92, 99, 62ம் சங்கீதம்

92ம் சங்கீதம்

ஆண்டவர் செங்கோல் செலுத்தினார். மகத்துவத்தை அணிந்து கொண்டிருக்கிறார்.  ஆண்டவர் தேவ வல்லமையைக் கச்சை போல் கட்டிக் கொண்டிருக்கிறார்.  பூவுலகம் அசையாதபடி அதை நிலை பெறச் செய்தார். 

(ஆண்டவரே) உமது ஆசனம் ஏற்கனவே நிலைபெற்றிருக்கின்றது.  நித்தியராயிருக்கிறீர்.  ஆண்டவரே, நதிகள் எழும்பின, நதிகள் இரைச்சலிட்டு எழும்பின. 

நதிகளின் அலைகள் திரண்டு எழும்பின. (நதிகளின் அலைகள் திரண்டு) திரளான தண்ணீர்களின் சத்தத்தினாலே எழும்பின.  

சமுத்திரத்தின் கொந்தளிப்புகள் ஆச்சரியமானவைகள். ஆண்டவர் உன்னத ஸ்தலங்களிலே ஆச்சரியமுள்ளவர். 

உமது வாக்குத்தத்தங்கள் மிகவும் உண்மை பொருந்தியவைகள்.  ஆண்டவரே, சதாகாலத்திலும் பரிசுத்ததனமானது உமது ஆலயத்தின் அலங்காரமாயிருக்கிறது.

பிதாவுக்கும், சுதனுக்கும்....


99ம் சங்கீதம்

பூமியின் வாசிகள் யாவரும் அக்களித்துச் சர்வேசுரனைத் துதியுங்கள்.  மகிழ்ச்சியோடே ஆண்டவருக்கு ஊழியம் பண்ணுங்கள்.  அகமகிழ்ச்சியோடு அவருடைய சமூகத்திலே வாருங்கள்.  

ஆண்டவரே தேவனாயிருக்கிறாரென்றும், நாம் நம்மை உண்டுபண்ணிக் கொள்ளாமல் அவரே நம்மை உண்டுபண்ணினாரென்றும் அறிந்து கொள்ளுங்கள்.  

அவர் ஜனங்களும் அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிற நீங்கள், அவர் வாசல்களிலே ஸ்துதியோடும், அவர் பிரகாரங்களிலே பாடல்களோடும் பிரவேசித்து அவரைப் புகழ்ந்தேத்துங்கள்.  

அவருடைய நாமத்தைத் தோத்தரியுங்கள்.  ஏனெனில் ஆண்டவர் மகா மதுரமுள்ளவராயிருக்கிறார்.  அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறையாகவும் (இருக்கும்.)

பிதாவுக்கும், சுதனுக்கும்....


62ம் சங்கீதம்

தேவனே, என்னுடைய தேவனே! விடியற்காலம் விழித்து நான் உம்மைத் தேடுகிறேன்.  

என் ஆத்துமம் உமது பேரில் தாகம் கொண்டது.  ஓ, என் சரீரமும் கூட உமது பேரில் எத்தனை வழிகளில் ஏக்கங் கொண்டது!

வறண்டதும், வழியற்றதும், நீரற்றதுமான நிலத்திலிருந்து உமது வல்லபத்தையும், உமது மகிமையையும் காணத்தக்கதாக, நான் இவ்வகையாய் உமது பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைத் தரிசிக்க வந்தேன்.  

ஏனெனில் சகல சுக ஜீவியங்களையும் விட உமது கிருபாகடாட்சம் அதிக நன்மையாயிருக்கின்றது.  ஆகையால் என் உதடுகள் உம்மைப் புகழ்ந்தேத்தும்.

இவ்வகையாய் என் சீவனுள்ள மட்டும் உம்மைத் துதித்து உமது நாமத்தைச் சொல்லிக் கொண்டே என் கைகளை உயர்த்துவேன்.  

இவ்வகையாய் நிணத்தினாலும், கொழுப்பினா லும் என் ஆத்துமந் திருப்தியடையட்டும்.  என் வாய் ஆனந்தக் களிப்புள்ள உதடுகளால் உம்மைப் புகழ்ந்தேத்தும். 

என் படுக்கையில் உம்முடைய நினைப்பு வந்தால் காலை நேரத்தில் உம்மைத் தியானம் பண்ணுவேன்.  ஏனெனில் நீர் என்னைப் பாதுகாத்தவராயிருந்தீர்.

உமது இறக்கைகளின் நிழலில் நான் களிகூருவேன்.  என் ஆத்துமா உம்மை உறுதியாகப் பற்றிக் கொண்டது.  உமது வலது கரம் என்னைத் தாங்கினது.

அவர்களோவென்றால், என் பிராணனை அழிக்க வீணிலே தேடினார்கள்.  பூமியின் பாதாளங்களிலே அவர்கள் இறங்குவார்கள்.  பட்டயத்தால் விழுந்து நரிகளுக்கு இரையாவார்கள்.  

அரசனோ சர்வேசுரனிடத்தில் மகிழ்ச்சியடைவான்.  அவனுக்குப் பிரமாணிக்கமாய் நடக்கிறவர்கள் யாவரும் புகழ் பெறுவர்.  ஏனெனில் அநியாயங்களைப் பேசுகிறவர்களுடைய வாய் அடைபட்டுப் போனது.

பிதாவுக்கும் சுதனுக்கும்....