அர்ச். சாமிநாதர், பொலோனாவுக்குச் சற்று வெளியே, குன்றுகளின் பரிசுத்த மாமரி மடத்தில் மரணப் படுக்கையில் இருந்த போது, தாம் தமது சகோதரர்களின் பாதங்களின் கீழ் புதைக்கப் படும்படி, உடனடியாகத் தம்மைப் பொலோனாவுக்கு எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார். அங்கே, அழுது கொண்டிருந்த தமது சகோதரர்களிடம், மோட்சத்திலிருந்து தாம் அவர்களுக்கு இன்னும் அதிக உதவியாக இருக்கப் போவதாக உறுதிகூறின பிற்பாடு, அவர்களுககு பின்வரும் இறுதி உயிலையும், உடன்படிக்கையையும் விட்டுச் சென்றார்:
“என் குழந்தைகளே! உங்களுக்கு நான் விட்டுச் செல்கிற பரம்பரைச் சொத்து இதோ: நீங்கள் ஒருவரையயாருவர் நேசியுங்கள். தாழ்ச்சியைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். தன்னிச்சையான தரித்திரத்தை உங்கள் பொக்கிமாகக் கொண்டிருங்கள்.”
அப்போது, எத்தகைய பக்தியோடும், கண்ணீரோடும், விம்மல்களோடும் மரித்துக் கொண்டிருக்கிறவர்களுக்கான ஜெபத்தை அவர்கள் சொல்லியிருப்பார்கள்! அச்செபத்தில், சர்வேசுரனுடைய அர்ச்சிஷ்டவர்களே, இவரது உதவிக்கு வாருங்கள், ஆண்டவருடைய தூதர்களே, இவரைச் சந்திக்கத் தீவரித்து வாருங்கள், இவரது ஆத்துமத்தைப் பெற்றுக் கொண்டு, உன்னதமானவருடைய பேரின்பப் பிரகாசத்திற்கு அதைக் கையளியுங்கள் என்ற வார்த்தைகளை அவர்கள் உச்சரித்த போது, அர்ச். சாமிநாதர் தமது கரங்களைப் பரலோகத்தை நோக்கி உயர்த்தியபடி, தமது ஆத்துமத்தைக் கையளித்தார்.