ஓ, மனிதர்கள் மீது சேசுவுக்குள்ள கனிந்த நேசமே! இரட்சகர் அவரது எதிரிகளால் காயப்படுத்தப்பட்டபோது, அவர் அவர்களுக்காக மன்னிப்பை வேண்டினார்; ஏனெனில், அவர்களிடமிருந்து தாம் பெற்ற காயங்களையும், அவர்கள் தம்மை உள்ளாக்கிய மரணத்தையும் பற்றி அவர் அதிகமாக நினைக்காமல், அவர்களுக்காக மரிக்கும் நிலைக்குத் தம்மை உள்ளாக்கிய தமது பேரன்பைப் பற்றி மட்டுமே நினைத்தார்.
ஆனால், "தாமே அவர்களுடைய பாவங்களை மன்னித்திருக்க முடியும் என்ற நிலையில், சேசுநாதர் ஏன் அவர்களை மன்னிக்குமாறு பிதாவிடம் ஜெபித்தார்?'' என்று சிலர் கேட்கலாம். அவர்களைத் தம்மால் மன்னிக்க முடியாது என்பதற்காக அல்ல, மாறாக, நம்மைத் துன்புறுத்துபவர்களுக்காக ஜெபிக்க நமக்குக் கற்றுத் தருவதற்காகவே அவர் இவ்வாறு ஜெபித்தார் என்று அர்ச். பெர்னார்ட் பதிலளிக்கிறார். இந்தப் பரிசுத்த மடாதிபர் மற்றொரு இடத்தில்: "அவர் "மன்னியும்!' என்று கூக்குரலிடுகிறார். அவர்கள் "சிலுவையில் அறையும்!' என்று கூச்சலிடுகிறார்கள்'' என்று கூறி வியக்கிறார். யூதர்களை இரட்சிப்பதற்காக சேசுநாதர் உழைத்துக் கொண்டிருந்த போது, தங்களை அழித்துக் கொள்வதற்காக அவர்கள் உழைத்துக் கொண்டிருந்தார்கள் என்று ஷார்த்ரேயின் ஆர்னால்ட் கூறுகிறார்; ஆனால் தேவபசுதனின் நேசமானது, அந்த நன்றியற்ற மனிதர்களின் குருட்டுத்தனத்தை விட கடவுளுக்கு முன்பாக அதிக வல்லமை யுள்ளதாக இருந்தது. "கிறீஸ்துநாதரின் திரு இரத்தத்தைச் சிந்துபவனும் கூட, அதே திரு இரத்தத்தால் வாழும்படி செய்யப் படுகிறான்'' என்று அர்ச். சிப்ரியன் எழுதுகிறார். சேசுகிறீஸ்துநாதர், தாம் மரிப்பதில், எல்லா மனிதர்களையும் இரட்சிக்க எவ்வளவு பெரும் ஆசை கொண்டிருந்தார் என்றால், வாதைகளைக் கொண்டு தமது இரத்தத்தைச் சிந்திய அவரது எதிரிகளையும் கூட அவர் தமது திரு இரத்தத்தில் பங்கெடுப்பவர்களாக ஆக்கினார். "சிலுவையின் மீது உன் கடவுளைப் பார்; தம்மைச் சிலுவையில் அறைபவர்களுக்காக அவர் எப்படி ஜெபிக்கிறார் என்று பார்; அதன்பின் உன்னை நோகச் செய்த உன் சகோதரனை மன்னிக்க மறுக்க உன்னால் முடிகிறதா என்று பார்!'' என்று அர்ச். அகுஸ்தினார் சொல்கிறார்.
அப்போஸ்தலர் நடபடியாகமத்தில் நாம் வாசிப்பது போல, கிறீஸ்துநாதரின் இந்த ஜெபத்தின் வழியாகத்தான் பல்லாயிரக் கணக்கான யூதர்கள் அர்ச். சின்னப்பரின் போதகத்தால் மனந்திரும்பினார்கள் என்று அர்ச். சிங்கராயர் கூறுகிறார். சேசு கிறீஸ்துநாதரின் இந்த ஜெபம் தொடர்ந்து பயனற்றதாக இருப்பதைக் கடவுள் விரும்பவில்லை. ஆகவே, அதே நேரத்தில் அவர் ஏராளமான யூதர்கள் விசுவாசத்தைத் தழுவிக்கொள்ளும்படி செய்தார். ஆனால் அவர்கள் எல்லோரும் ஏன் மனந்திரும்பவில்லை? சேசுகிறீஸ்து நாதரின் ஜெபம் நிபந்தனையுள்ளது, மனந்திருப்பப்பட்டவர்கள், ""நீங்கள் பரிசுத்த ஆவியானவரை எப்போதும் எதிர்த்து நிற்கிறீர்கள்'' (அப்.7:51) என்ற வார்த்தைகள் யாரைப் பற்றிச் சொல்லப்பட்டதோ, அவர்களைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று நான் இதற்குப் பதில் கூறுகிறேன்.
நாம் அனைவரும் சர்வேசுரனிடம் பின்வருமாறு ஜெபிக்கும் படியாக, சேசுநாதர் இந்த ஜெபத்தில் எல்லாப் பாவிகளையும் உள்ளடக்கினார்:
ஓ நித்திய பிதாவே, எங்களை மன்னிக்கும்படி உம்மிடம் ஜெபித்த உமது நேசப் பிரிய குமாரனின் ஜெபத்தைக் கேட்டருளும். இந்த மன்னிப்புக்கு நாங்கள் தகுதியற்றவர்கள், ஆனால் சேசுகிறீஸ்து நாதர் இந்த மன்னிப்பைப் பெற்றுத் தர தகுதியுள்ளவராக இருக்கிறார். அவர் தமது திருமரணத்தால் தேவைக்கும் அதிகமாகவும் அபரிமிதமாகவும் எங்கள் பாவங்களுக்குப் பரிகாரம் செய்திருக்கிறார். இல்லை, என் தேவனே, நான் யூதர்களைப் போலப் பிடிவாதமுள்ளவனாக இருக்க மாட்டேன்; ஓ என் பிதாவே, உம்மை நோகச் செய்ததற்காக என் முழு இருதயத்தோடும் நான் மனஸ்தாபப் படுகிறேன், சேசுநாதரின் பேறுபலன்களின் வழியாக நான் உமது மன்னிப்பைக் கேட்கிறேன். என் சேசுவே, நான் ஏழையும் நோயாளியுமாக இருக்கிறேன் என்றும், என் பாவங்கள் வழியாக, நித்தியத்திற்கும் இழக்கப்படத் தகுதியுள்ளவனாக இருக்கிறேன் என்றும் நீர் அறிவீர்; ஆயினும் நோயாளிகளைக் குணப்படுத்துவதும், உம்மை நோகச் செய்ததற்காக மனஸ்தாபப்படுபவர்களை இரட்சிப்பதுமான நோக்கத்திற்காகவே நீர் பரலோகத்திலிருந்து இறங்கி வந்தீர். நீர் ""இருதயம் நொந்தவர்களைக் குணப்படுத்துகிறீர்'' (இசை.61:1) என்று தீர்க்கதரிசியானவர் கூறுகிறார். மேலும் அர்ச். மத்தேயு உம் வார்த்தையாக, ""மனுமகன் சேதமாய்ப் போனதை இரட்சிக்க வந்தார்'' என்று எழுதுகிறார் (மத்.18:11).