திவ்ய நற்கருணை நவநாள் ஜெபம் - ஏழாம் நாள்.

இயேசு பேசுகிறார்.

மகிழ்ந்திருப்போரே, எல்லோரும் என்னிடம் வாருங்கள், உங்கள் மகிழ்ச்சியை நிறைவானதாக்குவேன். உண்மையான அன்பை உங்களிடமிருந்து பறித்துவிடக்கூடியவை எவை என்று உங்களுக்குக் கற்பிப்பேன். வெறுப்புணர்வு, கோபம், விரோத மனப்பான்மை, தீர்க்கப்படாத முரண்பாடுகள், பேராசை, சுயநலம் என்னும் காரணிகள்தான் உங்களிடமிருந்து மகிழ்ச்சியைப் பறித்துக்கொள்கின்றன. உங்கள் இதயங்களைத் தூய்மையாய் வைத்திருப்பதெப்படி என்பதை என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். எனது அழகையும், நன்மைத்தனத்தையும் உள்வாங்கிக் கொள்ளுங்கள். துயரப்படுபவர்களே, என்னிடம் வாருங்கள். உங்கள் வாழ்க்கை ஞாயமற்றதாக அமைந்திருக்கிறது எனக் கருதுகிறீர்களா? உங்கள் திட்டங்கள் தோல்வி கண்டுள்ளனவா? நீங்கள் நம்பிக்கை வைத்திருந்தவர்கள் உங்களை ஏமாற்றிவிட்டார்களா? உங்கள் வாழ்க்கையில் எல்லாமே பிழைத்துவிட்டனவா?

குழந்தாய் நீ இப்பொழுது சரியான இடத்தில்தான் இருக்கின்றாய்; என்னோடு பேசு, (உனது இதயத்தை என்னிடம் வெறுமையாக்கு) உனது இதயத்தின் ஆழத்தில் படிந்திருக்கும் மாசுக்களை அகற்றும்போது கூட உனது இதயத்தை முழுமையாக வெறுமையாக்கிவிடும் எனது ஆவி உன்னைத் தேற்றிச் சமாதானத்தால் உன்னை நிரப்பி வழிநடத்துகின்றது. உன்னால் எவ்வளவு நேரம் எனது சந்நிதானத்தில் இருக்க முடியுமோ அவ்வளவு நேரமும் என்னோடிரு. ஆறுதலடைந்துகொண்டாய்  எனவும், பலம் பெற்றுள்ளாய் எனவும் நீ உணரும்வரை என்னோடிரு. நீ வெளியேறும்பொழுது எனது ஊழியனாய் இரு. வாழ்க்கையில் தோல்வி கண்டவர்களையும், துன்பப்படுபவர்களையும், நம்பிக்கை இழந்திருப்பவர்களையும் தேடிப்போ. காயமுற்ற வைத்தியர் என என்னை அழைப்பர். துன்பங்களை அனுபவித்த நீங்கள் நான் உங்களுக்குத் தந்த அன்பையும் இரக்கத்தையும் மற்றவர்களுக்குத் தரவல்ல காயமுற்ற குணமளிப்பவர்களாய் இருக்கிறீர்கள். நான் உன்னை எனது சீடனாகத் தெரிந்துள்ளேன். நீ அனுபவித்த துன்பங்கள் உனக்கு ஒரு பயிற்சிக்களமாக அமைந்து அதனூடாகப் பிறரது துன்பங்களைக் கேட்டறிந்து அவர்களைக் குணமாக்கக் கூடிய தகைமை பெற்றிருக்கின்றாய். ஓ! எனது அன்புக் குழந்தாய், நீண்ட காலமாக நான் மறைத்து வைத்திருந்த எனது வல்லமை எனது உதவியுடன் வெளிப்படும். உண்மையினதும் அன்பினதுமான எனது அரசு பரப்பப்படும். எனக்குச் சீடனாயிருக்க உனக்குச் சம்மதமா?

சிந்தனை.

1. (அரு. 15:16)

"நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை, நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன். நீங்கள் உலகிற் சென்று பலன் தரும்படியாகவும், அந்தப் பலன் நிலைத்திருக்கும்படியாகவும் உங்களை ஏற்படுத்தினேன்".

2. (இசை. 6:8)

யாரை அனுப்புவோம்? நமக்காக எவன் போவான்? உடனே நான் "இதோ அடியேன் என்னை அனுப்பும்".

3. (எரே. 1:5,8)

"உன் தாய் வயிற்றில் உன்னை உருவாக்குமுன்பே நான் உன்னை அறிந்தோம். மக்கள் இனங்களுக்கு இறைவாக்கினராக உன்னை ஏற்படுத்தினோம். அஞ்சாதே உன்னைப் பாதுகாக்க நாம் உன்னோடு இருப்போம்".

4. (உப. 32:10-12)

"அவர் பாழான நாட்டிலும், பயங்கரத்துக்குரிய ஆளற்ற பரந்த இடத்திலும் அவர்களைக் கண்டுபிடித்தார். கழுகு தன் குஞ்சுகளின் மேல் பறந்து அவைகளைப் பறக்கும்படி தூண்டுவது போலவும், தன் இறக்குகளை விரித்துக் குஞ்சுகளை அவற்றின் மேல் சுமப்பது போலவும் ஆண்டவர் அவர்களை நடத்துவார்".

5. (மாற். 16:15)

"உலகெங்கும் போய் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள்".

செபம்.

இயேசுவே, உமது ஆசியையும், நீர் தரும் ஆறுதலையும் பெற உம்மிடம் வருவது வேறு, மோயீசனைப்போல் மாபெரும் பணியை ஏற்றுக்கொள்வது வேறு, இசையாசைப்போல் நானும் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள உபாயம் தேடவே விரும்புகின்றேன். எரேமியாவைப்போல் நானும் அபாத்திரவான் என்பதை உணருகின்றேன். நான் தகுதியற்றவன் என்பதைக் காண்கின்றேன். இருப்பினும் ஆண்டவரே, ஊடுருவும் உமது பார்வை எனது ஆன்மாவின் ஆழத்தைத் தொட்டிருக்கின்றது. எனது சுயநலத்திலிருந்தும், தற்பெருமையிலிருந்தும் என்னை இழுத்துக்கொள்ளும். உமது குரலொலியை என்னால் கேட்க முடிகின்றது. எனது சாக்குபோக்குகள் நியாயமற்றவை என்பது எனக்குத் தெரிகின்றது. எனத சிந்தனை மனுக்குலத்திற்காக நீர் பட்ட பாடுகளை நோக்கி்க் கல்வாரிக்குப் பயணிக்கின்றது. எனக்கு முன்பாக மனிதனுக்காக ஏங்கும் உமது இதயத்துடிப்பை நான் உணருகின்றேன். ஆண்டவரே, எனது பணி கடினமானதாயிருப்பினும், உனது வளங்களில் மாத்திரம் தங்கியிருக்க விடமாட்டேன் என்ற உமது வாக்குறுதியை நம்பி நான் புறப்படுவேன். இயேசுவே வாரும், குளிர்ந்த மனப்பாங்குடைய எனது இதயத்தை உமது அன்பின் அனற்பொறியால் தொட்டருளும். ஆண்டவரே, உமது இரட்சண்யத்தினதும் சமாதானத்தினதும் அன்பினதும் நற்செய்தியை அறிவிக்க எனது கண்களைத் திறந்தருளும். எனது நாவின் கட்டுகளைத் தளர்த்திவிடும். தேவ நற்கருணையிலே உமது வல்லமை எல்லையற்றதாயிருக்கின்றது. அந்த வல்லமையுடன் நான் வெளியே செல்லுவேன். இந்த நாளிலே என்னை ஆசீர்வதித்து தூய்மையான உமது ஆழ்ந்த அன்பினால் எனது இதயத்தை நிரப்பும். ஆண்டவரே, அன்பு செய்யவும் குணமளிக்கவும் இந்தப் பீடத்திலிருந்து உமது வல்லமை வெளியேயும் பரவச்செய்தருளும்.

(உலகில் உள்ள நோயாளிகளுக்காகவும், துன்புறுவோருக்காகவும் இறை இரக்கத்தின் செபமாலையைச் செபிக்கவும்.)