அயர்வாய்த் தலைசாய்த்துத் தமது ஆருயிரை இவ்வுலக மனிதர்களுக்காக அர்ப்பணம் செய்த தேவ ஒளியானவர், தாம் மரித்த மூன்றாம் நாளில் உயிர்த்து எழுந்தருளினார். நாற்பது நாட்கள் அளவாகத் தம் அப்போஸ்தலர்களைத் திடப்படுத்தி, அவர்களை இந்த அவனியில் உள்ள மனிதர்கள் அனைவருக்கும் தம்முடைய அருள் வேதத்தைப் போதிக்கக் கட்டளையிட்ட பின்பு, பரலோகத்திற்கு ஆரோகணமானார். அவ்விதம் ஆரோகணமான ஆண்டவர் இன்றும் நம் மத்தியில் ஜீவிக்கின்றார்.
பரலோகம் சென்றவர் பூவுலகத்தில் ஜீவிப்பது எப்படி எனக் கேட்கிறீர்களா? பரலோக பூலோகமனைத்தையும் ஒரே சொல்லால் சிருஷ்டித்த சர்வேசுரன், அங்கிங்கு எனாதபடி எங்கும் நிறைந்திருக்கிற கடவுள், நித்திய நிர்மல, மெய்யான பேரானந்த அரூபியாகிய சர்வேசுரன், செய்ய வேண்டுமென ஆசித்தாரானால், அவரால் முடியாத காரியம் ஒன்றுண்டா? தீய மனிதர்களாகிய நம்மை நேசித்தார். நேசித்தவர் நேசத்தின் கொடுமுடிச் சிகரத்தை அடைந்து கல்வாரி மலையில் தமது இரத்தமெல்லாம் சிந்தி, தம்மை முழுவதும் பரித்தியாகம் செய்தார். பரித்தியாகம் செய்தது மாத்திரமல்ல, அவருடைய அன்பிற்குப் பாத்திர மான அடியார்களின் உணவாகவும், பானமாகவும் தம்மையே கொடுக்கவும் திருவுளமானார்.
அப்பேரன்பையே “திவ்ய நற்கருணை'' என்று அழைக்கின்றோம். ஏனெனில் தேவன் நமக்குக் காட்டிய கருணைகளில் மாபெரும் கருணை அது. “திவ்ய நன்மை'' என்று அதை அழைக்கிறோம். ஏனெனில் நாம் அவரிடம் பெற்ற நன்மைகளில் எல்லாம் உன்னதமான நன்மை அது. அதற்கு “சற்பிரசாதம்'' என்று பெயர் சூட்டுகிறோம். ஏனெனில் கல்வாரியில் சேசு இரட்சகர் நமக்கெனப் பலியானதுபோலத் திரும்பத் திரும்பத் தம்மையே பலியாக்குமக் திவ்விய கிருத்தியம் அது. அவரது பாடுகளின் ஞாபகமாகவும், வல்லபத்தின் அடையாளமாகவும், ஞானத்தின் அத்தாட்சியாகவும், அற்புதங்களின் முதன்மை யாகவும், அன்பின் அடைமானமாகவும், இரட்சணியத்தின் அச்சாரமாகவும், மரண சாசனமாகவும் உள்ள அந்த அதிசய பரம அவிழ்தத்தை (தெய்வீக மருந்தை) நினைக்க நினைக்க, நம் அறிவு தடுமாறுகின்றது; நெஞ்சு நெகிழ்ந்து உருகுகின்றது. உடனே அவர் பாதத்தில் விழுந்து, “இத்தனை மகத்தான தேவத்திரவிய அனுமானத்தைத் தாழ விழுந்து ஆராதிக்கிறோம்'' (தாந்த்தும் எர்கோ சாக்ராமெந்த்தும் வெனேரேமுர் செர்னூயி) என்று பாடுகிறோம். “செஞ்சொல் மொழி புனைந்து, திளைத்து, மனங்கனிந்து, உம்சொல் மதி நினைந்து, உன்னதரே துணிந்து, கஞ்ச மலர்ப்பாதமே கதியெனவே பணிந்து, கெஞ்சும் எம்மைக் கரைசேரும்'' எனப் புலம்புகிறோம். நம்மைப் படைத்துக் காப்பாற்றியது பற்றாதா? மனித உருவெடுத்து, நமது இரத்தத்தோடு கலந்து நம் ஈன மனுக்குலத்தை ஏற்றி உயர்த்தியது பற்றாதா? கொண்ட அந்த இரத்தத்தையும் இந்த மண்டலத்திலேயே நமக்காகச் சிந்தி இறைத்தது பற்றாதா? அதற்கு மேலும், நம் உடலோடு உடலும், உயிரோடு உயிருமாக அல்லவா அவர் ஒன்றிக்கத் திருவுள மானார். ஆ என் சகோதரனே, அன்பின் கடைசி எல்லை அதுதானே! நம்மைப் புனிதப்படுத்தித் தமதாக்கிக் கொள்ள ஆசைகொண்ட தற்பரன், தம்மை முற்றிலும் நமதாக்கினார்.
ஒரு நாள் “நாமே ஜீவிய அப்பம். என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணாதவனுக்கு நித்திய ஜீவியம் இல்லை'' என்று பெரும் மக்கள் கூட்டத்தின் முன்ன்லையில் கூறிய அவர், வேறொரு நாள், தம்மைச் சுற்றிக் கடைசி முறையாகத் தம்மோடு பந்தியில் அமர்ந் திருந்த சீடர்கள் முன்னே, ஓர் அப்பத்தை எடுத்து, ஆசீர் வதித்து, “இது என் சரீரம்.... இதை வாங்கிப் புசியுங்கள்'' எனவும், திராட்சை இரசத்தை எடுத்து, “இது உங்களுக்காக சிந்தப்படும் புதிய உடன்படிக்கையின் என் இரத்தமாய் இருக்கிறது. இதைப் பானம் பண்ணுங்கள்'' எனவும் திருவாய் மலர்ந்தருளி, “இதை என் ஞாபகமாகச் செய்யுங்கள்'' என்று கட்டளையிட்டருளுகின்றார். அவர் கூறிய வசனங்கள் தெளிவானவை. அவரால் ஆகாததும் ஒன்றுமில்லை. ஆகவேதான் பரலோகம் சென்ற அவர், பூலோகத்திலும் மனிதர்கள் மத்தியில் ஜீவிக்கிறார் என்கிறோம்.
இந்த நற்கருணையில் ஆத்தும சரீர தெய்வீகத்தோடு பிரசன்னமாயிருக்கும் தேவசுதன், “இதோ! உலக முடிவு பரியந்தம் நான் உங்களோடு இருக்கிறேன்'' எனக் கொடுத்த வாக்குப்படி, தமது தெய்வீகசச வல்லபத்த்Vலும், வசீகரத்தாலும் இன்றும் என்றும் நம்முடன் இருக்கின்றார். அது எவ்வாறு என வினவுகிறீர்களா? அவரது ஞான சரீரமாகிய திருச்சபை மற்ற சபைகளைப் போல பண பலத்தாலோ, படை பலத்தாலோ வாழ்வதில்லை. கடந்த இருபது நூற்றாண்டுகளாக அத்திருச்சபையை எதிர்த்து, அதை அழிக்கத் தேடிய வல்லரசுகளுக்கும், தீயவர் கூட்டங்களுக்கும் கொடிய சக்திகளுக்கும், குதர்க்க சூழ்ச்சிகளுக்கும் கணக்கில்லை. அவ்வாறிருப்பினும் அத்திருச்சபை இன்றும் வாழ்கின்றது. அதை எதிர்த்த சக்திகளும், நசுக்கத் தேடிய கொடியவர்களும் மறைந்து ஒழிந்தனர். அதுவோ இன்னும் எழிலோடு இன்றும் நம் மத்தியில் திகழ்கின்றது. இந்த அபூர்வ ஜீவ சக்திக்குக் காரணம் யாது? தமது ஞான சரீரமாகிய திருச்சபையோடு சேசு இரட்சகர் இன்றும் ஜீவித்திருப்பதல்லவா?
மேலும், தேச பக்தியால் உடல் பொருள் ஆவியைத் தத்தம் செய்தவர்களை விடவும், ராஜ பக்தியால் போர்க் கோலம் பூண்டு யுத்தகளத்தில் மாண்டவர்களை விடவும், கொண்ட கொள்கைக்காக உயிரிழந்தவர்களை விடவும், சேசுவின் நேசத்தை முன்னிட்டுத் தம்மையும், தமக்குள்ள யாவற்றையும் துறந்து, உயிர்ப்பலி கொடுத்த ஆண்களும், பெண்களும், இளைஞரும், வயோதிகரும் அநேக அநேகர். இத்தனை பலதரப்பட்ட கோடிக்கணக்கான மனிதர்களை வசீகரம் செய்த, வசீகரம் செய்து வருகின்ற சேசுநாதர் இன்றும் உயிருடன் இருப்பதல்லவா இதற்குக் காரணம்?
உலக சரித்திரத்தில் தம் கன்னிமையை தேவனுக்கு நேர்ந்தளித்த பெண்கள் பல மதங்களில் இருந்ததாக நாம் அறிகின்றோம். உரோமையர் மத்தியில் “வெஸ்டல்'' கன்னியர் எனவும், புத்த மதத்தில் பெண் சந்நியாசிகள் எனவும், ஒரு சிலர் சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கின்றனர். ஆனால் அவர்கள் சாதித்தது யாது, பிறருக்கு அவர்கள் செய்த நன்மைகள் எவை எனத் தீர்க்கமாய்க் கூறுவதற்கு ஒன்றுமில்லை. அது மட்டுமின்றி, இத்தகைய பெண்கள் ஸ்தாபனங்கள் சிறிது காலத்தில் உயர்நிலை தவறி, ஒழுக்கம் கெட்டு மறைந்தொழிந்ததும் கண்கூடு.
அருளிலார்க்கு அவ்வுலகில்லை; பொருளிலார்க்கு இவ்வுலகில்லை என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். முற்கூறிய நன்மைகள், அருள் வரப்பிரசாதம் இல்லாமல் உண்டாக முடியாதெனவும் உணர்கின்றோம். சேசுவின் அன்பில் நிலைத்திருந்து, தேவ இஷ்டப்பிரசாதத்தின் உதவியால் மகாத்துமாக்களான புனிதவாளர்கள்; அர்ச்சிய சிஷ்டவர்கள் ஏராளம்பேர். சேசுநாதர் கூறியதுபோல், அவர் திராட்சைச்செடி; மற்ற ஆத்துமங்கள் அச்செடியின் கிளைகளாய் இருக்கின்றனர். செடியினின்று ஜீவசக்தி கிளைகளுக்குச் செல்வதுபோல, சேசுவிடமிருந்து தெய்வீக வரப்பிரசாதம் இன்றும் மனித உள்ளங்களில் பாய்ந்து அவர்களை உயர்த்துகின்றது. ஆகையால் சேசுநாதர் இன்றும் உயிரோடு இருக்கின்றார்.
என் சகோதரனே! இன்றும் நம்முடன் ஜீவித்திருக்கின்ற தேவ திருச்சுதனின் தீராத இரட்சணிய தாகம் உன்னையும் என்னையும் தேடித் தொடர்ந்து வருகின்றது. அத்தாகத்தைத் தீர்த்து வைப்பதிலேயே உன்னுடையவும், என்னுடையவும் பேரின்ப வாழ்வு அடங்கியிருக்கின்றது. ஆதலால் உலக இரட்சகரான சேசுக்கிறீஸ்துநாதரை நாம் எதிர்கொண் டழைத்து, அவரது திவ்விய இனிமை மிகுந்த ஜீவியத்தில் பங்குபெற்று, சாகும் வரையிலும் அதில் நிலைத்திருக்கும் மேலான பாக்கியம் உனக்கும் எனக்கும், சகல மனிதர் களுக்கும் கிடைக்கும்படி விடாது முயற்சிப்போமாக.
சேசு இரட்சகர் வாழ்க!