ஓ சர்வ நன்மைத்தனமுள்ளவராகிய சர்வேசுரா, என் பிறப்பின் கணத்திலிருந்து தேவரீர் என் மீது பொழிந்தருளிய சகல நன்மைகளுக்காகவும், விசேஷமாக, உறுதிப் பூசுதலாகிய தேவத்திரவிய அனுமானத்தினால் இப்போது தனியே பிரித்தெடுக்கப்பட்டு, உமக்கு அர்ப்பணிக்கப்பட இருக்கிறவர்களுள் ஒருவனாக என்னை ஏற்றுக் கொள்ளத் தயை செய்ததற்காகவும் எனது மனமுவந்த, மிகத் தாழ்ச்சியுள்ள நன்றியை ஏற்றுக் கொள்வீராக. தேவரீர் உமது கொடைகளில் எல்லாம் மிகச் சிறந்தவற்றை எனக்குத் தருகிறீர். சேசுக்கிறீஸ்து நாதருடைய போர் வீரனுக்குரிய விசேஷ குணத்தால் என் ஆத்துமத்தைத் தேவரீர் முத்திரையிட இருக்கிறீர். உமது இஸ்பிரீத்து சாந்து எனக்குள் தொடர்ந்து வாசஞ் செய்யும்படி, அவரை என்மீது அனுப்பியருள இருக்கிறீர். ஆ என் இரக்கமுள்ள நல்ல தகப்பனே, உமது நேசத்தின் இந்த விசேஷ அடையாளங்களால் தூண்டப்பட்டு, இத்துணை மேலானதொரு விருந்தாளியின் இல்லிடமாக என் இருதயம் ஆகும்படியாக, அதற்கு அவசியமாக சகல நற்குணங்களையும் தேவரீர்தாமே என் இருதயத்தில் ஊற்றியருள வேண்டுமென்று உம்மை மன்றாடத் துணிகிறேன். ஐயோ, என் சர்வேசுரா இப்போது என் ஆத்துமத்தின் உயிர்த்துடிப்பாய் இருக்கக் கூடிய விசுவாசம், நம்பிக்கை, தாழ்ச்சி பக்திப் பற்றுதலாகிய உணர்ச்சிகள் என்னிடத்தில் காணப்படவில்லையே! ஆனாலும் உமக்கு எல்லாம் கூடும். அவற்றையெல்லாம் எனக்குத் தருவதாக தேவரீர் வாக்களித்திருக்கிறீர். உமது தகுதியற்ற குழந்தையாகிய என் மீது நீர் பொழிந்தருள ஆசிக்கிற வரப்பிரசாதங்களுக்குத் தடையாய் இருக்கக் கூடிய ஒவ்வொரு பாவத்தையும், ஒவ்வொரு குறைவுள்ள இச்சைகளையும், என் ஜீவிய கால முழுவதும் நான் செய்த சகல பாவங்களையும் அடியேன் மெய்யாகவே அருவருத்துத் தள்ளுகிறேன். ஓ என் சர்வேசுரா, உமது நேச குமாரனுடைய திருமரணம் மற்றும் திருப் பாடுகளின் எல்லையற்ற பேறுபலன்களைக் கொண்டு என் ஆத்துமத்தை எல்லாக் கறைகளினின்றும் சுத்திகரித்தருளும். என் வாழ்நாள் முழுவதும் தேவரீருக்குப் பிரமாணிக்கமாக ஊழியஞ் செய்வதாக மனமுவந்து பிரதிக்கினை செய்கிறேன். ஆனாலும் நான் ஆசிக்கிறதையும் பிரதிக்கினை செய்கிறதையும் நிறைவேற்ற எனக்குப் பலமில்லையே, சுவாமி, ஆதலால், அப்போஸ்தலர்களைப் போல என் மீதும் உமது இஸ்பிரீத்து சாந்துவின் வரப்பிரசாதங்களைப் பொழிந்தருளும். உன்னதத்திலிருந்து வரும் தேவபலத்தால் என்னை நிரப்பியருளும். இவ்வாறு உமது திருச்சுதனுடைய சீடனென்று என்னை நான் எண்பிக்கத் தக்கதாக தைரியத்தாலும், பிரதிக்கினையாலும் நான் தூண்டப் படுவேனாக. இந்த மிக விலையேறப் பெற்ற கொடையைப் பெற்றுக் கொள்ள நான் வெகுவாக ஆசிக்கிறேன். ஆனாலும் என் சர்வேசுரா, என் இந்த ஆசையை மேலும் பலமுள்ளதாகவும், ஏக்கமுள்ளதாகவும் ஆக்கியருளும். பெந்தேகோஸ்தே திருநாளன்று மகா பரிசுத்த கன்னி மாமரியின் மாசற்ற இருதயத்திலும், பரிசுத்த அப்போஸ்தலர்களின் இருதயங்களிலும் விளங்கிய அதிவேகமுள்ள ஆசைகளை என் சார்பாக ஏற்றுக் கொள்ளவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். அவர்களுடைய உத்தமமான பண்புகள் என் சகல குறைபாடுகளையும் நிவிர்த்தி செய்வனவாக. இந்த மன்றாட்டுக்களை யெல்லாம் தேவரீரோடு இஸ்பிரீத்து சாந்துவின் ஐக்கியத்தில் என்றென்றும் ஜீவிக்கிறவரும் இராச்சியபாரம் பண்ணுகிறவருமாயிருக்கிற எங்கள் ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்து நாதர் வழியாக உம்மிடம் கெஞ்சி மன்றாடுகிறேன். ஆமென்.