1. "நானோ புருஷனை அறியேனே?" என்ற வார்த்தைகளிலேயே மாதா தனது நித்திய கன்னிமையைத் தெளிவுப்படுத்தி விட்டார்கள் !
2. மாதாவின் நித்திய கன்னிமையைப் பழிப்பவர்கள், "யாகப்பனும், யோசேப்பும், சீமோனும், யூதாவும் இவருடைய (சேசுவின்) சகோதரர்கள் அல்லவோ ?'' (மத்.13:55) என்ற வேத வாக்கியத்தை அதற்கு சாட்சியாகக் காட்டுகிறார்கள். எனவே இந்த நால்வரும் யார் என்பதை ஆராய்வது நமக்கு அவசியமாயிருக்கிறது.
அ. இவர்களில் யூதா என்பவர் அப்போஸ்தலரான அர்ச். யூதா ததேயு ஆவார். இவர் தமது நிரூபத்தின் தொடக்கத்தில், "சேசுகிறீஸ்துவின் ஊழியனும், யாகப்பரின் சகோதரனுமாகிய யூதா'' (யூதா. 1:1) என்று தம்மை அறிமுகப்படுத்துகிறார். ஒருவேளை பதிதர்கள் கூறுவது போல, சேசுநாதரின் உடன்பிறந்த சகோதரராக இவர் இருந்திருப்பார் என்றால் அதைத்தான் அவர் பெருமையோடு வெளிப்படுத்தியிருப்பார். இங்கே அவர் தமது ஒரு சகோதரரின் பெயரைக் கூறுகிறார். ஏனெனில் யூதாவோடு அவர் மட்டுமே அப்போஸ்தலர்களில் ஒருவராக இருந்தார்.
ஆ. "கலிலேயாவிலிருந்த வந்து சேசுவுக்குப் பணிவிடை செய்து கொண்டு வந்த ஸ்திரீகளுக் குள்ளே, மரியமதலேனம்மாளும், யாகப்பருக்கும் யோசேப்புக்கும் தாயான மரியம்மாளும், செபதேயுவின் குமாரர்களுடைய தாயும் இருந்தார்கள்" (மத். 27:56) என்ற வாக்கியத்தில் அர்ச் மத்தேயு (1) யாகப்பருக்கும் யோசேப்புக்கும் தாயான மற்றொரு மரியம்மாளை அறிமுகப் படுத்துகிறார்; (2) மூன்றாவதாக, யோசேப் என்னும் சகோதரரை அறிமுகப்படுத்துகிறார்.
இ. அர்ச். மாற்கு தமது சுவிசேஷம் 15:47- ம் வசனத்தில், 'யோசேப்பின் தாயான மரியம்மாள்'' பற்றிக் குறிப்பிடுகிறார்.
ஈ. மத்தேயு 10:3-லும், மாற்கு, 3:18-லும் "அல்பேயுவின் மக்களான யாகப்பரும், ததேயுவும் " என்கிறார்கள். இங்கே மேற்கூறப்பட்ட நால்வரின் தந்தை அறிமுகப்படுத்தப்படுகிறார்.
உ. அனைத்திற்கும் மேலாக, அர்ச். அருளப்பர் தமது சுவிசேஷம், 19:25-ல், 'சேசுநாதரின் சிலுவையருகே அவரது தாயாரும், அவர் தாயாரின் சகோதரியாகிய கிளேயோப்பா மரியம்மாளும், மரிய மக்தலேனம்மாளும் நின்றுகொண்டிருந்தார்கள்" என்கிறார். இதன் மூலம், மாதாவின் சகோதரி பெயரும் மரியம்மாள்தான் என்றும், அவளது கணவர் பெயர் அல்பேயு அல்லது கிளேயோப்பா என்றும், இவர்களுக்குப் பிறந்தவர்கள்தான் யூதா, யாகப்பர், யோசேப் மற்றும் இவ்வாக்கியங் களில் குறிப்பிடப்படாத சீமோன் ஆகியோர் என்பதை அருளப்பர் தெளிவுபடுத்துகிறார்.
பெற்றோரின் உடன்பிறந்தவர்களின் பிள்ளைகளை சகோதர, சகோதரிகளாக முறையிட்டு நாம் அழைப்பதைப் போலவே யூதர்களும் அழைத்து வந்தார்கள். ஆயினும் அவர்கள் ஒருபடி மேலே சென்று, எல்லா உறவினர்களையுமே சகோதரர்கள் என்று அழைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். உதாரணமாக:
1. ஆதி.13:8-ல் ஆபிரகாம் தம் சகோதரன் மகனான லோத்தைப் பார்த்து, "நாம் சகோதரர் அல்லவோ?" என்கிறார்.
2. ஆதி. 29:15-ல் யாக்கோபின் தாய்மாமனும், அவருக்குப் பெண் கொடுத்த மாமனாரு மாகிய லாமேக் அவரைசகோதரன் என்று அழைக்கிறார்.
மேலும் நம் ஆண்டவரும் கூட தம் அப்போஸ்தலர்களைத் தம் சகோதரர்கள் என்றே அழைப்பதைப் பாருங்கள் (மத். 28:10; அரு. 20:17). இந்த அடிப்படையில்தான் மத். 13:55-ல் கூறப்பட்டுள்ள நால்வரும் சேசுநாதரின் சகோதரர் என்று அழைக்கப்படுகிறார்கள், ஆனால் அவர்கள் சேசுவுக்கு உடன்பிறந்தவர்கள் அல்ல என்பது உறுதியாகிறது.
உண்மையில் சேசுவுக்கு உடன்பிறந்தோர் இருந்திருந்தால், சேசுநாதர் சிலுவையின் மீதிருந்த போது, தம் தாயாரை அர்ச். அருளப்பரிடம் ஒப்படைக்கத் தேவையிருந்திருக்காது. மேலும், அவருக்குப் பன்னிரண்டு வயது நடக்கும் போதும், கானாவூர்த் திருமணத்திலும் அவருடைய சகோதரர்கள் என்று யாரும் கலந்துகொண்டதாக சுவிசேஷகர்கள் குறிப்பிடவில்லை.
அடுத்து, "அவள் தன் தலைச்சன் பிள்ளையை ஈன்றெடுக்கும் வரைக்கும் அவர் (சூசையப்பர்) அவளை அறியாதிருந்தார்" (மத். 1: 25) என்ற வாக்கியத்திற்குப் பதிதர்கள் மிக அருவருப்பான அர்த்தம் கற்பிக்கிறார்கள். அவர்களது விளக்கங்கள் தவறானவை என்பதைப் பின்வரும் வேத வாக்கியங்களைக் கொண்டு நாம் எண்பிக்கலாம்.
1. "இதோ நான் உலக முடிவு வரைக்கும் உங்களோடு இருக்கிறேன்" என்றவர், உலகம் முடிந்ததும் நம்மை விட்டு விலகிப் போய்விடுவாரா? இதற்கு அதுதான் அர்த்தமா?
2. "நான் வருமளவும் வாசிக்கிறதிலும், புத்தி சொல்லுகிறதிலும், உபதேசிக்கிறதிலும் கவனிப்பாயிரும்'' என்று திமோத்தேயுவுக்கு அர்ச். சின்னப்பர் அறிவுறுத்தும் போது, நான் வந்தபின் நீர் இவற்றில் அலட்சியமாயிருக்கலாம் என்று அவர் சொல்கிறாரா?
3. "நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும் வரைக்கும் நீர் எம் வலது பாரிசத்தில் உட்கார்ந்திரும்” (சங்.109:1) என்று சுதனிடம் சொல்லும் பிதா, "அதன்பின் நம்மை விட்டு விலகிப் போய்விடும்” என்ற அர்த்தத்தில் இப்படிச்சொல்கிறாரா?
4. "அது (காகம் - நோவேயின் பேழையை விட்டுப்) புறப்பட்டு பூமியின் மீது தண்ணீர் வற்றிப் போகும் வரை திரும்பவேயில்லை " (ஆதி. 8:7) என்பதால், தண்ணீர் வற்றிய பின் அது திரும்பி வந்தது என்று எடுத்துக் கொள்ளலாமா?
இவை தவிர இசை. 22:14, 46:4, மத். 12:20, 2 அரசர் 6:23 என்று இந்த 'வரை" என்ற வார்த்தை உள்ள வேத வாக்கியங்களை நாம் சொல்லிக்கொண்டே போகலாம். எனவே, அவள் தன் தலைச்சன் பிள்ளையை ஈன்றெடுக்கும் வரை, என்பதற்கு, ஈன்றெடுத்த பின்னும் என்பதுதான் உண்மைப் பொருள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.