திவ்ய நற்கருணை நவநாள் ஜெபம் - மூன்றாவது நாள்.

இயேசு பேசுகிறார்

என்னண்டையில் வா. உனது கரங்களை எனது கரத்தின் மேல் வை. அஞ்சாதே. எனக்கு நீ விசேஷமான ஆள். உனது பெயர் எனக்குத் தெரியும். உனது முகத்தைப் பார்க்க விரும்புகின்றேன். உனது முகத்தில் வடியும் கண்ணீரைத் துடைக்க விரும்புகின்றேன். நான் இவ்வுலகைப் படைத்த நாள் முதல் நீ தனித்துவமானவன். உனக்கு நிகராக வேறு எவரும் இருக்க முடியாது. உனது தலையை உயர்த்தி உனக்கு வாழ்வளித்தமைக்காக என்னைப் புகழ்வாயாக. சிறப்பான முறையில் உன்னைத் தெரிந்திருப்பதற்காக என்னை போற்றிப் புகழ்வாயாக. ஏன் கவலைப்படுகின்றாய்? தனிமையில் நீ தவிப்பதேன்? நீ மன அமைதியை இழக்கக் காரணமென்ன? அதை எனக்குச் சொல்லு. உனது உள்ளத்தை வெறுமையாக்கும்பொழுது  எனது சமாதானத்தை நீ சுவைப்பாய். பழைய நினைவுகள் உன்னை வருந்துகின்றனவா? இரகசியமான குற்றம் எதுவும் உன் இதயத்தைக் குடைந்து உன்னைக் குழப்புகின்றதா? வா, அந்த துயரத்தை என்னிடம் தா. கடந்துபோன உனது குற்றத்தை நான் தயவோடு மன்னிப்பேன்.

சிந்தனை.

புனித லூக்காஸ் அதிகாரம் 4 : 40,41.

அவநம்பிக்கையால் அலைகழிக்கப்படுபவர்களையும், தன்னைப் பற்றிய சுய சிந்தனையால் வருந்துபவர்களையும், மனச்சோர்வுடையவர்களைப் பற்றியும் சிந்தித்துப்பார். அவர்களை இயேசுவிடம் அழைத்து வா. அப்பொழுது நீ அவரது குணமாக்கலின் கருவியாக மாற முடியும். கோபத்தை சுமந்துகொண்டு பழிவாங்கும் எண்ணத்துடன் திரிபவர்களை நீ அறிந்திருந்தால் அவர்களையும், போதைப்பொருளுக்கும், மதுவுக்கும் அடிமைப்பட்டவர்களையும், மோக இச்சையால் பீடிக்கப்பட்டவர்களையும் இயேசுவிடம் அழைத்து வா. எல்லோருக்கும் விடுதலையளிக்கவே அவர் வந்தார். அவரே இந்தப் பீடத்தில் இங்கே இன்னும் உயிரோடிருக்கிறார்.

அவரது வார்த்தையை ஏற்று எமது சொந்த வாழ்விலும் எமது குடும்பத்தினரின் வாழ்விலும், முழு உலகத்திற்கும், விடுதலையைக் கொண்டுவர வேண்டுமென மன்றாடுவோமாக.

எமக்காக பாடுகளை அனுபவித்த ஆண்டவரால் எமது காயங்கள் குணமாக்கப்படும். அவர் உள்ளம் உடைந்தவர்களைக் குணமாக்குகிறார். அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். (சங்கீதம் 146:3)

"பசும்புல் மேய்ச்சலில் என்னை இளைப்பாறச் செய்கிறார். என் களைப்பை ஆற்ற நீர் அருவிக்கு என்னை அழைத்துச் செல்கிறார், எனக்கு புத்துயிரூட்டுகிறார்". (சங்கீதம் 22:2,3)

"மேய்ப்பன் தன் ஆடுகளுள் சில சிதறுண்டுபோனால் எவ்வாறு அவற்றைத் தேடுவானோ, அவ்வாறே நாமும் நம்முடைய ஆடுகளைத் தேடுவோம்".

மப்பும் மந்தாரமுமான நாளில் அவை சிதறுண்டிருக்கும் எல்லா இடங்களிலிருந்தும் அவற்றை நாம் மீட்டு வருவோம். காணாமற் போனதைத் தேடுவோம். வழிதவறியவற்றைத் திரும்பிக் கொண்டுவருவோம். எலும்பு முறிந்தவற்றிற்குக் கட்டுப் போடுவோம். வலு இல்லாததைத் தேறும்படி செய்வோம். (எசேக்கேயேல் 34: 12,16) (உமக்கு அதிக ஆறுதலைத் தருகின்ற இறைவார்த்தையை ஆழ்ந்து தியானிக்கவும். இயேசு உம்மைத் தேற்றுவார்).

செபம்.

இயேசுவே தினமும் காலையில் எம்மோடு நடந்துவாரும். சூரிய உதயத்தில் நம்பிக்கை பிரகாசிக்கின்றது. ஆனாலும் மற்றவர்களுக்கும் இந்த நம்பிக்கையை எடுத்துச் செல்வோமாக. ஆண்டவரே என் மூலமாக நீர் யாரிடம் பேசவேண்டுமென்று விரும்புகிறீரோ, அவர்களிடம் என்னை வழிநடத்திச் செல்லும். உமது கருவியாக பயன்படுத்த உமக்கு நான் இடமளித்தாலும், எனது வாழ்வில் உமது பிரசன்னம் அதிகமாக வெளிப்பட வேண்டுமென்பதை நான் அறிவேன். எந்த அளவுக்கு நான் மற்றவர்களுக்கு ஆறுதல் அளிக்கின்றேனோ, அந்த அளவுக்கு நானும் உமது ஆறுதலையும், குணமாக்கலையும் கண்டுகொள்வேன்.

இருப்பினும், ஆண்டவரே, எனக்குப் பயமாக இருக்கிறது. நான் ஏன் தயங்க வேண்டும்? எனது நடை ஏன் தளர வேண்டும்? எனது தைரியம் தோற்றுவிடுமா? ஆண்டவரே, எனதருகிலே இருந்தருளும். உம்மைப் பற்றி நிற்கும் எனது பிடி தளர்ந்தாலும் இயேசுவே, என்னைத் தாங்கியருளும். வரவிருக்கும் நாட்களும், மாதங்களும், வருடங்களும் நான் உம்மை மறந்துவிட்டீராக காலமாக அமைவதாக. கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் நான் உமது பாதத்திலிருந்து உமது வல்லமையை உய்த்துணர்ந்து உமது ஆறுதலை பெற்றுக்கொள்ளும் நாட்களாக இருக்கவேண்டும். ஆண்டவரே, உம்மை தரிசிக்க அஞ்சுபவர்களை ஆசீர்வதியும். நீர் உம்மை எனக்குக் காண்பித்தது போல அவர்களும் உம்மை அறிந்துகொள்ளச் செய்தருளும். ஆம் ஆண்டவரே, தங்களுக்குக் குணமளிப்பவராகவும், தங்கள் இரட்சகராகவும், நிரந்தர சமாதானம் அளிப்பவராகவும் அவர் உம்மை அறிந்துகொள்ள செய்வீராக. ஆமென்.

இயேசுவின் சமாதானம் உன்னுள் நிறையும் பொருட்டு, அவர் முன்னிலையில் அமர்ந்து அவரது சமாதானத்தின் மூச்சை உள்வாங்கு.

(குற்ற உணர்வினால் வெட்கப்படுபவர்களுக்காக இறை இரக்கத்தின் ஜெபமாலை ஜெபிக்கவும்)