(இங்கு அர்ச். சாமிநாதர் சபைத் திருநாட்களின் நினைவாக, கீழ்க்காணும் திருநாள் நினைவு ஜெபங்களை தினமும், வருடம் முழுவதும் சொல்ல வேண்டும்.)
நம் பரிசுத்த தந்தை அர்ச். சாமிநாதரின் நினைவு ஜெபம்
ஆரம்ப வாக்கியம்: மனிதர்களுடைய இரட்சணியத்திற்கு ஏதுவானவைகளை வழங்குவதில், அர்ச். சாமிநாதரை உலகிற்குத் தந்தவராகிய சகலருடையவும் இரட்சகர் ஸ்துதிக்கப் படுவாராக.
முதல்: அவருடைய கடவுளின் திருச்சட்டமானது அவருடைய இருதயத்தில் இருக்கிறது.
பதில்: ஆகவே அவருடைய பாதங்கள் இடறுவதில்லை.
பிரார்த்திக்கக் கடவோம்
ஓ சர்வேசுரா, உமது ஸ்துதியரும், எங்கள் ஆசீர்வதிக்கப்பட்ட தந்தையுமான அர்ச். சாமிநாதரின் பேறுபலன்களாலும், போதனைகளாலும் உமது திருச்சபையை ஒளிர்வித்து வளப்படுத்தத் திருவுளமானீரே. அவர் தமது வேண்டுதலினால், அந்தத் திருச்சபை தனது உலக நன்மைகளில் குறைவுபடாமல் இருக்கவும், தனது ஞான வளர்ச்சியில் மேன்மேலும் முன்னேறுவதற்கும் தேவையான வரத்தை எங்களுக்குப் பெற்றுத் தருவாராக. எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்து நாதர் வழியாக.
பதில்: ஆமென்.
கன்னிகையான அர்ச். சியயன்னா கத்தரீனம்மாள் நினைவு ஜெபம்
ஆரம்ப வாக்கியம்: ஆசீர்வதிக்கப் பட்ட கன்னிகையான அர்ச். கத்தரீனம்மாள் எங்களுக்குக் கிறீஸ்து நாதரின் உண்மையான ஒளியின் மகிழ்ச்சியைத் தருவாளாக. எங்களை மோட்ச சேனைகளுடன் ஒன்றிணைப்பாளாக!
முதல்: என் ஆத்துமமானது ஆண்டவரை மகிமைப் படுத்துகின்றது.
பதில்: என் இரட்சணியமாகிய சர்வேசுரனிடத்தில் என் மனமும் ஆனந்தமாய் எழும்பி மகிழ்கின்றது.
பிரார்த்திக்கக் கடவோம்
ஓ சர்வேசுரா, முத்திப்பேறு பெற்ற கத்தரீனம்மாள் தீய ஆவியின் தாக்குதல்களை வெற்றி கொள்ளவும், உமது திருநாமத்தின் மீதான நேசத்தில் உறுதியாக இருக்கவும், விசேஷ சலுகையான கன்னிமையிலும், பொறுமையிலும் தவறாதிருக்கவும் செய்தருளினீரே. அவளுடைய முன்மாதிரிகையால் நாங்கள் இவ்வுலகத் தீமைகளை வெல்லவும், எங்களது சகல எதிரிகளின் தந்திர சூழ்ச்சிகளையும் மேற்கொள்ளவும், அதனால் உமது நித்திய மகிமைக்குப் பாதுகாப்பாக வந்து சேரவும் தேவையான வரத்தை எங்களுக்குத் தந்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்துநாதர் வழியாக.
பதில்: ஆமென்.
(அர்ச். சியயன்னா கத்தரினம்மாளின் நினைவு ஜெபமும், பின்வரும் அர்ச். மரிய மதலேனம்மாள் நினைவு ஜெபமும் தேவமாதாவின் மந்திரமாலை ஜெபத்தின் ஒரு பகுதியல்ல என்பதால், விருப்பமுள்ளவர்கள் மட்டும் இந்த ஜெபங்களை ஜெபிக்கலாம். இந்த நினைவு ஜெபத்தை முதல் மற்றும் இரண்டாம் தரத் திருநாட்களின் காலை ஜெபம் தவிர மற்றபடி தினமும் சொல்ல வேண்டும். ஏப்ரல் 30ம் தேதியன்றும், அதையடுத்த 8 நாட்களிலும் புனிதையின் திருநாளுக்கான விசேஷ ஜெபங்கள் சொல்லப் படுவதால் இந்த ஜெபம் தவிர்க்கப் படுகிறது.)
மூன்றாம் சபையின் பாதுகாவலியான அர்ச். மரிய மதலேனம்மாள் நினைவு ஜெபம்
ஆரம்ப வாக்கியம் : ஓ மரிய மதலேனம்மாளே! நமதாண்டவராகிய சேசுகிறீஸ்து நாதரிடம் எங்களுக்காக இடைவிடாமல் மன்றாடும்.
முதல்: அவளுக்கு அநேக பாவங்கள் மன்னிக்கப் பட்டன.
பதில்: ஏனெனில் அவள் ஆண்டவரை அதிகமாக நேசித்தாள்.
பிரார்த்திக்கக் கடவோம்
ஓ மிகவும் இரக்கமுள்ள பிதாவே, முத்திப்பேறு பெற்ற மரிய மதலேனம்மாள் எல்லாவற்றிற்கும் மேலாக எங்கள் ஆண்டவராகிய சேசுகிறீஸ்துநாதர் மீது கொண்டிருந்த சிநேகத்தால் அவளுடைய பாவங்களுக்கு மன்னிப்படைந்தாளே! அதே போல் உமது கனிவுள்ள இரக்கத்தினால் நித்திய ஜீவிய பாக்கியத்தை எங்களுக்கு அடைந்து தருவாளாக. எங்கள் ஆண்டவராகிய அதே கிறீஸ்துநாதர் வழியாக. ஆமென்.
சபையின் அர்ச்சயசிஷ்டவர்களின் நினைவு ஜெபம்
ஆரம்ப வாக்கியம் : ஓ, எத்தகைய சந்தோமும், மகிமையும் எப்பொழுதும் அர்ச்சிஷ்டவர்களுக்குச் சொந்தமாயிருக்கின்றன! யாருடைய வார்த்தைகளாலும், செயல்களாலும் உலகம் அலங்கரிக்கப்படுகிறதோ, யாருடைய பேறுபலன்களினால் மனமும் மேலும் பலப்படுத்தப்படுகிறதோ, அந்தப் போதகர்களின் பேறுபலன்கள் எவ்வளவு தனித்துவமுள்ளவையாக இருக்கின்றன!
முதல்:அர்ச்சிஷ்டவர்கள் மகிமையில் களிகூர்வர்.
பதில்: அவர்கள் தங்கள் வாசஸ்தலங்களில் மகிழ்ச்சியோடு பாடுவார்கள்.
பிரார்த்திக்கக் கடவோம்
எல்லாம் வல்ல சர்வேசுரா! எங்கள் சபையின் அர்ச்சயசிஷ்டவர்களின் நன்மாதிரிகைகள் நாங்கள் இன்னும் அதிக உத்தமமான ஜீவியம் நடத்தும்படி எங்களைத் தூண்ட வரமருளும். மேலும் அவர்களது நினைவைக் கொண்டாடும் நாங்கள் அவர்களது கிரியைகளைக் கண்டு பாவிக்கவும் எங்களுக்கு அருள் புரிவீராக. எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்து நாதர் வழியாக. ஆமென்.
சகல அர்ச்சியசிஷ்டவர்களின் நினைவு ஜெபம்
ஆரம்ப வாக்கியம்: ஓ சர்வேசுரனுடைய சகல அர்ச்சிஷ்டவர்களே! எங்களுடையவும், மனுக்குலம் முழுவதினுடையவும் இரட்சணியத்திற்காக மன்றாடும் படி உங்களை வேண்டிக் கொள்கிறோம்.
முதல்: சேசுகிறீஸ்துநாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாயிருக்கத் தக்கதாக,
பதில்: சர்வேசுரனுடைய சகல அர்ச்சிஷ்டவர்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.
பிரார்த்திக்கக் கடவோம்
ஆண்டவரே, உமது சகல அர்ச்சிஷ்டவர்களும் எங்களுக்காகத் தொடர்ந்து ஜெபிக்கும்படி உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம். மேலும் உமது இனிமையுள்ள இரக்கத்தோடு அவர்களது மன்றாட்டுக்குத் தேவரீர் செவிசாய்க்கத் தயை புரியும். எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்து நாதர் வழியாக. ஆமென்.
சமாதானத்திற்கான ஜெபம்
ஆரம்ப வாக்கியம்: ஆண்டவரே, எங்களுடைய காலத்தில் எங்களுக்கு சமாதானத்தைத் தந்தருளும். ஏனெனில் எங்களுக்காகப் போராட எங்கள் கர்த்தராகிய தேவரீரையன்றி எங்களுக்கு வேறு யாருமில்லை.
முதல்: உமது பலத்தில் சமாதானம் இருப்பதாக.
பதில்: உமது கோட்டைகளில் சம்பூரணம் விளங்குவதாக.
பிரார்த்திக்கக் கடவோம்
ஓ சர்வேசுரா, பரிசுத்தமுள்ள ஆசைகளும், நல்ல ஆலோசனைகளும், நீதியுள்ள அலுவல்களும் உம்மிடமிருந்தே புறப்படுகின்றன. உலகம் தர முடியாத சமாதானத்தை உம் ஊழியர்களாகிய எங்களுக்குத் தந்தருளும். அதனால் எங்கள் இருதயங்கள் உமது கற்பனைகளின் மீது ஊன்றி நிலைத்திருக்கவும், உமது பாதுகாவலினால் எங்கள் சத்துருக்களின் மீதான அச்சம் நீங்கி இக்காலங்களில் சமாதானம் எங்களில் நிலைபெறவும் செய்தருளும். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் தேவரீரோடு, இஸ்பிரீத்துசாந்துவின் ஐக்கியத்தில் ஏக சர்வேசுரனாய் சதாகாலமும் இராச்சியபாரம் பண்ணுகிற எங்கள் ஆண்டவரும், உமது திருச்சுதனுமாகிய சேசுகிறீஸ்துநாதர் வழியாக எங்களுக்குத் தந்தருளும்.
பதில்: ஆமென்.
முதல்: ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
பதில்: என் அபய சத்தம் உமது சந்நதி மட்டும் வரக் கடவது.
முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக.
பதில்: சர்வேசுரனுக்கு நன்றி!
முதல்: அருள் நிறைந்த மரியாயே, வாழ்க. கர்த்தர் உம்முடனே!
பதில்: பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.