94ம் சங்கீதம்

முதல்: ஆண்டவரில் அகமகிழ்ந்து நமது இரட்சணியமாகிய தேவனைத் துதிப்போம்! வாருங்கள். அவருடைய சமூகத்திலே  துதி செலுத்தி சங்கீதங்களைப் பாடத் தீவரிப்போமாக.

பதில்: வாருங்கள், பரிசுத்த கன்னிகையின் குமாரரான நம் அரசரை ஆராதிப்போம்.

முதல்: ஏனெனில் ஆண்டவர் பெரிய தேவனுமாய்ச் சகல தேவர்களுக்கும் பெரிய அரசனுமாயிருக்கிறார்.  ஏனெனில் ஆண்டவர் தமது மக்களை ஒருபோதும் கைநெகிழ மாட்டார். பூமியினுடைய எல்லைகள் யாவும் அவருடைய கரத்திலிருக்கின்றன.  உயர்ந்த பர்வதங்களும் அவருடையன.

பதில்: வாருங்கள், பரிசுத்த கன்னிகையின் குமாரரான நம் அரசரை ஆராதிப்போம்.

முதல்: சமுத்திரம் அவருடையது.  அவரே அதை உண்டுபண்ணினார்.  வெட்டாந்தரையையும் அவர் கரங்கள் உருவாக்கின. (இங்கு முழந்தாளிடவும்.) நம்மை உண்டாக்கின ஆண்டவருக்கு முன்பாக அழுது புலம்பித் தெண்டனிட்டு வணங்குவோம். வாருங்கள்!  ஏனெனில் அவரே நம்முடைய தேவனாகிய ஆண்டவராயிருக்கிறார்.  நாம் அவருடைய மேய்ச்சலின் ஜனங்களுமாய் அவர் கையால் மேய்க்கப்பட்ட ஆடுகளுமாயிருக்கிறோம்.

பதில்: வாருங்கள், பரிசுத்த கன்னிகையின் குமாரரான நம் அரசரை  ஆராதிப்போம்.

முதல்: நீங்கள் இன்று அவருடைய குரலைக் கேட்பீர்களாகில் உங்கள் பிதாக்களைப்போல் உங்கள் இருதயங்களைக் கடினப் படுத்தாதேயுங்கள்.  ஏனெனில் அவர்கள் வனாந்தரத்தில் சோதனை நாளிலே என் கோபத்தை மூட்டி, என்னைப் பரிசோதித்து என் வல்லபத்தைப் பரீட்சை பண்ணி அதன் கிரியைகளைக் கண்டார்கள். 

பதில்: வாருங்கள், பரிசுத்த கன்னிகையின் குமாரரான நம் அரசரை  ஆராதிப்போம்.                                                                                                             

முதல்: நாற்பது வரு­மாய் நாம் அந்த ஜனங்கள் பேரில் கோபமாயிருந்து அவர்கள் எப்போதும் வழுவிப் போகிற இருதயமுள்ளவர்கள் என்றோம்.  அவர்கள் நம்முடைய வழிகளை அறியாமல் போனார்கள். நம்முடைய இளைப்பாற்றியில் அவர்கள் பிரவேசிப்பதில்லை என்று நம்முடைய கோபத்தில் சத்தியம் பண்ணினோம்.

பதில்: வாருங்கள், பரிசுத்த கன்னிகையின் குமாரரான நம் அரசரை ஆராதிப்போம்.

முதல்: பிதாவுக்கும் சுதனுக்கும் இஸ்பிரீத்து சாந்துவுக்கும் ஸ்தோத்திரம் உண்டாவதாக.

பதில்: ஆதியிலிருந்தது போல இப்பொழுதும், எப்பொழுதும், என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

வாருங்கள், பரிசுத்த கன்னிகையின் குமாரரான நம் அரசரை ஆராதிப்போம். வாருங்கள். நாம் ஆராதிப்போம்.


கீதம்
    
வானமும் பூமியும் கடலும் தங்கள் மூன்று சட்டத்தால் தங்களை ஆள்பவரை ஆர்ப்பரித்துப் பாடுகின்றன.
அவருடைய சமூகத்திற்கே அவைகளின் புகழ்ச்சிக் கீதங்கள் எழும்பிச் செல்லும்.
அவரே அர்ச்சிஷ்ட மரியாயின் திருவுதரத்தில் உறைகின்றார்.  
எல்லா வரப்பிரசாதத்தினுடையவும் ஆசனமாகிய மரியாயின் திருவுதரமே 
இப்பொழுது ஆண்டவர் இளைப்பாறும் இடம்.
\பகலில் சூரியனும், இரவில் சந்திரனும் அந்த ஆண்டவருக்கே ஊழியம் செய்கின்றன.

ஓ! மாதாவே, நீர் மெய்யாகவே மகிழ்ச்சி மிக்கவர்.  உமது துடிக்கும் இருதயத்தினடியிலே, உலகையே திட்டமிட்டுத் தமது கரங்களுக்குள் வைத்திருக்கும் உமது சிருஷ்டிகரான சர்வேசுரன் உறைகின்றார்.

தேவ தூதரின் அறிவிப்பினால் ஆசீர்வதிக்கப்பட்டீர். கடவுளின் இஸ்பிரீத்துவானவர் உம்மீது நிழலிட்டு உமது திருவுதரத்தை நிரப்பினார்.  பூவுலகம் முழுவதும் வெகுகாலமாக யாருக்காகக் காத்திருந்ததோ, அவர் அங்கிருந்தே புறப்பட்டார்.

ஓ மரியாயே, எல்லா தேவ வரப்பிரசாதத்தினுடையவும் தாயே! எங்கள் இனத்தாருக்கு இரக்கத்தின் தாயே! இப்பொழுது பசாசின் வல்லமையிலிருந்து எங்களைப் பாதுகாத்தருளும். எங்கள் வாழ்வின் கடைசி நேரத்தில் எங்களை சுதந்தரித்துக் கொள்ளும்.

ஓ ஆண்டவரே,   அனைவராலும் ஆராதிக்கப் படுபவராகிய திவ்ய கன்னிகையின்  திருக்குமாரனே! எல்லா மகிமையும் உமக்கே உரியன. 

பிதாவாகிய சர்வேசுரனுடனும், தேற்றுகிறவராகிய சர்வேசுரனுடனும் சமமான வாழ்த்துதலும், மகிமையும் என்றென்றும் உமக்கே உண்டாவதாக. ஆமென்.