என் இருதயத்தின் இரக்கம் வற்றாதது என்று நான் சிறப்பான விதத்தில் கற்பிக்க ஆசைப்படுகிறேன். எரியும் சுவாலை போல் நான் அவர்களை நேசத்தால் பற்றி எரியச் செய்வேன் என்று மனச்சோர்வு கொண்டவர்கள் அறியட்டும். பக்தியும் பரிசுத்தத்தனமும் கொண்டுள்ள ஆத்துமங்களுக்கு நான் வழியாய் இருக்க விரும்புகிறேன். புனிதத்தின் பாதையில் அவர்கள் விரைந்து சென்று நித்திய பாக்கியம் தரும் துறைமுகத்தில் பத்திரமாய் சேர்வார்கள். என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட குருக்கள், துறவிகள் போன்றவர்களிடமிருந்து அவர்களுடைய அன்பை நான் இன்னொரு முறை கேட்கிறேன். எனது அன்பைப் பற்றி அவர்கள் ஒருபோதும் சந்தேகம் கொள்ளக்கூடாது. முக்கியமாக அவர்கள் என்னில் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
தாங்கள் ஒன்றுமில்லாதவர்கள், பலவீனர்கள் என்பதால் அவர்களுடைய ஆத்துமங்களில் நான் முதலில் செயல்படுகிறேன் என மக்கள் கண்டறியும்படிச் செய்வேன். நான் நித்தியத்திலிருந்தே தயாரிக்கும் நேசத்தின் முதல் தொடர் அங்கு தொடங்குகிறது.
நேசத்திலும் மன்னிப்பிலும் என்னுடைய இருதயம் எவ்வளவு தூரம் செல்லக் கூடும் என ஆத்துமங்கள் அறியச் செய்வேன். என்னை மகிழ்ச்சிப்படுத்த, தேற்ற, மகிமைப்படுத்த அவர்களுக்குள்ள ஆசையை நான் கண்டுணர்வேன். ஆனால் அவர்கள் பலவீனத்தினால் தவறிய பின், தாழ்ச்சியுடன் தங்கள் குற்றங்களை ஏற்றுக் கொள்வார்களானால் என் இருதயத்தை மகிமைப்படுத்துகிறார்கள், தேற்றுகிறார்கள். அவர்களுடைய சிறுமையை நான் பொருட்படுத்துவதில்லை. அவர்களிடம் குறைவாக உள்ள எல்லாவற்றையும் நான் சரிப்படுத்த முடியாதா?
உயிரிழந்திருக்கும் பெரும்பாலான ஆத்துமங்களுக்கு உயிர் கொடுக்கும்படி அவர்களுடைய பலவீனத்தை நான் பயன்படுத்துகிறேன்.
தவறிப்போன ஆத்துமங்களின்மேல் நான் கொண்டுள்ள இரக்கத்துக்கும் நேசத்துக்கும் அளவு கிடையாது. மன்னிக்க நான் ஆசையாய் இருக்கிறேன். மன்னிப்பது எனது ஆனந்தம். அவர்களுடைய வரவை நான் எப்போதும் எதிர்பார்த்து நிற்கிறேன். எதுவும் அவர்களை அதைரியத்துக்கு உள்ளாக்கக் கூடாது. அவர்கள் செய்ய வேண்டியது சகல பாவத்தையும் அகற்றி தங்களை என் கரங்களில் வைத்து விடுவதே; நான் அவர்களுடைய தந்தையல்லவா?
ஆத்துமங்களை, வெகு சிறப்பாக அவர்களுக்கு உண்மை வாழ்வு கொடுக்க எனக்கு இருக்கும் ஆசையை அறியாது இருளில் இருக்கும் ஆத்துமங்களை, என்னிடம் கொண்டு வருவதில் தாங்கள் செய்யக் கூடிய உதவிகளை சிலர் தக்க விதமாக அறிவதில்லை.
ஜோசபா! என் அன்பின் இரகசியங்களை நான் உனக்கு அறிவிப்பேன். என் இரக்கத்துக்கு ஓர் உயிருள்ள அத்தாட்சியாக நீ இருப்பாய். பேரன்புக்கு இன்னும் தகுதியுள்ளவளாக ஆகாத உன்னுடனேயே நான் சகிப்புடன் நடந்து கொள்கையில், அதிக தாராள குணமுள்ள ஆத்துமங்களுக்கு நான் என்னதான் செய்ய மாட்டேன்?
என் இருதயத்துக்குள் நுழைவாயாக. ஒன்றுமில்லாமை - யானது இந்த அன்புக் கடலில் மூழ்கி மறைந்து போவது எளிது.
நான் உன்னிடம் சொல்லும் இந்த வார்த்தைகளால் எத்தனையோ ஆத்துமங்களுக்கு உயிரளிக்கப்படும்! தங்களுடைய உழைப்பின் பலனைப் பார்த்ததும் எத்தனையோ பேர் தைரியம் பெறுவார்கள்! சற்று தாராள குணத்துடன், பொறுமையுடன் அல்லது வறுமையில் செம்மையாய் நடந்து கொள்வார்களானால், பெரும் எண்ணிக்கையான ஆத்துமங்களைக் காப்பாற்றக்கூடிய வரப்பிரசாதங்கள் சேர்க்கப்படுகின்றன.
என் இருதயமானது அன்புக் கடல், இரக்கத்தின் ஊற்று. என்னுடைய உற்ற நண்பர்களும் மனித பலவீனம் என்னும் விதிக்கு விலக்கானவர்கள் அல்ல என எனக்குத் தெரியும். அவர்களுடைய ஒவ்வொரு சாதாரண செயலும் உலக இரட்சிப்பின் பணியில் அளவற்ற வல்லமை பெறக் கூடியதாகும்படி செய்வேன்.
தொலைவிலுள்ள நாடுகளுக்குச் சென்று எல்லோரும் மக்களுக்குப் போதிக்க முடியாது. ஆனால், என் இருதயத்தை பிறர் அறியச் செய்யவும் நேசிக்கச் செய்யவும் முடியாதவர்கள் ஒருவருமே இல்லை. ஒருவருக்கொருவர் உதவி செய்வதால், ஆத்துமங்கள் பாதிக்கப்படுவதை தடுக்கலாம். ஏனெனில் நேசமும் இரக்கமும் உள்ள நான் அவர்களுடன் ஒத்துழைப்பேன். எல்லாவற்றையும் எனக்காக தியாகம் செய்யும் அவர்களுடைய தாராள குணமானது பாவ வழியினின்று பாவிகளை மனம் திருப்ப பெரும் உதவியாய் இருக்கும்.
அவர்களுடைய சாதாரண சிறு செய்கைகளுக்கும் தெய்வீக வல்லமை கொடுத்து அவர்களுடைய அன்றாட வாழ்க்கையை நான் பயன்படுத்துவதுடன் அவர்களின் பலவீனத்தையும் தவறுதல்களையும், குற்றங்களையும் கூட உலக மீட்புக்காகப் பயன்படுத்துவேன்.
தான் எவ்வளவு பாக்கியமில்லாமல் இருக்கிறோம் என்பதை ஒரு ஆத்துமம் நன்கு உணர்ந்து பார்க்கையில், நன்மையான எதையும் தன்னுடையதாக்க வேண்டுமென அது கூறாது; தாழ்ச்சியுள்ளதாகவே நடந்து கொள்ளும்.
ஆதலால் சீடத்துவப் பணியில் அல்லது அதன் கடமைகள் ஒன்றில் ஈடுபட்டிருக்கையில் தாங்கள் ஒன்றும் சாதிக்க முடியாதவர்கள் என்ற எண்ணத்துக்கு வரும்போது அல்லது தாங்களே புனிதர்களாய் இல்லாதிருக்கையில் மற்ற ஆத்துமங்களை புனிதத்தின் பாதையில் நடத்துவது எங்கனம் என அவர்கள் பின்வாங்குகையில், இவ்விதம் நடத்தி உதவுகின்ற ஆத்துமங்கள் தரைமட்டும் தங்களை தாழ்த்துவார்களாக. தங்களுடைய அசட்டைத்தனத்தைப் பற்றி அவர்கள் வெட்கப்பட்டு என் பாதத்தில் வந்து தங்களுக்குத் தேவையான பலமும் தைரியமும் கேட்டு என் இருதயத்திடம் கெஞ்சி மன்றாடுவார்களானால், எவ்வளவு அன்புடன் என் இருதயம் அவர்களுக்கு உதவி செய்து, அவர்களுடைய உழைப்புகளுக்கு எவ்வளவு ஆச்சரியத்துக்குரிய பலன் கொடுக்கிறது என்பதைக் கண்டு பிடிப்பது கடினம்.
தாராள குணமில்லாத ஆத்துமங்கள் தாங்கள் திரும்பத் திரும்ப மேற்கொள்ளும் உறுதியான தீர்மானங்கள் பலன் கொடாமல் போகின்றன என்பதை அறிய வருவார்கள்.
முயற்சிப்பதாக வாக்களித்து, பின் தங்கள் வாக்குறுதியின்படி நடக்காதவர்களுக்கு நான் சொல்வதாவது: "இந்த பயனற்றவைகள் யாவும் நெருப்புக்கு இரையாகி ஒரு வினாடியில் காற்றில் அடித்துச் செல்லப்படும்".
ஆனால் மற்றொரு பிரிவினர் உண்டு. இவர்களைப் பற்றியே நான் இப்பொழுது சொல்கிறேன். இவர்கள் மிகுந்த நல்ல மனதுடன் நாளைத் துவக்குகின்றனர். தங்கள் நல்ல மனதை உறுதிப்படுத்தும்படி இன்னின்ன நேரங்களில் தங்களை ஒறுத்து தாராள குணத்துடன் நடக்க விரும்புகிறார்கள். ஆனால் அதற்கான வாய்ப்பு வரும்போது சுய விருப்பம், உடல் இன்பம் அல்லது இது போன்ற ஒரு காரணத்தை முன்னிட்டு தாங்கள் சற்றுமுன் செய்யத் தீர்மானித்ததை செய்யாது விடுகிறார்கள். எனினும் விரைவில் அவர்கள் தங்கள் நிலையற்ற தன்மையை ஏற்றுக் கொண்டு, மன்னிப்புக் கேட்டு, தங்கள் உறுதியைப் புதுப்பித்து, தாராள குணத்துடனும் நேசத்துடனும் நடந்து கொள்வதாக வாக்களித்து, திரும்பவும் நம்பிக்கையுடன் தங்களை என் இருதயத்தினிடம் ஒப்படைக்கிறார்கள். இந்த ஆத்துமங்கள் என்னை வெகுவாக மகிமைப்படுத்துகிறார்கள். இவர்கள் தவறாதிருந்தால் செய்திருக்கக்கூடிய நன்மைகளைவிட நாளடைவில் அதிக நன்மைகளைச் செய்கிறார்கள்.
ஓர் ஆத்துமத்தை நான் அழைத்ததும் உடனே அதன் குறைகளும், பாக்கியமில்லாத நிலையும் மறைந்தொழிகின்றன என நான் சொல்வதில்லை. இந்த ஆத்துமம் இன்னும் தவறலாம், தவறும்; ஆனால் அது தன்னை தாழ்த்துமானால், தன் ஒன்றுமில்லாமையை ஏற்றுக்கொள்ளுமானால், தாராள குணத்துடனும் நேசத்துடனும் நடந்து, தன் குற்றங்களுக்கு பரிகாரம் செய்ய முயற்சிக்குமானால், என் இருதயத்தின் மீது நம்பிக்கை வைத்து தன்னை முழுதும் என் இருதயத்திடம் ஒப்படைக்குமானால் .. அது என்னை அதிகமாய் மகிமைப்படுத்தும், அது ஒருபோதும் தவறாதிருந்தால் செய்யக்கூடிய நன்மையைவிட ஆத்துமங்களுக்கு அதிக நன்மை செய்யும்.
அந்த ஆத்துமம் எவ்வளவு பாக்கியமிழந்த நிலையிலிருந்தாலும் அது என்னை மிக நேசிக்கும். எனினும் தவறுதலாக பலவீனத்தால் செய்யும் குற்றங்களைப் பற்றியே சொல்கிறேன்; வேண்டுமென்று முழுமனதுடன் செய்யும் குற்றங்களைப் பற்றி நான் பேசவில்லை .
என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆத்துமங்கள் யாவும் தங்களுடைய சாதாரண செயல்களாலும், அன்றாட அலுவல்களாலும் செய்து முடிக்க வேண்டியிருக்கும் ஆச்சரியத்துக்குரிய வேலையை உணரும்படி உன்னுடைய வாழ்க்கையில், அது எவ்வளவு குற்றம் குறைகள் உள்ளதாயிருந்தபோதிலும் எனக்கு ஒப்புக் கொடுப்பாயாக.
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
என் இருதய இரக்கம் வற்றாதது
Posted by
Christopher