உறுதிப்பூசுதலின் விளைவுகள்

1. உறுதிப்பூசுதல் ஆத்துமத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் யாவை?

(1) ஞானஸ்நானத்தில் பெற்றுக் கொண்ட தேவ இஷ்டப் பிரசாதத்தை அதிகரிக்கிறது.

(2) நம் விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது.

(3) இஸ்பிரீத்து சாந்துவின் கொடைகளை வழங்குகிறது.

(4) ஓர் அழியாத முத்திரை நம் ஆத்துமத்தில் பதிக்கப் படுகிறது.


2. இஸ்பிரீத்து சாந்துவின் ஏழு கொடைகள் யாவை?

ஞானம், புத்தி, விமரிசை, அறிவு, திடம், பக்தி, தெய்வ பயம்.


3. அவை வழங்கப் படுவதற்கான நோக்கங்கள் என்னென்ன?

(1) ஞானம் கடவுளின் காரியங்களின் மட்டில் நாம் ஏக்கங் கொள்ளச் செய்து, நம் ஜீவியம் முழுவதையும், நம் சகல செயல்களையும் அவருடைய ஸ்துதி மகிமையை நோக்கி வழிநடத்துகிறது.

(2) புத்தி, விசுவாசத்தின் பரம இரகசியங்களை இன்னும் அதிகத் தெளிவாக அறிந்து கொள்ள நமக்கு உதவுகின்றது.

(3) விமரிசை பசாசின் வஞ்சகங்களையும், நம் இரட்சணியத்திற்கு எதிரான ஆபத்துக்களையும் பற்றி நம்மை எச்சரிக்கிறது.

(4) அறிவு சகல காரியங்களிலும் தேவ சித்தத்தை அறிவதற்கு நமக்கு உதவுகின்றது.

(5) திடம் சகல காரியங்களிலும் தேவ சித்தத்தை நிறைவேற்ற நம்மைப் பலப்படுத்துகிறது.

(6) பக்தி ஒரு தந்தையாக கடவுளை நாம் நேசிக்கச் செய்து, அதனால் அவருக்கு நாம் கீழ்ப்படிந்திருக்கச் செய்கிறது.

(7) தெய்வ பயம் பாவத்தைப் பற்றிய பயத்தால் நம்மை நிரப்புகிறது.