1. உறுதிப்பூசுதல் எப்போது ஸ்தாபிக்கப் பட்டது?
உறுதிப்பூசுதல் ஸ்தாபிக்கப்பட்ட சரியான நேரம் நமக்குத் தெரியாது. ஆனால் கிறீஸ்துநாதர் இந்தத் தேவத்திரவிய அனுமானத்தை ஏற்படுத்தி, தாம் பரலோகத்திற்கு எழுந்தருளிச் செல்வதற்கு முன்பாக சிறிது காலம் இந்த அனுமானத்தைப் பயன்படுத்துவதில் அப்போஸ்தலர்களுக்குப் பயிற்சி அளித்தார் என்பது நிச்சயம்.
2. கிறீஸ்துநாதர் இந்தப் பூலோகத்தை விட்டுச் செல்லும் முன்பாக அளித்த வாக்குத்தத்தம் என்ன?
தமத்திரித்துவத்தின் மூன்றாம் ஆளும் சத்தியத்தின் ஆவியானவருமான இஸ்பிரீத்து சாந்துவின் வழிகாட்டுதலை வாக்களித்தார். அவர்களுக்குத் தாம் கூறிய சகல காரியங்களையும் விளக்குவதற்காக அவரை அனுப்புவதாக அவர் வாக்களித்தார். “நான் என் பிதாவிடம் கேட்பேன். அவரும் உங்களுக்கு மற்றொரு தேற்றரவாளரை என்றென்றும் உங்களோடு தங்கியிருக்கும் படியாக அனுப்புவார்” (அரு. 14:16). “உங்கள் மீது வருகிற இஸ்பிரீத்து சாந்துவின் வல்லமையை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்” (அப். நடபடிகள் 1:8).
3. நம் ஆண்டவர் தமது வாக்குத்தத்தத்தை நிறைவேற்றினாரா?
ஆம். தமது பரலோக ஆரோகணத்திற்குப் பின் பத்து நாட்கள் தமது அப்போஸ்தலர்கள் மேல் இறங்கச் செய்தார். “அப்போது பலத்த காற்று அடித்தாற் போல, திடீரென்று வானத்தினின்று ஓர் முழக்கம் உண்டாகி அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுமையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினி மயம் போன்ற பிரிந்த நாவுகள் அவர்களுக்குத் தோன்றி அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து தங்கினது. அவர்கள் எல்லோரும் இஸ்பிரீத்து சாந்துவினால் நிரப்பப்பட்டு, பேசும்படிக்கு இஸ்பிரீத்து சாந்துவானவர் அவர்களுக்குக் கொடுத்த வரத்தின் படியே பற்பல பாஷைகளில் பேசத் தொடங்கினார்கள்” (அப். நடபடிகள் 2:2).
4. இஸ்பிரித்து சாந்துவானவர் இறங்கி வந்ததால் அப்போஸ்தலர்களிடம் எற்பட்ட மாற்றங்கள் என்ன?
அப்போஸ்தலர்கள் மெய்யாகவே உறுதிப் படுத்தப்பட்டார்கள். அதாவது, பலப்படுத்தப்பட்டார்கள். அவர்களது புத்தியானது தேவ விசுவாசத்தின் முழுமையான சத்தியங்களால் முழுவதுமாக ஊடுருவப் பட்டது. அவர்களுடைய மனங்கள் தேவ சத்தியங்களைத் தெளிவாகப் பற்றிக் கொண்டன. எந்த அச்சமுமின்றி உலக முழுவதற்கும் சுவிசேஷத்தைப் போதிக்கும் படி அவர்களது சித்தமும் அவரால் முழுமையாக ஆட்கொள்ளப் பட்டது.
5. இஸ்பிரீத்து சாந்துவானவர் இறங்கி வந்த நிகழ்வு ஆதிக் கிறீஸ்தவர்களின் மீது ஏற்படுத்திய விளைவுகள் என்ன?
அவர்கள் தங்கள் புதிய விசுவாசத்தின் காரணமாக பெரும் துன்பங்களையும் கடுமையான எதிர்ப்புகளையும் எதிர்கொள்வதற்கு அவர்களுக்கு உதவக் கூடிய ஒரு விசேஷமான அனுக்கிரகத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.
6. நம் ஆண்டவர் தமது அப்போஸ்தலர்களிடம் ஒப்படைத்த பணி என்ன?
உறுதிப்பூசுதல் என்னும் தேவத்திரவிய அனுமானத்தைப் பெற சரியான முறையில் தங்களை ஆயத்தப் படுத்திக் கொள்ளும் அனைவர் மீதும் தங்கள் கரங்களை விரிப்பதன் மூலம் இஸ்பிரீத்துசாந்துவை அவர்களுக்கு வழங்க சேசுநாதர் அப்போஸ்தலர்களுக்குக் கட்டளையிட்டார். “என் பிதா என்னை அனுப்பினது போல நானும் உங்களை அனுப்புகிறேன்” (அரு. 20:21).
7. ஞானஸ்நானம் பெற்றவர்கள் மீது கைகளை விரிப்பதன் மூலம் இஸ்பிரீத்து சாந்துவை இறங்கச் செய்யும் பண்டைய முறையைத் திருச்சபை இன்றும் கடைப்பிடிக்கிறதா?
ஆம். இஸ்பிரீத்து சாந்துவின் வரப்பிரசாதங்களை இப்போதும் திருச்சபை தானும் கொண்டிருப்பதோடு, ஞானஸ்நானம் பெற்ற விசுவாசிகள் மீது மேற்றிராணிமார்கள் கரங்களை விரிப்பதாகிய ஒரு விசேஷ தேவத் திரவிய அனுமானத்தின் மூலம் அவரது வரப்பிரசாதங்களை விசுவாசிகளுக்கும் பகிர்ந்தளிக்கிறது.