"இந்த மனிதனிடத்தில் நீங்கள் சுமத்தும் குற்றங்களில் யாதொன்றையும் நான் காணவில்லையே. ஆதலால் அவனைத் தண்டித்து விடுதலை செய்வேன்'' என்று பிலாத்து யூதர்களிடம் கூறினான். மேலும் மக்களைத் திருப்திப் படுத்துவதற்காக அவரைக் கற்றூணில் கட்டி அடிக்கும்படி செய்து, சிலுவையில் அறைந்து கொல்லும்படி அவர்களிடம் அவரைக் கையளித்தான் (மத்.27:26; மாற்கு. 15:15; லூக்.23:13; அரு.19:1).
"இந்த மனிதனிடத்தில் நான் யாதொரு குற்றத்தையும் காணவில்லை'' என்று பிலாத்து கூறினபோதே அவன் அவரை விடுவித்திருக்க வேண்டாமா? ஆனால் நேர்மை யற்றவனாகிய அவன், ""அவனை நான் தண்டித்து விடுதலை செய்வேன்'' என்று உடனேயே சொல்லி விடுகிறான். குற்ற மற்றவரைத் தண்டிப்பது ஏன்? தண்டித்தால் யூதரின் மனம் மாறிவிடும் என எண்ணுகிறான். மூர்க்கமுள்ள யூதர்கள் அவனுடைய வார்த்தைகளில் அவனுடைய கோழைத் தனத்தைக் கண்டார்கள். ஆதலால் முதலில் தண்டிக்கவும், பின்னர் கொலை செய்யவும் அவன் அனுமதியளிக்கும்படி செய்து விட்டார்கள்.
சேசுநாதரைக் கற்றூணில் கட்டி அடிக்கும்படி கட்டளையிடப்பட்டவர்கள் உரோமைப் போர்ச் சேவகர்கள். விளையாட்டிற்காகத் துஷ்ட மிருகங்கள் முன்னே சிறுவரையும், பெண்களையும் வீசியெறிந்து வேடிக்கை பார்க்கும் உரோமையர், ஆத்திரம் அடைந்த போது அனுபவித்த சந்தோஷம், ஒரு மனிதனைக் கற்றூணில் கட்டி அடிப்பது என்றால், அந்தத் தண்டனையின் குரூரத் தைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. சிலுவை மரணத்தைப் போல, கற்றூணில் கட்டி அடிப்பதும் அடிமைகளுக்காக அக்காலத்தில் ஒதுக்கப்பட்டிருந்த தண்டனை (அப்.நட.16:37 காண்க.).
சேசுநாதர் உரோமையரின் இந்தக் குரூர தண்டனை களுக்கு முழுவதும் இலக்கானார். மோயீசனின் சட்டப்படி நாற்பது அடிகளோடு இது நிற்காது. அடிப்பவர்களின் ஆங்கார குரூரத்திற்கும், ஆள் பலத்திற்கும் தக்கவாறு எத்தனை அடிகளும் அடிக்கலாம் என்பது உரோமையரின் சித்தாந்தம். நமது இரட்சகர் எத்தனை அடிகள் வாங்கினார் என்று நமக்கு நிச்சயமாகத் தெரியாது. ஆனால் ஒன்று மாத்திரம் நமக்குத் தெரியும். நமது பாவங்களுக்குத் தகுந்த பரிகாரம் செய்ய வேண்டும் என்பது அவருடைய விருப்பம்!
அடிக்கும் கருவிகளும் பயங்கரமானவை. பலமான தோல்வார்களால் பின்னப்பட்ட கசைகள். அவைகளின் நுனியில் கூர்மையுள்ள எலும்புத் துண்டுகளும், இரும்புத் துண்டுகளும் பிணைக்கப்பட்டிருந்தன. இக்கொடிய கசைகளால் அடிபடும்பொழுது, பீறிட்டு வெளிவரும் இரத்தத்தோடு, சதையும் எலும்பும் பிய்த்துக்கொண்டு சிதறி விழும். யூதத் தலைவர்களும், பரிசேயரும், சதுசேயரும், அவமானம் நிறைந்த சிலுவை மரணமே சேசுநாதருக்குத் தகுந்தது என்று ஆர்ப்பரித்தவர்கள். அத்தோடு அவரைக் கட்டி அடித்துச் சித்திரவதை செய்து தங்கள் பகை வைராக் கியத்தைத் தீர்த்துக்கொள்ளவும் அவர்கள் ஆசைப் பட்டார்கள். ஆதலால் அடிப்பவர்களுக்குக் கைக்கூலி கொடுத்து ஏவித் தூண்டினார்கள்.
என் சகோதரனே, அஞ்ஞான அதிகாரியான பிலாத்து வின் அரண்மனை முற்ற வெளியில், நம் ஆண்டவரைச் சேவகர்கள் இழுத்து வருகிறார்கள். சகலருக்கும் முன்பாக மானபங்கமாய் அவருடைய உடைகளைக் கழற்றியெறி கிறார்கள். முற்றத்தின் நடுவில் நிற்கும் கற்றூணில் இறுகக் கட்டிப் பிணைக்கிறார்கள். அவருடைய இரு பக்கங் களிலும் நின்று தம் பலம் கொண்ட மட்டும் திவ்விய சேசுவைப் பலமாய் அடிக்கிறார்கள். கொடிய அந்தக் கசையடிகள் நம் அன்பரின் மென்மையான திருச்சரீரத்தின் மீது விழுகின்றன. அவருடைய இரத்தம் வீறிட்டு வெளி வருறது. சிறிது நேரத்தில் தேகமெல்லாம் வழிந்தோடும் இரத்த மயமாக மாறுகின்றது. இதைக கண்ட சேவகர்கள், இரத்த வெறி பிடித்த துஷ்ட மிருசங்களைப் போல சேசுநாதரின் சரீரம் முழுவதையும் மூர்க்கமாய் அடிக் கிறார்கள். இப்பொழுது அவருடைய தசையும் தெறித்து, நாற்புறமும் சிதறித் துண்டு துண்டாய் விழுகின்றது. இந்தக் கொடூரம் நீடிக்கிறது. முற்றத்தின் தளமானது, மனித அவதாரமெடுத்த மனித தேவனின் மாசற்ற இரத்தத்தால் நிரப்பப்படுகிறது. வெளியே இருந்து பார்த்துக்கொண்டு நிற்கும் மக்கள் கூட்டமும், உள்ளே இந்தக் கொடிய சித்திர வதையில் கலந்துகொள்ளும் மூர்க்கமுள்ள போர்ச் சேவகரும் சளைத்துக் களைததுப் போகுமட்டும் இந்த வாதை நீடிக்கிறது.
சேசுநாதரோ மவுனமாகவும், பொறுமையோடும் அந்த அடிகளை நம்மை நினைத்து ஏற்றுக்கொள்கிறார். அடிகளின் எண்ணிக்கையும் வேதனையும் அதிகரிக்க அதிகரிக்க, பாவிகளாகிய நம் பேரில் அவர் கொண்ட நேசமும் அதிகரிக்கின்றது. பூங்காவனத்தில் மரண மட்டும் ஆத்தும துக்கத்தை அடைந்த நம் ஆண்டவர், இப்பொழுது மரணமட்டும் சரீர வேதனையை அனுபவிக்கச் சித்த மாகிறார். ஆனால் இந்த முற்றத்திலேயே சேசுவை மரண மடைய விட்டுவிடுவது யூதர்களின் எண்ணமல்ல. தாங்கள் கொண்ட சபதத்தைத் தீர்த்துக்கொள்ள வேண்டும்; அடிமைகளின் அவமானச் சிலுவை மரணத்தை அவருக்குக் கொடுக்க வேண்டும் எனத் தீர்மானிக்கிறார்கள். ஆதலால் அங்கமெல்லாம் நொந்து தவிக்கும் நம் சாந்த சொரூபி யானவரைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள்.
என் சகோதரனே! தமது சொந்தத் திரு இரத்த வெள்ளத்திலேயே விழுந்து, நனைந்து, எழுந்து நிற்கும் உன் அன்புள்ள இரட்சகரைப் பார். நம் ஈனப் பாவங்களுக்குத் தகுந்த பரிகாரம் செய்யத் திருவுளமான தேவசுதன், இதோ சரீர இச்சைகளால் மனிதர்கள் கட்டிக்கொள்ளும் சகல பாவங்களுக்காகவும், தம்முடைய பரிசுத்த சரீரத்தில் வாதிக்கப்பட்டுப் பரிகாரம் செய்கிறார். ""அவர் பட்ட அடிகளால் நீங்கள் குணமடைந்தீர்கள்'' (1 இரா.2:24) எனப் பிரதம அப்போஸ்தலர் கூறுகிறார் அல்லவா? நம் சரீரத்திற்கு அவருடைய சரீரம் பிணையானது. நம் பாவங்களுக்கு அவர் தபசு செய்கிறார். சேவகர்கள் கசைகளால் அவருடைய திருச் சரீரத்தை வருத்தினார்கள். யூதர்கள் தேவதூஷணங்களால் அவருடைய மனதை வருத்தினார்கள். நாமோ, நமது பாவங் களால் அவருடைய இருதயத்தை வருத்தினோம்.
கற்றூணில் கட்டி அடிபட்ட சேசுநாதரை நினைக்கும் ஒவ்வொரு கிறீஸ்தவனும், ""என் சரீரத்தை வதைத்து அதைக் கீழ்ப்படுத்துகிறேன்'' (1கொரி.9:27) என்று அர்ச். சின்னப்பரோடு சொல்லக்கூடியவனாக இருக்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் தபசு, பரித்தியாகங்கள் செய்து, நமக்கென இந்தக் கொடிய வாதைகளை ஏற்றுக்கொண்ட நம்முடைய ஆண்டவருக்கு நம்முடைய அனுதாபமுள்ள அன்பைக் காட்ட வேண்டும். அவரும் பிலாத்துவின் அரண்மனை முற்ற வெளியில் தாம் சிந்திய விலைமதிக்கப் படாத தம்முடைய திரு இரத்தத்தை நம்மீது தெளித்தருள் வார். நமது சரீரத்தில் எழும்பும் மிருக இச்சைகள் தணிந்து நம்முடைய உடலும் உயிரும் பரிசுத்தமாகும்படி செய்தருள்வார்.