பிற இடங்களிலும் அறிவு வளர்ச்சி ஏற்பட வழிபிறந்தது. குட்டன்பெர்க் அச்சிட்ட முதல் நூல் விவிலியம் ஆகும்.
கி.பி. 1453, மே 29: ஓட்டொமான் பேரரசு காண்ஸ்தாந்திநோபுள் நகரை ஐம்பது நாள்களுக்கு மேலாக முற்றுகையிட்டுக் கைப்பற்றியது. சுமார் 1,100 ஆண்டுகள் நீடித்த பிசான்சிய பேரரசு முடிவுக்கு வந்தது. இது கிறித்தவ சமயத்துக்கு ஒரு பேரிடியாயிற்று. பல கிறித்தவ அறிஞர்கள் நாட்டை விட்டு ஓடி இத்தாலியா போன்ற நாடுகளுக்குச் சென்றனர். ஐரோப்பிய நடுக்காலம் இவ்வாறு முடிவுற்றது என்று சிலர் கருதுகின்றனர்.