இயேசு பேசுகிறார்.
அஞ்சாதே, என்னிடம் வா, இன்று நான் உனக்கு விசேஷ செய்தி ஒன்றை சொல்ல வேண்டும். ” நீ தேவநற்கருணையில் என்னைச் சந்திக்க வரும் ஒவ்வொரு தடவைக்கும் உனக்குச் சம்பாவனை உண்டு என்பது உனக்குத் தெரியுமா? என்னிடம் வரும் எவரும் வெறும் கையாய் வீடு திரும்புவதில்லை”. நீ நற்செய்திகளைக் கேட்பாய். உனது இதயம் அன்பாலும் ஆனந்தத்தாலும் நிரப்பப்படும். உனது மனம் தெளிவு பெறுவதைக் காண்பாய். எனது சந்நிதியில் நீ அமைதியாக இருக்கும்போது உனது புத்திக்கெட்டாத விதமாக நீ வளம் பெறுகின்றாய். இதை நீ விளங்கிக் கொள்ள வேண்டுமென்பது எனது விருப்பமாகும். நீ எனக்கு விசேஷமாக வேண்டப்படுகின்றாய். உனது பெயர் எனக்குத் தெரியும். எனது உள்ளங்கையில் உனது பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. நீ உன்னைப்பற்றி எப்படி நினைத்தாலும் பரவாயில்லை. ஆனால் நானோ உன்னை எனது அன்புக்குரியவனாக காண்கின்றேன். உனக்காக இரத்தம் சிந்தி மரித்தவன் என்ற வகையில் பார்க்கின்றேன். சிறப்பான முறையில் நான் உன்னை ஆசீர்வதித்துள்ளேன். உனக்கு நான் கொடைகளை வழங்கியுள்ளேன். அவற்றை நீ பயன்படுத்தும்போது அவை மேலும் வளம்பெறும். எனக்கு ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் வழங்கிய சிறுவனை உனக்கு நினைவிருக்கிறதா? அவற்றைக் கொண்டு எத்தனைபேருக்கு உணவளித்தேன்! நீ எனக்குத் தருபவை அனைத்தையும் நான் ஏற்றுப் பயன்படுத்துவேன். உனது கரங்களை எனக்குத் தா. பகிர்ந்தளிப்பதற்கு அவை விரிந்திருக்கும் வண்ணம் நான் அவற்றை ஆசீர்வதிப்பேன். உனது கண்களை எனக்குத் தா. பிறரது தேவைகளுக்கு அவை உதவும்பொருட்டு உனது பார்வையை நான் ஆசீர்வதிப்பேன். உனது குரலை எனக்குக் கொடு. நீ பேசுவதைக் கேட்பவர்கள் அன்பாலும் மகிழ்ச்சியாலும் நிரப்பப்படும்படி நான் அதை ஆசீர்வதிப்பேன். எனது இதயத்தை நான் உனக்குத் தருவதுபோல நான் உன்னை அன்பு செய்யும்படி உனது இதயத்தை எனக்குத் தா.
சிந்தனை.
கொடுங்கள், உங்களுக்கு இருமடங்காகக் கொடுக்கப்படும். இறைவனின் தாராளத் தன்மைக்கு அதிகமாக நாம் எதுவும் செய்துவிட முடியாது. அவர் விரும்பியவாறு எனது உடல் உறுப்புகளை அவருக்கு ஒப்புக்கொடுத்து அவரது பிரசன்னத்தில் அமைதியாக அமர்ந்திருக்கும்போது எனது உள்ளம் மகிழ்ச்சியால் நிரம்புகின்றது. நாம் விளங்கிக் கொள்ள முடியாத வகையில் பல ஆசீர்வாதங்களை அவர் வாக்குப்பண்ணுகிறார்.
1. நம்முடைய வலக்கை உன்னைத் தாங்கிக்கொள்ளும். (இசை. 41:10)
2. எனது மகிமையின் செல்வங்களின் நிமித்தம் உனது தேவைகளை நிறைவு செய்வேன். (பிலிப்பியர் 4:15)
3. உனக்குப் பலமளிப்பவரான என் மூலமாக நீ அனைத்தையும் செய்ய முடியும். (பிலிப்பியர் 4:13)
4. நான் ஒருபோதும் உன்னைக் கைவிடேன். உன்னைவிட்டுப் பிரியேன். (எபிரேயர் 13:15)
5. எனது அன்பிலிருந்து எதுவுமே உன்னைப் பிரிக்க முடியாது. (உரேமையர் 8:38)
6. நீ எங்கு சென்றாலும் உனது ஆண்டவரும் இறைவனுமாகிய நான் உன்னோடிருக்கிறேன்.
செபம்.
ஆண்டவரே, நான் குருடாகிப் போயிருந்தேனே. எத்தனையோ முறை நான் துன்பத்துக்குள்ளாகி தொலைவிலே இருந்திருக்கின்றேன். ஏனெனில் நான் அவ்வேளையில் உம்மிடம் வரவில்லை. சிற்சில வேளைகளில் தொடர்ச்சியாக எனது வாழ்க்கை மகிழ்ச்சியற்ற நாட்களாகவும், துக்கமற்ற இரவுகளாகவுமே கழிந்தன. எனது மனப் பயத்தின் சத்தம் அதிகமானதால் உமது அழைப்பை என்னால் கேட்க முடியவில்லை. ஆண்டவரே, உமது மட்டில் நான் நேர்மையாய் இருக்க வேண்டும். நீர் என்னிடம் எதைக் கேட்பீரோ என்ற பயத்தால் நான் உம்மிடம் வரவில்லை. நான் அவ்வளவு நல்லவன் அல்லன் என்பதால் எனக்கு நீர் செவிகொடுக்க கரிசனை கொள்ளவில்லை என்றும், நீர் என்னைக் கைவிட்டுவிட்டீர் என்றும் நான் சில சமயம் நினைத்ததுண்டு. ஆண்டவரே, எனது அறியாமையை நான் உணருகின்றேன். என்னை மன்னித்தருளும் எனக்குக் கிடைக்கக் கூடிய மிருதுவான அன்புக்கு இலக்கணமான அன்பர் நீர்தாமே. எனக்கு எவ்வளவு தரமுடியுமோ அவை அனைத்தையும் தருவதற்கு ஆவலாய் இருக்கும் நீர், என்னிடமிருந்து அற்பமானதையே கேட்கின்றீர். நானோ எனது இதயத்தை உமக்குத் தர தயங்குகின்றேனே. ஆண்டவரே இதோ எனது இருதயத்தை உமக்குக் கையளிக்கின்றேன். ஆண்டவரே வாரும், வந்து பொறாமை, கோபம், குளிர்ந்த மனப்பான்மை, சுயநலம் முதலான சுவர்களை என்னிடமிருந்து தகர்த்துவிடும். குணமளிக்கும் உமது வார்த்தைகளை எனது இதயத்தில் பேசும், உள்ளத்தின் நோவுகளைத் தளர்த்திவிடும், எனக்குள் இருக்கும் வலியை தணித்தருளும். அனைத்துலகிலும் உள்ள எனது சகோதர சகோதரிகள் சார்பாக எமது இல்லங்களுக்கு நீர் வருகை தரவேண்டுமென்று உம்மை அழைக்கின்றேன் சுவாமி. எமது இல்லங்கள் உம்மை நோக்கி அபயக்குரல் எழுப்புகின்றன. உமது பீடத்தின் முன்பாக அன்பை அறிக்கையிட்டு மண ஒப்பந்தமானவர்கள் ஒருவரை ஒருவர் வெறுத்து வாழுகிறார்கள். அன்பை அணையவிடாது பாதுகாத்த வார்த்தைகள் இன்று கோபத்தை மூட்டுகின்றன. பிரிந்து நிற்கும் பெற்றோர் உட்பட சகல குடும்பங்கள் மேலும் தயவாயிரும். ஆண்டவரே, உமது அன்பையும் சமாதானத்தையும் நிலைநிறுத்தியருளும். மீண்டும் வாரும், மீண்டும் பேசும், மீண்டும் குணமாக்கும், திரும்பவும் எம்மைத் தொடும்.
ஆமென்.
(பிரிந்திருக்கும் குடும்பங்களுக்காக இறை இரக்கத்தின் செபமாலையைச் செபிக்கவும்)