முதற் கணித ஜெபம்

(ஒரு கணித ஜெபம், இடைவெளியின்றி மற்றொரு கணித ஜெபத்தைத் தொடர்ந்து சொல்லப் படும் சந்தர்ப்பங்களில், அவற்றுக்கிடையே அருள் நிறை மந்திரத்தை ஒரு முறை மட்டும் சொல்ல வேண்டும்.)

முதல்: அருள் நிறைந்த மரியாயே, வாழ்க. கர்த்தர் உம்முடனே!

பதில்: பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப் பட்டவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய சேசுவும் ஆசீர்வதிக்கப் பட்டவரே.

முதல்: சர்வேசுரா, எங்களுக்கு உதவியாக வாரும்.

பதில்: கர்த்தாவே, எங்களுக்கு ஒத்தாசை செய்யத் தீவரியும்.

முதல்: பிதாவுக்கும் சுதனுக்கும் இஸ்பிரீத்து சாந்துவுக்கும் மகிமை உண்டாவதாக.

பதில்: ஆதியிலிருந்தது போல இப்பொழுதும், எப்பொழுதும், என்றென்றும் இருப்பதாக. அல்லேலூயா.  ஆமென்.

(செப்துவாஜெசிமா ஞாயிறு முதல் உயிர்ப்பு ஞாயிறு வரை அல்லேலூயாவுக்குப் பதிலாக, நித்திய மகிமைக்கு இராஜாவான ஆண்டவரே, உமக்கே தோத்திரமுண்டாகக் கடவது என்று சொல்லவும்.)

கீதம்

வரப்ரசாதத்தின் கர்த்தாவே! என் இனிய இரட்சகரே! 

மாசற்ற கன்னிகையிடமிருந்து அழியக் கூடிய எங்கள் மனுவுருவெடுத்த உமது திருமாம்சம் தெய்வீகமானது என்று நினைத்தருளும்.

ஓ மரியாயே! வரப்ரசாதங்கள் அனைத்திற்கும் மாதாவே! எம் இனத்தார்க்கு இரக்கத்தின் தாயாரே! பசாசின் வல்லமையிலிருந்து இப்பொழுது எங்களைப் பாதுகாத்தருளும்.  எங்கள் மரண நேரத்தில் எங்களைச் சுதந்தரித்துக்  கொள்ளும்.

ஓ ஆண்டவரே! எல்லா மகிமையும் உமக்கே உண்டாவதாக!  பரிசுத்த கன்னிகையின் சுதனாய் அவதரித்தவர் சகலராலும் ஆராதிக்கப் படுவாராக. மேலும் அவர் பிதாவோடும், தேற்றுகிறவரோடும் சதாகாலமும் ஒரே ஸ்துதி புகழ்ச்சியைப் பெற்றுக் கொள்வாராக.  ஆமென்.