கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார்; காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்திருக்கிறார்" (சபை உரையாளர் 3:11)
காலம் இவ்வுலகில் பொன் போன்றது.
என் மகனே! நீ கால நேரங்களின்மீது கவனமாயிரு என்று பரிசுத்த ஆவியாகிய இறைவன் நமக்கு அறிவுறுத்தியிருக்கிறார். அது ஏன்? உயிர்வாழும் மனிதர்களுக்கெல்லாம் கடவுள் கொடுக்கும் அனைத்திலும் பெரியதும் விலை மதிப்பற்றதும் நேரமே. வேறு தெய்வங்களை நம்பும் அறிஞர்களும்கூட கால நேரத்தின் மதிப்பை அறிந்திருந்தார்கள். "நேரம் விலைமதிப்பே இல்லாதது, இணையற்றது" என்று செனேகா என்ற ஞானி கூறுகிறார். "கடவுள் எவ்வளவு விலை மதிப்புக்கு அப்பாற்பட்டவரோ அவ்வாறே ஒவ்வொரு நிமிடமும் அத்தகைய விலை மதிப்பற்றதே" என்கிறார் சியன்னா பெர்னதீன் என்னும் அறிஞர்.
ஏனெனில், ஒவ்வொரு நிமிட நேரத்திலும் ஒரு மனிதன் உத்தம "மனஸ்தாப முயற்சியையும், சிநேக முயற்சியையும் செய்வானாகில் கடவுளின் வரப்பிரசாதத்தையும், முடிவில்லாத நித்திய மகிமையைச் சம்பாதித்துக் கொள்ளவும் கூடும். "காலத்தின் விலை கடவுளின் விலைதான். ஏனென்றால் காலத்தை நன்றாய் செலவிடும் போது கடவுளின் அன்பை சம்பாதிக்கலாம். காலம் என்னும் அரிய பொக்கிஷம் இப்பூமியில் மட்டுமே கிடைக்கும், மறுவுலகத்திலும் இல்லை. நித்திய நரகத்தில் இல்லை. நரகத்தில் புதைக்கப்பட்டவர்களின் புலம்பலும் கூக்குரலும் "ஆ! இன்னும் ஒரு மணி நேரம் மட்டும் கிடைத்தால் போதும் நான் பாவத்திற்கு பரிகாரம் செய்து விடுவேனே என்பதாகத்தான் இருக்கும்.
கடந்து போன காலத்தை மீட்பதற்காக, ஒரு மணி நேரத்திற்காக அவர்கள் என்ன விலையும் கொடுப்பார்கள். அது அவர்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. மோட்சத்தில் அழுகையும் புலம்பலும் இல்லைதான். ஆனால் அருளாளர்கள் (திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்டு முத்திப்பேறு அடைந்த புண்ணிய ஆன்மாக்கள்) அழக் கூடுமானால், பூமியிலிருக்கும் போது ஒவ்வொரு நிமிடத்திலும் அதிகப் புண்ணியத்தையும், அதற்கேற்ற பேரின்ப மகிமையையும் சம்பாதிக்கக் கூடிய நேரத்தை பூமியில் இழந்து போனோமே, அந்த நேரம் இனிமேல் எங்களுக்குத் திரும்பி வரமாட்டாதே என்பதை நினைத்துத்தான் கண்ணீர் சிந்துவார்கள்
ஆசீர்வாதப்பர் சபையைச் சார்ந்த ஒரு அருட்கன்னி, மோட்ச மகிமையோடு ஒருவருக்குக் காணப்பட்டு தான் விண்ணரசில் பெரும் பாக்கியத்தோடு இருப்பதாகவும், தன் பாக்கியத்திற்கு அங்கே ஏதும் குறைவில்லை என்றும், ஆயினும் தான் இன்னும் ஏதாவது விரும்புவதென்றால், தான் பூமிக்குத் திரும்பி வந்து துன்பப்படவும், அதிக புண்ணிய பேறுகளையும், அதிக மோட்ச மகிமையையும், சம்பாதிக்கவே விரும்புவதாகத் தெரிவித்தார், மேலும் ஒரே ஒரு மங்கள வார்த்தை செபத்தை (அருள் நிறைந்த மரியாயே) பக்தியோடு பூமியில் செபிப்பதால் அதன் பலனாக விண்ணகத்தில் கிடைக்கக்கூடிய மகிமையை அடைவதற்கு, தான் இந்த பூமியில் மரிக்கும்போது சகல வேதனைகளையும் தொல்லைகளையும் உலகம் முடியுமட்டும் அனுபவிக்க மனப்பூர்வமாக சம்மதிப்பதாகவும் சொன்னார்
இந்நிலையில் சகோதரனே! நீ உன் காலத்தையும் நேரத்தையும் எப்படி செலவிடுகிறாய்? இன்று நீ செய்யக் கூடியதை ஏன் நாளை வரையில் எப்போதும் தள்ளி வைக்கிறாய்? சென்ற காலம் சென்றதுதான், அது உன்னுடையதல்ல என்பதை மறவாதே. எதிர்காலமும் உன் சக்திக்குட்பட்டதல்ல. நீ புண்ணியம் செய்யக்கூடிய காலம் இன்றுதான், நிகழ்காலம்தான்.
"பாக்கியமற்ற மனிதனே! எல்லாம் வல்ல இறைவன் காலத்தையெல்லாம் உன் கையில் அடக்கி வைத்ததுபோல் ஏன் எதிர்காலத்தை நினைத்துக் கொண்டு வாழ்கிறாய்?" என்று புனித பெர்நார்து வினவுகிறார்.
"உன் கையில் ஒரு மணி நேரம்கூட இல்லாதிருக்க ஒரு நாளை எப்படி கணக்கிட்டுக் கொள்ளுகிறாய்?" என்று புனித அகுஸ்தீன் கேட்கிறார். ஆம், இன்னும் ஒருமணி நேரம் உன் வாழ்வு நீண்டிருக்கும் என்பது நிச்சயமற்ற நிலையில், நாளையும் நீ இருக்கப்போவதாக எப்படி நிச்சயமாக எண்ணிக் கொள்கிறாய்? இன்று நீ மரிக்கத் தயாரக இல்லாவிட்டால் உன் மரணம் நல்ல மரணமாய் இருக்காது என்பதில் அஞ்சக்கடவாய்" என்று புனித தெரேசா தீர்மானித்து சொல்லியிருக்கிறார்.
அன்பு தாயே! தயாபரியே! தயைகடலே!'தவிப்பவருக்கு தஞ்சமே! பாவிகளுக்கு உபகாரமே! நாங்கள் இவ்வுலக செல்வத்தையும் புகழ், பெருமைகளையும் பாராமல் பரலோக வாழ்வு வாழ, இயேசுவே எங்கள் உலகம் என்று வாழ எங்களுக்காக உம் திருமகனை மன்றாடும் , பாவிகளுக்கு அடைக்கலமே! இந்த மன்றாட்டுகளை உமது மாசற்ற திரு இருதயத்தின் வழியாக மூவொரு இறைவன் பாதம் ஒப்புக் கொடுக்கிறோம். ஆமென்.
(புனித அல்போன்ஸ் மரிய லிகோரியாரின் மரண ஆயத்தம் என்ற தியான புத்தகத்திலிருந்து)