பரிசுத்த தமத்திரித்துவத்தைப் பற்றிய விசுவாச சத்தியம்

1. ஒரே ஒரு சர்வேசுரன்தான் இருக்கிறாரா?

ஆம். ஒரே ஒரு சர்வேசுரன்தான் இருக்கிறார்.


2. சர்வேசுரனில் எத்தனை ஆட்கள் இருக்கிறார்கள்?

கர்வேசுரனில் பிதா, சுதன், இஸ்பிரீத்து சாந்து என்னும் மூன்று ஆட்கள் இருக்கிறார்கள்.


3. பிதா சர்வேசுரனா?

ஆம். பிதா சர்வேசுரனாகவும், பரிசுத்த தமத்திரித்துவத்தின் முதலாம் ஆளாகவும் இருக்கிறார்.


4. சுதன் சர்வேசுரனா?

ஆம். சுதன் சர்வேசுரனாகவும், பரிசுத்த தமத்திரித்துவத்தின் இரண்டாம் ஆளாகவும் இருக்கிறார்.


5. இஸ்பிரீத்து சாந்து சர்வேசுரனா?

ஆம். இஸ்பிரீத்து சாந்து சர்வேசுரனாகவும், பரிசுத்த தமத்திரித்துவத்தின் மூன்றாம் ஆளாகவும் இருக்கிறார்.


6. தமத்திரித்துவம் என்பதின் அர்த்தம் என்ன?

தமத்திரித்துவம் என்பதற்கு ஒரே சர்வேசுரன் மூன்று ஆட்களாய் இருக்கிறார் என்று அர்த்தமாம்.


7. இந்த மூன்று தேவ ஆட்களும் ஒருவருக்கொருவர் மெய்யாகவே தனித்துவமுள்ளவர்களாய் இருக்கிறார்களா?

இந்த மூன்று தேவ ஆட்களும் ஒருவருக்கொருவர் மெய்யாகவே தனித்துவமுள்ளவர்களாய் இருக்கிறார்கள்.


8. இந்த மூன்று தேவ ஆட்களும் ஒருவருக்கொருவர் சரிசமானமாய் இருக்கிறார்களா?

இந்த மூன்று தேவ ஆட்களும் ஏக சர்வேசுரனாய் இருக்கிற படியினாலே ஒருவருக்கொருவர் சரிசமானமாய் இருக்கிறார்கள்.


9. இந்த மூன்று தேவ ஆட்களும் மெய்யாகவே ஒருவருக்கொருவர் தனித்துவம் உள்ளவர்களாயிருந்தாலும், அவர்கள் ஏக சர்வேசுரனாய் இருப்பதெப்படி?

இந்த மூன்று தேவ ஆட்களும் ஒரே தேவ சுபாவமுள்ளவர்களாய் இருப்பதால் மெய்யாகவே ஒருவருக்கொருவர் தனித்துவம் உள்ளவர்களாயிருந்தாலும், ஏக சர்வேசுரனாய் இருக்கிறார்கள்.


10. இந்த மூவரும் ஒருவருக்கொருவர் இப்படி வேறுபட்டிருந்தாலும் எப்படி ஏக சர்வேசுரனாயிருக்கிறார்கள் என்பதை நாம் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியுமா?

தமத்திரித்துவ சத்தியமானது ஒரு பரம இரகசியமாக இருக்கிற படியினாலே, இந்த மூவரும் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் வேறுபட்டிருந்தாலும் எப்படி ஏக சர்வேசுரனாயிருக்கிறார்கள் என்பதை நாம் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது.