சர்வேசுரா சுவாமீ! மனுஷர் சயனத்தால் இளைப்பாற இராத்திரி காலம் கட்டளையிட்டருளினீரே, உமக்கே தோத்திரம் உண்டாகக்கடவது. இன்றெனக்குச் செய்த சகல உபகாரங்களுக்கும் உமக்குத் தோத்திரம் செய்து, என்னால் செய்யப்பட்ட பாவங்களை எல்லாம் பொறுத்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றேன். அவைகள் தேவரீடைய அளவில்லாத மகிமைக்கும் நன்மைத்தனத்திற்கும் விரோதமாயிருக்கிறதினாலே முழுவதும் அவைகளை வெறுக்கிறேன். இந்த இராத்திரியிலே திடீர் மரணத்திலும் துர்க்கனவு முதலான பசாசின் சோதனை களாலும் அடியேனுக்கு மோசம் வரவொட்டாமல் காத்துக் கொள்ளும். ஆ என் கோவே! என் மரண வேளையிலே இஷ்டப் பட்டு உமது சிலுவையை ஆவலோடு தழுவி உயிர் விடவும், உமது ராச்சியத்தில் உம்மோடே நிரந்தரம் அடியேன் இளைப்பாறவும் கிருபை செய்தருளும். ஆமென்.
நித்திரை ஒழுக்கம்
நீ நித்திரை செய்யப் போகையில் உன் படுக்கையைக் கல்லறை யாக எண்ணி நித்திரைச் சாயலாக மரணம் எத்தனை விரைவாய் வரலாமென்றும், அப்போது உலக சுக வெகுமான எண்ணங்க ளெல்லாம் எவ்விதமாகுமென்றும் சிந்திப்பாய். சயன இளைப் பாற்றியால் கையில் சுவாமிக்குப் பணிபுரிய அதிகச் சக்தி உண்டாக உன் சயனத்தை அவர் அமல் திருவுளத்திற்குத் தூய மனத்தோடு ஒப்புக் கொடு. நித்திரையிலே நீ விடும் சுவாசமெல்லாம் நித்திரை யற்ற பாரம் தூதரும் மற்ற பரலோக வாசிகளும் இடைவிடாது செய்யும் தோத்திரத்துக்கு ஒப்பாக வேண்டுமென்று விரும்பி, உன் இரட்சகருடைய திருக்கரத்தில் உறங்குவதாக எண்ணுவாய். சேசு மரியே சூசையே என் கடைசி அவஸ்த்தையில் எனக்கு உதவி செய்தருளும்.
நீ படுக்கையில் சென்றபின் நித்திரை வராவிட்டாலும் அல்லது கொஞ்சம் தூங்கியபின் நித்திரை அகன்றாலும் மறுபடி நித்திரை பிடிக்கிற வரையில் செய்யவேண்டியது :
1 வது செபமாலை சொல்லுகிறது
2 வது சாவு, தீர்வை, நரகம், மோட்சத்தைக் குறித்துத் தியானிக்கிறது
3 வது உத்திரிக்கிறஸ்தலத்தில் வேதனைப்படுகிற ஆத்துமாக்களுக்கு வேண்டிக் கொள்ளுகிறது
4 வது பொது அல்லது தனி ஆத்தும சோதனை செய்கிறது
5 வது சீவியத்தைச் சீர்ப்படுத்தி நித்தியத்தை உறுதி செய்து கொள்ளத் தகுந்த உபாயங்களை யோசிக்கிறது
6 வது நரகத்தில் ஆத்துமாக்கள் படும் கொடிய உபாதனைகளை நினைத்துச் சேசுநாதர் பூங்காவனத்தில் கொண்ட ஆகோர நடுக்கம் பயம் உபாதை களை நினைக்கிறது
7 வது அர்ச்சியசிஷ்டவர்கள் சம்மனசுகளோடு தனிமையாய் இரூப்பதாக எண்ணி, அவர்களோடு சம்பாஷணை செய்கிறது
8 வது தளங்களுக்குக் கர்த்தராயிருக்கிற தேவனே, நீர் பரிசுத்தர் பரிசுத்தராயிருக்கிறீர்; உமது மகத்துவம் பொருந்திய மகிமைப் பிரதாபத்தால் வானமும் பூமியும் சம்பூரணமாயிருக்கின்றன; என்னைப் படைத்த பிதாவுக்கும் என்னை இரட்சித்த சுதனுக்கும் எனக்கு ஆனந்த உபசாந்தியாகிய இஸ்பிரித்து சாந்து வுக்கும் என்றென்றைக்கும் எல்லாப் படைப்புகளாலும் ஸ்தோத்திரம் உண்டாக்ககடவது. என் சீவிய கர்த்தாவே சேசுவே வாழி, என்னும் இப்படிப்பட்ட மனவல்லயச் செபங்களையும் செபிக்கவும்.
"அர்ச் கன்னிமரியம்மாளின் மாசில்லாத பரிசுத்த உற்பவம் ஸ்துதிக்கப்படுவதாக."
"கன்னி மரியம்மாளே! நீர் உமது உற்பவத்தில் மாசில்லாமலிருந்தீர். நீர் இஸ்பிரீத்து சாந்துவினால் கர்ப்பமாகிப் பெற்ற உமது சுதனாகிய சேசுவினுடைய பிதாவிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்"
கடைசி வேண்டுதல்
மட்டில்லாத தயைசுரூபியாயிருக்கிற நித்திய சர்வேசுரா! உமக்கு மிகவும் பிரியமுள்ள திருக்குமாரன் மனோவாக்குக் கெட்டாத கொடிய வேதனைப்படவும், அவர் படும் வேதனையைக் கண்டு அவர் திருத் தாயார் சொல்லிலடங்காத வியாகுலப்படவும், எங்கள் பாவம் காரணமாகையால், நாங்கள் பாவத்தின் அகோரத்தைக் கண்டு அஞ்சி நடுங்கி மனஸ்தாபப்படவும், இனி ஒருநாளும் பாவத்தைச் செய்யாதிருக்கவும், செய்த பாவத்திற்கு தபசு செய்யவும் எங்கள் மேல் உமக்குள்ள மட்டில்லாத சிநேகத்துக்கு எங்களால் ஆன மட்டும் இவ்வுலகில் உம்மை நேசிக்கவும் நித்தியத்தில் இடைவிடாமல் நேசித்து வரவும், உமது சிநேகம் சகல மனிதர் இருதயத்திலும் பற்றி எரியவும், அக்கியானம் குறையவும் சத்தியவேதம் பரவவும் சத்திய இராசாக்கள் தங்களுக்குள்ளே சமாதானமாயிருக்கவும், திருச்சபையை விட்டுப் பிரிந்தவர்கள் திரும்ப அதில் பிரவேசிக்கவும், அர்ச் பாப்பு நினைத்த தர்மக் காரியங்கள் ஜெயமாகவும், பஞ்சம் படை நோய்கள் நீங்கவும் உத்தரிக்கிறஸ்தலத்தில் வேதனைப்படுகிற ஆத்துமாக்கள் அவதி குறையவும், நான் யாருக்காக வேண்டிக் கொள்ள வேண்டுமென்று தேவரீர் திருவுளமாயிருக்கிறீரோ அவர்கள் எல்லோரும் உமது விசேஷ நன்மையைக் கைக் கொள்ளவும், உமது திருக் குமாரன் எங்களுக்காகச் சிந்தின விலைமதியாத் திரு இரத்தத்தையும், அவர் திருத் தாயார் அனுபவித்த சொல்லிலடங்காத வியாகுலத்தையும், சிலுவையின் பேறடைந்த அர்ச்சியசிஷ்டவர்களுடைய வேண்டுதலையும் குறித்து அடியார்கள் கேட்கிற மன்றாட்டுகளுக்கு இரங்கிக் கிருபை செய்தருள வேண்டுமென்று தேவரீரை இரந்து மன்றாடிக் கொள்ளுகிறோம்.
இடைவிடாமல் ஸ்துதிக்கப்பட தகுதியுள்ளதுமாய் மிகுந்த மதுரமுள்ள பூசிதமுமாயிருக்கிற பரம் திவ்விய நற்கருணைக்கே அநவரத காலமும் முடியாத ஆராதனையும் ஸ்துதியும் தோத்திரமும் உண்டாக்கடவது.
சென்மப் பாவமில்லாமல் உற்பவித்து எப்பொழுதும் பரிசுத்தக் கன்னியுமாய் எமது ஆண்டவளுமாய்க் கொண்டாடப்பட்டவளுமாயிருக்கிற அர்ச். தேவ மாதாவினுடைய அமலோற்பவத்துக்கும் தோத்திரம் உண்டாகக்கடவது.
சர்வேசுரனுடைய அர்ச். மாதாவே! இதோ உமது சரணமாக ஓடி வந்தோம். எங்கள் அவசரங்களிலே நாங்கள் வேண்டிக் கொள்கிறதற்கு நீர் பாராமுகமாய் இராதேயும். ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் மோட்சம் உடையவளுமாய் இருக்கிற நித்தியக் கன்னிகையே, சகல ஆபத்துக்களிலிருந்து எங்களை தற்காத்துக் கொள்ளும்.
தேவபிரசாதத்தின் தாயே! இரக்கத்துக்கு மாதாவே! அர்ச். மாதாவே! எங்கள் மாற்றானுடைய சோதனை யிலும் மரண நேரத்திலும் உமது திருக்குமாரனை வேண்டிக் கொள்ளும். எங்களைக் காக்கவும் ஆளவுங் கைக்கொண்டு நடத்தவும் வேண்டுமென்று உமது திருப்பாதத்தை முத்தி செய்து மன்றாடுகிறேன்,
ஆமென்.
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
சயன ஆராதனை
Posted by
Christopher