"அவர்கள் சேசுநாதரைக் கூட்டிப் போய், சிவப்புச் சால்வையை அவரிடமிருந்து எடுத்து, அவருடைய சொந்த உடைகளை அவருக்கு அணிவித்தார்கள். பின்பு அவரைச் சிலுவையில் அறைய இழுத்துச் சென்றார்கள். அவரும் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு கொலைக் களத்திற்குச் சென்றார்'' (மத்.27:31; மாற்கு.15:20; லூக். 23:24; அரு.19:16).
யூதர்கள் தங்கள் கையால் சேசுவைக் கொல்ல ஆசிக்க வில்லை. உரோமையர்களைக் கொண்டு அவரைக் கொல்ல வேண்டும் என்பதே அவர்களுடைய ஆவல். ஆகையால் தான் உரோமையர்களின் கேவலமான தண்டனையான சிலுவை மரணம் சேசுநாதருக்குக் கிட்டியது. இந்த அவமான மரணத்தை அவருக்குக் கொடுக்க வேண்டு மானால் வழியிலேயே அவர் இறந்துவிடக்கூடாது. மேலும், ஒரு வேளை பிலாத்து மனம் மாறி சேசுநாதருக்கு வேறு தண்டனையைக் கட்டளையிடலாம். ஆதலால் யூதர்கள் சேசுவை வேகமாகக் கொலைக்களம் நடத்திச் செல் கிறார்கள்.
நமது அன்புள்ள இரட்சகரும், தம் கையில் கொடுக்கப்படும் அந்த பாரமான சிலுவையை வாரி அணைத்து முத்தமிடுகிறார். இந்தச் சிலுவை அவருக்குப் பல காரியங்களை நினைவூட்டுகிறது. பாவ மனிதர்களைப் பரம பிதாவோடு பந்தனப்படுத்துவதும், பரலோகத்தை மகிமைப்படுத்துவதும் இந்தச் சிலுவையேதான். சாவுக்கும் நரகத்திற்கும் பாத்திரமாயிருந்த அற்ப மனிதர்களை அர்ச்சியசிஷ்டவர்களாய் ஆக்குவதும் இதே சிலுவைதான். அறிவீனர்களுக்கு ஞானம் கொடுப்பதும், பலவீனர்களுக்குத் தைரியம் கொடுப்பதும் இந்தச் சிலுவையே. அன்பு வடிவான வரப்பிரசாத ஒளிவீசும் சர்வேசுரனை அடியார்களின் அகக் கண்முன்னே கொண்டு வருவது இந்தச் சிலுவையே. துன்ப துயரத்தில் ஆறுதலும், இன்ப சந்தோஷத்தில் எச்சரிக்கையும் கொடுப்பது இந்தத் திருச்சிலுவையே. பசாசுக்களை நடுநடுங்கச் செய்ய வல்லது இத்திருச்சிலுவையே. பரம பிதாவின் நீதியைக் குறித்துக் காட்டுவது இத்திருச்சிலுவை. கடைசியாக, என் சகோதரனே, உன்னுடையவும், என்னுடையவும், சகல மனிதர்களுடையவும் ஆத்துமங்களின் கிரயத்தை நமது அன்பருக்கு ஞாபகமூட்டுவதும் அதே பாரமான, கரடுமுரடான சிலுவையேதான். ஆகையால் நமது அன்பரின் கனிவுள்ள நெஞ்சம் அச்சிலுவையைக் கண்ட மாத்திரத்தில் தன்னோடு அணைத்துக் கொள்கிறது. இரத்தம் தோய்ந்த அவரது திரு அதரங்கள் அச்சிலுவையை முத்தமிடுகின்றன. விரிந்த அவரது திருக்கரங்கள் அச்சிலுவையை வாரியெடுக் கின்றன. அப்பொழுது, அவரைக் கொல்லும் பரம சண்டாளரின் பாவ அக்கிரமங்கள் மாத்திரமல்ல, சகல மனிதர்களுடைய துரோகச் செயல்களும் அந்தப் பாவப் பரிகாரக் கருவியாகிய சிலுவையோடு சேர்ந்து நிற்கின்றன. ஆகையால் சேசு அச்சிலுவையை அணைத்து முத்தமிடும்போது, உன்னையும் என்னையும் சகல மனிதர்களையும் சேர்த்துத் தமது இருதயத்தோடு அணைத்துக்கொள்கிறார்.
அந்நேரம், எபிரேய முறைப்படி ஆறாம் மணி வேளை; அதாவது பகல் உச்சிப் பொழுதாயிருந்தது. நமதாண்டவர் தமது சொந்த உடைகளை அணிந்துகொண்டு தம் கடைசிப்பிரயாணத்தைத் தொடங்குகிறார். அவருடைய கழுத்தில் இருநது அவர் பெயரும் மரண தண்டனைக்கான காரணமும் எழுதப்பட்ட பலகை ஒன்று தொங்குகின்றது. சேசுநாதர் சிலுவையைத் தூக்கித் தோளின்மேல் வைத்துக் கொண்டு நடக்கிறார். ஏற்கெனவே அடைந்திருந்த உபாதனைகளால் ஏற்பட்ட பலவீனமும், களைப்பும், தவிப்பும் அவரைத் தாங்கித் தாங்கி நடக்கும்படி செய் கின்றன. யூதர்கள் ஆர்ப்பரித்துச் சத்தமிட்டு, அவர் வேகமாய் நடக்கத் துரிதப்படுத்துகின்றனர். ஆகையால் சேசுநாதர் தடுமாறிக் கீழே விழுகின்றார். ஆ! அவ்விதம் விழுந்தது அந்தப் பெரும் சிலுவையின் பாரத்தால் மாத்திர மன்று; அவர் சுமந்த நமது கணக்கற்ற பாவங்களும், சிலுவைப் பளுவோடு சேர்த்து நம் இரட்சகரைத் தரை மட்டும் அழுத்தின. அவரும் அங்கம் படியத் தரையில் விழுந்து, திரும்ப எழுந்து நடக்கின்றார்.
சேசுநாதர் ஜெருசலேம் வீதிகளில் இத்தகைய தத்தளிப்பு அங்கலாய்ப்போடு தம் சிலுவையைச் சுமந்து செல்லும் பொழுது, அவருடைய பரிதாப நிலையைக் கண்டு அனுதாபக் கண்ணீர் சிந்தியவர்கள் ஒரு சில ஸ்திரீகளே. அநீதமாய் அவர் அடையும் தண்டனையைக் கண்டு அவர்களுடைய அங்கம் பதறுகின்றது. அந்தப் புண்ணிய ஸ்திரீகளின் முன் அணியில் சேசுவைப் பெற்ற அன்புள்ள தாயாரான பரிசுத்த கன்னிமாமரி நிற்கிறார்கள். தனது செல்வ மகன் அடையும் திருப்பாடுகளைக் கண்டு, மாசற்ற இருதயம் வியாகுல வாளால் ஊடுருவப்பட்டவர்களாய், அவர் முன்னே எதிர் நோக்கிச் செல்லுகிறார்கள். தாயும் மகனும் சந்திக்கும் அந்நேரம், எதிரிகளுடைய மனதையும் உருக்க வல்லது மாதா மனுக்குலத்திற்கு மகிமையும் பெருமையும் கொடுக்கப் பிறந்தவர்கள். படைக்கப்பட்ட சிருஷ்டிகளில் அதிபிரமாணிக்கமுள்ள சிருஷ்டி. பெண்களுக்குள் ஆசீர் வதிக்கப்பட்டவர்கள். மகனோ மனுக்குலத்திற்குப் புண்ணிய வழிகாட்டும்படி அவதாரமான தேவசுதன். அன்பின் வடிவ மும், அன்பின் கண்ணாடியும் சந்திக்கின்றன. கருணையின் ஊற்றும், கருணையின் வாய்க்காலும் கலந்து இயங்கு கின்றன. இத்தகைய இரண்டு இருதயங்களும் கரை காணாத துக்கத்தால் நிரம்பி நம்முடைய மீட்புக்காகப் பரிகாரம் செய்திருக்கும்போது, இவர்களைப் பிரித்து வைக்கலாமா? மாதா எனக்குத் தேவையில்லை, மகன் இருந்தால் போதும் என்று வாய் கூசாமல் பேசலாமா? அன்று கபிரியேல் உரைத்த மங்கள வார்த்தையின் அர்த்தத்தை உணர்ந்தவுடன், ""ஆகக்கடவது'' எனக் கன்னிகையாய் இருந்த இவர்கள் தன் கன்னிமைக்குப் பழுதில்லாமல், மாதா ஆக சம்மதித்தார்கள். இன்று தன் கன்னி உதரத்தில் கருவான திருமகனுடைய இரத்தம் எல்லாம் கழுமரமாகிய சிலுவை யையும், ஜெருசலேம் வீதிகளிலுள்ள கல்லையும், மண்ணை யும் நனைப்பது கண்டு, ""ஆகக்கடவது'' எனப் பிதாவின் சித்தத்திற்குச் சம்மதிக்கிறார்கள். அன்று, ""உம்முடைய இருதயத்தையும் ஒரு வாள் ஊடுருவும்'' என்று சிமியோன் சொன்ன வார்த்தையைக் கேட்டு வேதனைப்பட்டார்கள்; இன்று அந்த வாள் தன்னுடைய மாசற்ற இருதயத்தை ஊடுருவுவது கண்டு, அமைதியுடன் ""ஆகக்கடவது'' என்று மனது பணிகிறார்கள். ஆதலால் என் சகோதரனே, ஒருநாளும் இந்த மாதாவையும் மகனையும் பிரிக்கக் கனவிலும் நினையாதே. மாதாவை முன்னே விட்டு மகனிடம் செல்ல முயற்சிப்பதுதான் ஈடேற்றத்தின் வழியும் நியதியுமாய் இருக்கிறது.
இவ்விதமாய் சேசுநாதர் நமது இரட்சணியப் பாதை யைச் சிலுவைப் பாதையாய் ஆக்கத் திருவுளமானார். என் அன்புள்ள சகோதரனே, மரணத்தின் கருவியாயிருந்த இந்தச் சிலுவை இப்போது வாழ்வின் ஜெய விருதாக மாறி விட்டது. சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சிக்கத் திருவுளமான தேவன், சிலுவையின் மூலமாகவே உன்னையும் என்னையும் ஈடேற்றப் போகிறார். ஆதலால் நீயும் உனக்கு சர்வேசுரன் கொடுக்கும் சிலுவையை உன் தோள்மேல் சுமந்துகொண்டு சேசுவைப் பின்செல்வாயாக. நித்தியத்திற்கும் தெய்வீக அன்பையும், அன்பின் சிகரமாகிய தியாகத்தையும் எங்களுக்கு நினைவூட்டும் பரிசுத்த திருச்சிலுவையே வாழ்க!