அன்பும் பிணைப்பும்:
கடவுள் ஆணும் பெண்னுமாகப் மனிதனைப் படைப்பின் தொடக்கத்திலேயே உண்டாக்குகிறார். திருமணத்தின் முக்கியமான பண்பு அவர்களின் இணைபிரியா அன்பு; பிரிக்கமுடியாத பிணைப்பு. திருமணம் என்னும் இந்த பிரிவுபடுத்த முடியாத பிணைப்பால் அவர்கள்ஒருவருக்கொருவர் தங்களையே முழுமையாக தன்னலமற்ற அர்ப்பணிப்பால் ஒரு குடும்பமாக வாழ அழைக்கப்படுகிறார்கள்.
உடன்படிக்கை:
கத்தோலிக்க திருமண அருட்சாதனம் என்பது ஒரு உடன்படிக்கை. கணவனும் மனைவியும் எந்தவித வறுப்புறுத்தலுமன்றி, எவ்வித வெளி அச்சுறுச்துதலுமின்றி முழுமனதுடன் பரிமாறிக்கொள்ளும் வாக்குறுதி: இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் ஒருவருக்கொருவர் பிரமாணிக்கமாயிருந்து, வாழ்நாளெல்லாம் நேசிக்கவும் மதிக்கவும் வாக்களிக்கிறனர். தங்கள் வாக்குறுதி மூலம் இத்திருவருட்சாதனதை நடத்துவது திருமணத் தம்பதியரே. குருவும் மற்ற இரு நபர்களும் சாட்சிகளளே. இவ்வாக்குறுதியானது தம்பதியரில் ஒருவர் இறக்கும் வரை ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்துகிறது.
கிறிஸ்தவ மணமக்கள் தங்களின் இப் புது நிலமையிலிருந்து எழும் கடமைகளையும் மாண்பையும் செயல்படுத்துவதற்கு இவ் அருட்சாதனத்தின் வழியாக வலுப் பெறுகின்றனர். ஒருநிலையில் திருநிலைப்படுத்தப் படுகிறார்கள். இந்த திருவருட்சாதனத்தின் ஆற்றலால் அவர்கள் தங்களின் திருமண மற்றும் குடும்பக் கடமைகளை நிறைவேற்றுகின்றனர், விசுவாசம், நம்பிக்கை, பரம அன்பு ஆகியவற்றால் தங்கள் வாழ்வு முழுவதையும் நிறைத்து நிற்கும் கிறிஸ்துவின் ஆவியால் நிரப்பப்படுகின்றனர், அவ்விதமே ஒருவர் ஒருவரைப் புனிதப்படுத்துகின்றனர், இவ்வாறு அவர்கள் ஒன்று சேர்ந்து இறைவனை மாட்சிப்படுத்துகிறார்கள்.
திருச்சபையின் வழிகாட்டுதல்:
குடும்பத்தின் உயிருள்ள உறுப்பினர் என்ற முறையில் குழந்தைகள் தங்கள் பெற்றோர் புனிதமடையத் தங்களுக்குரிய வகையில் உதவுகிறார்கள். (2 வத். சங்க ஏடு: இன்றைய உலகில் திருச்சபை: 48)
திருமண அன்பு திருமணத்திற்கே உரிய செயலாகிய தாம்பத்திய உறவில் வெளிப்படுத்தப்படுகிறது, முழுமையடைகிறது. ஆகையால் எச்செயல்கள் வழியாக மணமக்கள் தூய்மையான முறையில் தமக்குள் நெருங்கி ஒன்றிக்கிறார்களோ, அச்செயல்கள் நேர்மையானவை, மாண்பு பெற்றவை.... மணமக்கள், புனித வாழ்வு நடத்துவதற்குரிய அருளால் வலுப்பெற்று, அன்பின் உறுதி , பெருந்தன்மையுடைய உள்ளம்,தியாக உணர்வு ஆகியவற்றை விடாமுயற்சியடன் கடைப்பிடித்து அவற்றை அடைந்திட செபத்தில் வேண்டுதல் தேவை. (2 வத். சங்க ஏடு: இன்றைய உலகில் திருச்சபை:49)
குழந்தைகள் திருமணத்தில் மிகச் சிறந்த கொடையாக இருப்பதுடன், பெற்றோரின் நலனுக்கும் அவர்கள் பெரிதும் உதவுகின்றனர். (2 வத். சங்க ஏடு:இன்றைய உலகில் திருச்சபை:50)
மணமக்களே தங்களுக்குள் ஒரே அன்பாலும் மன ஒற்றுமையாலும் ஒருவர் ஒருவரை புனிதப்படுத்துவதாலும் இணைந்திருப்பார்களாக. (2 வத். சங்க ஏடு: இன்றைய உலகில் திருச்சபை:52)
தயாரிப்பு:
இத்திருவருட்சாதனத்தைப் பெறுவதற்கு தக்க தயாரிப்பு தேவை. இத்தயாரிப்புக்காக ஒவ்வொறு பங்கிலுமோ அல்லது மறைவட்ட அளவிலோ அல்லது மறைமாவட்ட அளவிலோ பயிற்சி வகுப்புகள் அல்லது கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. இப் பயிற்சி வகுப்புகள், திருமணம் முடிக்க இருக்கும் அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திருமண வயது வந்த ஆண், பெண் யாரும் இந்த பயிற்சி வகுப்புகளில் பங்கு கொள்ளாம்.